கட்டுமான பணியில் சிக்கல் ஏற்பட்டால், அமைதியாக தீர்க்க உக்திகள் உண்டு
புதிதாக வீடு வாங்குவோர், கட்டுவோர், அதற்கான சரியான நிறுவனத்தை தேர்வு செய்து பணிகளை ஒப்படைப்பது வழக்கம். பல இடங்களில் விசாரித்து, அவர்களின் முந்தைய பணிகளை பார்வையிட்டு அதன்பின் தான் தேர்ந்தெடுக்கிறோம். இதில், நீங்கள் தேர்வு செய்த நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பதை கவனிக்க வேண்டியது உரிமையாளர் பொறுப்பு.
கட்டுமான ஒப்பந்தம் போட்டு பணிகளை ஒப்படைத்து விட்டோம். இனி அனைத்துமே ஒப்பந்ததாரர்களின் வேலை, பணம் கொடுப்பது மட்டுமே நம் வேலை என ஒதுங்கி கொள்ள முடியாது. ஆரம்பத்தில் பேசி திட்டமிடுவதுடன் அனைத்தும் முடிந்து விடாது. இதில், ஒவ்வொரு நிலையிலும் உரிமையாளருக்கு பொறுப்பு உள்ளது.
கட்டுமான ஒப்பந்தப்படி, பில்டர் செயல்படுகிறாரா என்பதை கண்காணிப்பதுடன், உரிமையாளர்கள் ஒதுங்கி விடக் கூடாது. கட்டுமான பணியின் போது, எதிர்பாராத வகையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில், உரிமையாளரின் ஒத்துழைப்பு பில்டர்களுக்கு அவசியமாகிறது.
அரசு சம்பந்தப்பட்ட வேலைகள், மின், குடிநீர் இணைப்பு வேலைகள், மூலப்பொருட்கள் வாங்குவது, விலை குறைவான டீலர்களை கண்டுப்பிடிப்பது என ஆயிரம் வேலைகளிலும் கவனம் வைக்க வேண்டும்.
வீடு கட்டும் போது, மணல், செங்கல், சிமென்ட் போன்ற பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கு பில்டர் என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டும். ஒப்பந்தம் போட்டு பணம் கொடுத்து விட்டோம் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.
எதிர்பாராத வகையில் ஏற்படும் இது போன்ற பிரச்னைகளில், பில்டர் தனித்து செயல்படும் போது, பல தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதில், சில தவிர்க்க முடியாமல் கூட போகலாம். உங்களுக்கு வாக்கு கொடுத்து விட்டோம் என்பதற்காக தரம் இல்லாத பொருட்களை பயன்படுத்தி குறிப்பிட்ட கால அவகாசத்தில் பணிகளை முடித்து கொடுக்கலாம். பணியாளர்களின் கோரிக்கைகளை பில்டர் கவனிக்காமல் விட்டு விட அதன் பிரதிபலிப்பாய் செய்யும் வேலைகளில் சுணக்கம் ஏற்படலாம்.
இது போன்ற சூழலில் பில்டரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிக்க வேண்டும். கவனிக்கலாம் கண்காணிக்கக்கூடாது. இதன் அழுத்தம் பில்டரை ஒழுங்காய் பணிகளை முடிக்க விடாது. என்ன பொருளுக்கு, எதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து செயல்பட வேண்டும். இத்தகைய சூழலில், எப்படியாவது பணிகளை முடிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பது நமக்கு நாமே கெடுதல் செய்து கொள்வது போன்றது.
அத்தியாவசிய கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில் பில்டருடன் பேசி தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைக்கலாம். அந்த இடைப்பட்ட காலத்தில், கட்டடத்தில், வேறு பணிகள் இருந்தால் அதை பார்க்கலாம்.
இந்த வேலை முடிந்த பின்பு தான் அடுத்த வேலை என்றில்லாமல் நேரம் வீணாக்காமல் வேலையை குறிப்பிட்டு தொடரச் செய்யலாம்.
அதே போன்று, புயல், மழை போன்ற காரணங்களால் தடை ஏற்படும் போது அதை புரிந்து சரியாக செயல்பட வேண்டும். மழை வந்தால் என்ன, எனக்கு குறிப்பிட்ட காலத்தில் வேலையை முடித்து கொடு என்று நெருக்கடி கொடுத்தால் தரமற்ற கட்டடங்களே கிடைக்கும். இது பெரும்பாலானோர் செய்யும் தவறு.
இது போன்ற பிரச்னைகளை சரியாக புரிந்து, பில்டருக்கு நியாயமான ஒத்துழைப்பு கொடுத்தால், தரமான வீட்டை பெறலாம் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment