ஆபத்தான தொழில்கள் நடக்கும் இடங்களில் வீடு, மனை வாங்காதீர்!
பொதுவாக வீடு, மனை வாங்கும் போது அதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பகுதி குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். விற்பவர், தரகர்கள் வாய் வழியாக வரும் செய்திகளில் அவர்களது நோக்கம் பிரதானமாக இருக்கும்.
எனவே, அதை அப்படியே ஏற்பது என்பதைவிட உண்மைநிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு புதிய மனைப்பிரிவு, குடியிருப்பு திட்டம் குறித்து விசாரிக்கும் போது, விற்பனை நிறுவனங்கள் கூறுவதில் பெரும்பாலான விஷயங்கள் அவர்களுக்கு சாதகமான விஷயங்களாகவே இருக்கும்.
இதை அப்படியே நம்பினால், வீடு, மனை வாங்குவோர் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, தொழிற்பேட்டை பக்கத்திலேயே மனைப்பிரிவு இருக்கிறது என்பார்கள்.
நாமும் பரவாயில்லை, வேலைக்கு விரைவாக சென்று வரலாம் என்று நினைத்து வாங்கிவிடுவோம். அங்கு குடியேறிய பின் தான் தொழிற்பேட்டையில் இருந்து வரும் பிரச்னைகள் தெரியவரும்.
குறிப்பாக, நீங்கள் வீடு வாங்கும் பகுதி எத்தகைய நிலையில் உள்ளது என்பதை தன்னிச்சையாக ஆய்வு செய்ய வேண்டும். அதிலும், அதன் அருகில் தொழில் நிறுவனங்கள் இருந்தால் அதன் தன்மை, மாசு ஏற்படுத்துமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சில இடங்களில், குடியிருப்பு பகுதியாக இருக்கும், ஆனால், வீட்டிலேயே வைத்து குறுந்தொழில் செய்வார்கள். இதில் எத்தகைய தொழில் நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
குறிப்பாக, அக்கம் பக்கத்து வீடுகளில் குறுந்தொழில்கள் நடக்கின்றன என்றால் அது குறித்த கூடுதல் ஆய்வு தேவை. உள்ளூர் நுகர்வோரை சார்ந்த தொழில்கள் என்றால் அதில் எத்தகைய அச்சமும் தேவையில்லை.
அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் நடக்கும் குறுந்தொழில் பெரிய நிறுவனங்களை சார்ந்தது என்றால், அதனால் மாசு ஏற்படுமா என்பதை ஆராய வேண்டும். இதில் தோல் தொழில், சாயத் தொழில், மருந்து தயாரிப்பு போன்ற தொழில்களில் வெளிப்படும் மாசு உடனடியாக தெரியாது.
இது போன்ற விஷயங்களில், அக்கம் பக்கத்து வீட்டுக்காரரை வெளியேற்ற முடியாது. எனவே, வீடு வாங்கும் நிலையிலேயே கவனமாக இருந்து இப்பகுதிகளில் குடியேறுவதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.