இதில் சொத்தை வாரிசுகளுக்கு வழங்க உயில் மட்டுமே வழியாக பார்க்கப்பட்டது. தற்போது, உரிமையாளர் செட்டில்மென்ட் பத்திரம் வாயிலாகவும் சொத்தை வாரிசுகளுக்கு வழங்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.
உரிமையாளர்கள் உயிருடன் இருக்கும் போதே அவரது சொத்துக்களை வாரிசுகளுக்கு வழங்க உயில் எழுதுவது சரியான நடைமுறை தான். ஆனால், சில இடங்களில் உயில் எழுதுவது தொடர்பாக மக்களிடம் குழப்பம் நிலவுகிறது.
குறிப்பாக, ஒருவர் உயில் எழுதிவிட்டால் அவர் இறந்து விடுவார் என்ற கருத்தை நம்புவோர், உயில் எழுதவே அச்சப்படுகின்றனர். இது கற்பனையில் உருவாகி பரவிவரும் கருத்து மட்டுமே.
உயில் எழுதிய அனைவரும் இறந்து இருந்தால், அது பெரிய பிரச்னையை ஏற்படுத்தி இருக்கும். ஆனால், விழிப்புணர்வு இல்லாததால், கிராமங்களில் இது தொடர்பான மனதளவில் ஏற்படும் பாதிப்பு பல்வேறு சொத்து பிரச்னைகளுக்கு காரணமாக அமைகிறது.
அதே நேரம், தன் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும், வாரிசுகளுக்கு வழங்கிய பின் தனிமைபடுத்தப்பட்டு விடுவோமோ என்ற பயமும் உரிமையாளர்களை வாட்டி வதைக்கிறது. நம்மிடம் சொத்து இருக்கிறது என்பதற்காக வாரிசுகள் இறுதி வரை பார்த்துக் கொள்வார்கள்.
சொத்து இல்லாத நிலையில், எஞ்சிய வாழ்நாளை கடத்துவதில் பல்வேறு சிக்கல் ஏற்படும் என்பதும் உரிமையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, உயில் எழுதும் போது, யார் அந்த உரிமையாளரை இறுதி வரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு நிபந்தனை விதிக்கலாம்.
ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் உயில் எழுதப்படும் நிலையில், அது பிள்ளைகளுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வதே உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு. இதையும் மீறி பிள்ளைகள் உண்மை நிலையை தெரிந்துக்கொண்டால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள் ஏற்படலாம்.
இது போன்ற பிரச்னைகளை கவனத்தில் வைத்து உரிமையாளர்கள் உயில் எழுதுவதில் முறையாக நடந்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.