கட்டடங்களில் மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள்!
தனி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் என எதை வேண்டுமானாலும் கட்டலாம். எந்த வகை கட்டடம் காட்டப்படுகிறது என்பதைவிட, அது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளது என்பதும் மிக முக்கியம்.
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் குறிப்பாக கோடை காலங்களில் தீ விபத்துகள் ஏற்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பெரும்பாலான தீ விபத்துகளுக்கு பயன் பாட்டு நிலையில் ஏற்படும் குறைபாடுகளே காரணமாக அமைந்துள்ளன.
அதிலும், பெரும்பாலான பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்ட பின் நடத்தப்பட்ட விசாரணையில், மின் கசிவு தான் விபத்துக்கு காரணமாக உள்ளது. ஒயர்களில் மின்சாரம் செல்லும் வழியில் ஏற்படும் தடைகளே கசிவுக்கு முதன்மை காரணமாக உள்ளன. கட்டடங்களில் 'ஒயரிங்' பணியில் கூடுதல் கவனத்தை செலுத்தினால் மின்சார கசிவுகளை தவிர்க்கலாம். இதற்கு முதலில், ஒயரிங் பணிக்கான கேபிள்களை வாங்குவதில் தரத்தை துல்லியமாக பார்க்க வேண்டும். 'விலை குறைவாக கிடைக்கிறதே'.... என்று பிரபல நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்படும் போலி ஒயர்களை வாங்காதீர்கள்.
எந்த பணிக்கு எத்தகைய ஒயர்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.
அதிக குறுக்களவு ஒயர்களை பயன்படுத்த வேண்டிய இடத்தில் குறுக்களவு குறைந்த ஒயர்களை தற்காலிக ஏற்பாடாக கூட பயன்படுத்த கூடாது. இவ்வாறு குறுக்களவு வேறுபாடு ஏற்படும் இடங்களில் தான் மின்னோட்டம் தடைபடும்.
இவ்வாறு தடைகள் ஏற்படும் போது, அங்கு ஒயரின் மேற்புற உறை எளிதில் சேதமடையும் நிலையில் இருந்தால் தீ விபத்து ஏற்படும். எனவே, ஒயர்களை வாங்கும் போது அதன் மேற்புற உறை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
இதில் தீ விபத்துகளை சமாளிக்கும் திறன் கொண்ட கேபிள்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. இது போன்ற கேபிள்களை வாங்குவது நல்லது. ஆனால், அதில் சரியான பொருட்களை வாங்குவது அவசியம்.
குறிப்பாக, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் 'மெயின் சுவிட்சை ஆப்' செய்துவிட்டு செல்வது நல்லது. அதே போன்று, ஏசி, பிரிட்ஜ் போன்ற சாதனங்களுக்கு உரிய 'ஸ்டெபிளைசர்' களை பயன்படுத்துவது அவசியம் என்கின்றனர் மின்சார வாரிய அதிகாரிகள்.