Friday, March 17, 2023

வாடகைதாரர்களுக்குள் ஏற்படும் வசதி உரிமை பிரச்னைகள் என்ன?

 

வாடகைதாரர்களுக்குள் ஏற்படும் வசதி உரிமை பிரச்னைகள் என்ன?

    வீட்டை வாடகைக்கு விடுவது மற்றும் நிலத்தை குத்தகைக்கு விடுவதில் சில வித்தியாசமான பிரச்னைகள் ஏற்படும்.

    ஒரு வீட்டை ஒரே நபருக்கு வாடகைக்கு விடும் போது, அவருக்கும், உரிமையாளருக்கும் இடையே வசதி உரிமை சார்ந்த  பிரச்னைகள் வரலாம்.

    இத்தகைய பிரச்னைகள் பெரும்பாலும், பேச்சுவார்த்தை நிலையிலேயே தீர்க்கப்பட்டு விடும்.  சில சமயங்களில், பிரச்னைகள் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்து விடும்.

     நிலத்தை குத்தகை விடுவதிலும் இதே போன்ற பிரச்னைகள் ஏற்படும்.  குறிப்பாக, ஒரு வீட்டை அல்லது நிலத்தை இன்னொருவருக்கு வாடகைக்கு பயன்படுத்த அனுமதிக்கும் போது, அவர் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு உரிமையாளர்கள் கட்டுப்பாடுகள் விதிப்பர்.

     இதில், வாடகை அல்லது குத்தகை முறையில் நிலத்தை பெற்றவர் அதை பயன்படுத்துவதற்கான முழு உரிமை அளிக்கப்பட வேண்டும்.  உதாரணமாக வீட்டை வாடகைக்கு எடுத்தவர் அதற்கான எடுத்தவர் அதற்கான நடைபாதை உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.

       அந்த வீட்டுக்கான பயன்பாட்டு உரிமை முழுவதும் அவருக்கு அளிக்கப்பட வேண்டும்.  இதில் ஒன்றுக்கு மேற்பட்ட வாடகைதாரர்கள் இருக்கும் நிலையில் ஒருவர் இன்னொருவரின் வசதி உரிமையை பறிக்கும் வகையில் நடக்க கூடாது.  ஒரே கட்டடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு வீட்டுக்கும் வசதியுரிமை வரையறுக்கப்பட்டு இருக்கும்.  இந்த உரிமைகளை ஒவ்வொரு வாடகைதாரரும் புரிந்து செயல்பட வேண்டும்.

        ஆனால், பல இடங்களில் நடைபாதைகளை பயன்படுத்துவது, வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்துவது சார்ந்த வசதியுரிமை பிரச்னைகள் எழும்.  சாதாரணமாக ஒருவரின் கருத்தை இன்னொருவர் உணர்ந்து பேசினாலே இது போன்ற பிரச்னைகள் முடிந்து விடும்.

         ஆனால், ஒருவரின் உணர்வை இன்னொருவர் புரிந்து கொள்ளாத நிலையில், இது போன்ற விஷயங்கள் வழக்கு வரை சென்று விடுகின்றன.

         இதில் கட்டட உரிமையாளர்கள் தங்களுக்கான நிலையில் இருந்து மட்டுமே செயல்பட முடியும்.  கட்டட பயன்பாட்டில், வசதியுரிமை குறித்த விழிப்புணர்வு இல்லாததே மக்களிடம் இது போன்ற பிரச்னைகள் வர காரணமாக உள்ளது.  வீட்டின் உரிமையாளருக்கும், வாடகை தரருக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளை வாடகை அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

          வாடகை அதிகாரியின் உத்தரவுக்கு மாறாகத் தொடர்ந்து பிரச்னைகள் நீடித்தால், வீட்டின் உரிமையாளரோ, வாடகைதாரரோ, வாடகை நீதிமன்றங்களையோ, வாடகை தீர்ப்பாயங்களையோ அணுகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

           வீட்டு வாடகையை பொதுவாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம்.  அதே நேரத்தில், வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தாலோ, வாடகையை அதிகரிக்க எந்தத் தடையும் இல்லை.

            புதிதாக கட்டிய வீட்டுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை.  வீட்டின் உரிமையாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொள்ளலாம்.

            அதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிகள் குறையும் போது, வாடகையைக் குறைக்கச் சொல்லி, வீட்டு உரிமையாளரை குடித்தனக்காரர் கேட்கலாம்.

             எனவே, வழக்கறிஞர் வழிகாட்டுதல் அடிப்படையில் வசதியுரிமை குறித்த விபரங்களை அறிந்து, அதன் அடிப்படையில் பிரச்னைகளை தீர்க்க உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

கட்டடங்களில் மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள்!

 கட்டடங்களில் மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள்!

    

    தனி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் என எதை வேண்டுமானாலும் கட்டலாம்.  எந்த வகை கட்டடம் காட்டப்படுகிறது என்பதைவிட, அது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளது என்பதும் மிக முக்கியம்.

    தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் குறிப்பாக கோடை காலங்களில் தீ விபத்துகள் ஏற்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.  பெரும்பாலான தீ விபத்துகளுக்கு பயன் பாட்டு நிலையில் ஏற்படும் குறைபாடுகளே காரணமாக அமைந்துள்ளன.



     அதிலும், பெரும்பாலான பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்ட பின் நடத்தப்பட்ட விசாரணையில், மின் கசிவு தான் விபத்துக்கு காரணமாக உள்ளது.  ஒயர்களில் மின்சாரம் செல்லும் வழியில் ஏற்படும் தடைகளே கசிவுக்கு முதன்மை காரணமாக உள்ளன.  கட்டடங்களில் 'ஒயரிங்' பணியில் கூடுதல் கவனத்தை செலுத்தினால் மின்சார கசிவுகளை தவிர்க்கலாம்.  இதற்கு முதலில், ஒயரிங் பணிக்கான கேபிள்களை வாங்குவதில் தரத்தை துல்லியமாக பார்க்க வேண்டும்.  'விலை குறைவாக கிடைக்கிறதே'.... என்று பிரபல நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்படும் போலி ஒயர்களை வாங்காதீர்கள்.

    எந்த பணிக்கு எத்தகைய ஒயர்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.

    அதிக குறுக்களவு ஒயர்களை பயன்படுத்த வேண்டிய இடத்தில் குறுக்களவு குறைந்த ஒயர்களை தற்காலிக ஏற்பாடாக கூட பயன்படுத்த கூடாது.  இவ்வாறு குறுக்களவு வேறுபாடு ஏற்படும் இடங்களில் தான் மின்னோட்டம் தடைபடும்.

     இவ்வாறு தடைகள் ஏற்படும் போது, அங்கு ஒயரின் மேற்புற உறை எளிதில் சேதமடையும் நிலையில் இருந்தால் தீ விபத்து ஏற்படும்.  எனவே, ஒயர்களை வாங்கும் போது அதன் மேற்புற உறை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

    இதில் தீ விபத்துகளை சமாளிக்கும் திறன் கொண்ட கேபிள்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.  இது போன்ற கேபிள்களை வாங்குவது நல்லது.  ஆனால், அதில் சரியான பொருட்களை வாங்குவது அவசியம்.

    குறிப்பாக, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் 'மெயின் சுவிட்சை ஆப்' செய்துவிட்டு செல்வது நல்லது.  அதே போன்று, ஏசி, பிரிட்ஜ் போன்ற சாதனங்களுக்கு உரிய 'ஸ்டெபிளைசர்' களை பயன்படுத்துவது அவசியம் என்கின்றனர் மின்சார வாரிய அதிகாரிகள்.


அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு செயற்கை சீலிங் அமைப்பது ஏன்?

 

அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு செயற்கை சீலிங் அமைப்பது ஏன்?

    வீடு கட்டுவதில் காலம் தோறும் பல்வேறு மாற்றங்கள் வருகின்றனஇதில் அந்தந்த காலத்து சூழலுக்கு ஏற்ப புதிய மாற்றங்கள் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

    பழைய நிலை மாறி செய்யப்படும் பல பாரம்பரிய கட்டுமான பணி வேலைகளுக்கு இப்போது அத்தனை மவுசு இல்லையென்றே சொல்ல தோன்றுகிறது.  புதுப்புது நவீன தொழிற்நுட்பங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    இதில், நம் வீட்டில் எத்தகைய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதில், நாம் கவனமாக இருக்க வேண்டும்.  சரியான சமயத்தில் உரிய முடிவுகள் எடுப்பதில், வீட்டு உரிமையாளர்களுக்கு தான் பொறுப்பும், கவனமும் அதிகம்.  எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என கட்டுமான இஞ்சினியர்களை கைக்காட்டி விட்டுச் செல்ல முடியாது.  சமீபகாலமாக வீடு கட்டுவதில், உள் அலங்காரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

    முக்கியமாய் எந்தெந்தப் பொருட்களை எங்கெங்கு பயன்படுத்த வேண்டும், எந்த அளவில் அது இருக்க வேண்டும் என்பதிலிருந்து அனைத்து உள் அலங்கார வேளைகளில் உரிமையாளரின் தலையீடும், வழிக்காட்டுதலும் இருக்கிறது.

    இதன் ஒரு வழிமுறையாக, வீடுகளுக்குள் செயற்கை 'சீலிங்' அமைக்கும் பணி மிகப் பெரியதாய் பார்க்கப்படுகிறது.

     வீடுகளில் தரையில் இருந்து மேற்கூரை வரையிலான உயரத்தை குறைத்து காட்ட பலரும் விரும்புகின்றனர்.  பொதுவாக, வீட்டின் உட்புற உயரம் அதிகமாக இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் மக்கள் விரும்பினர்.  அப்போது தான் ஊஞ்சல், அலமாரி, தொங்கும் விளக்குகள், மின்விசிறி என, பல பயன்பாடு அதில் அமைக்க முடியும் என மக்கள் நம்பினர்.  ஆனால், பயன்பாடு ரீதியாகவும், காற்றோட்டத்தை உறுதிபடுத்தவும் உயரம் குறைவான உள்கூரையே அத்தியாவசியமானதாக உள்ளது.

      ஆனால், காலப்போக்கில் அதிக தளங்களை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டின் உட்புற உயரம் கட்டுமான நிலையிலேயே குறைக்கப்படுகிறது.  இருப்பினும், ஒன்பது அடி வரை வீடுகளின் உட்புற உயரம் வரையறுக்கப்படுகிறது.  இதில் 'ஏசி' உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துவதால், உயரத்தை குறைக்க பலரும் முற்படுகின்றனர்.  இதற்கான வழிமுறைகளை பொறியாளர் மேற்பார்வையில் கடை பிடிக்க வேண்டும்.  இதற்கு செயற்கை சீலிங் அமைப்பது வழக்கமாகி உள்ளது.  இது தொடர்பான பணியில் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும்.

     வீட்டின் உயரத்தை குறைத்து காட்ட செயற்கை சீலிங்குகள் வெகுவாக பயன்படுகின்றன.  இதில் எத்தகைய பொருட்களை பயன்படுத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

     தரமான பொருட்களை பயன்படுத்தி செயற்கை சீலிங்குகளை அமைக்க வேண்டும்.  இதில், அதன் வெளிப்புற தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பல்வேறு மாதிரிகளை பயன்படுத்தி ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கலாம்.

    அசல் சிமென்ட் வேலைபாடு செயற்கை சீலிங் அமைத்து விட்டோம் என்று அமைதியாக இருந்து விட முடியாது.

    அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக பராமரிக்க வேண்டும் என்கின்றனர் உள் அலங்கார வல்லுனர்கள்.

Wednesday, March 15, 2023

பாகப்பிரிவினை வாயிலாக பெற்ற நிலத்துக்கு பட்டா மாற்றம் அவசியம்!

 பாகப்பிரிவினை வாயிலாக பெற்ற நிலத்துக்கு பட்டா மாற்றம் அவசியம்!

           நம்மில் பலரும் பரம்பரை வழியாக சொத்து கள் பெற்று இருப்போம்.  இவ்வாறு சொத்துக்கள் பெறுவோர், அதற்கான பட்டாவை மாற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை.

          குறிப்பாக, பரம்பரை சொத்துக்களை பாகப்பிரிவினை வாயிலாக பங்கிட்டுக்கொள்வோர், பட்டா விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை.  பாகப்பிரிவினை முடிந்ததும் அதற்கான பத்திரத்தை முறையாக பதிவு செய்கின்றனர்.



           அதன் பின், அந்த சொத்துக்கு பட்டா எந்த நிலையில் உள்ளது, அதை நம் பெயருக்கு மாற்றுவது எப்படி என்பதில் பலரும் அலட்சியம் காட்டுகின்றனர்.  பொதுவாக, பரம்பரை சொத்துக்கள் ஒருவரின் பெயரில் இருந்து பலரது பெயருக்கு பங்கிடப்படும்.

            உதாரணமாக, கந்தசாமி என்பவரின் பெயரில், 10 ஏக்கர் நிலம் இருக்கிறது.  பட்டாவும் அவர் பெயரில் தெளிவாக இருக்கிறது.  அவரது மறைவுக்கு பின் வாரிசுகள் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்துக்கொள்கின்றனர்.

           பங்கிடும் பணிகள் சுமுகமாக முடிந்துவிடுகின்றன.  அதற்கான பத்திரங்களும் முறையாக பதிவு செய்யப்படுகின்றன.  ஆனால், பட்டா கந்தசாமி பெயரிலேயே தொடர்கிறது.

            தந்தை பெயரில் தானே பட்டா உள்ளது.  அதை யார் என்ன செய்துவிட முடியும் என்று வாரிசுகள் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர்.

             சில ஆண்டுகள் கழித்து, பாகம் பெற்றவர்களில் ஒருவர் தன் பங்கை வெளியாருக்கு விற்க நினைக்கிறார்.  அதை வாங்குபவர் வங்கிக்கடனுக்கு செல்கிறார்.

            அப்போது விற்பவர் பெயரில் பட்டா இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.  தனி பட்டாவாக உள்ளது, பாகம் பிரித்தவர்கள், பட்டாவையும் பிரிக்காமல் விட்டுவிட்டனர்.

             பட்டாவையும் பிரித்து கொண்டு வந்தால் தான் கடன் கிடைக்கும் என்ற சூழல் ஏற்படுகிறது.  இதன் பின், விற்பவர் தாலுகா அலுவலகம் சென்று, பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால், பாகப்பிரிவினை செய்தவர்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

             இது போன்ற அலைச்சல்களை தவிர்க்க, பாகப்பிரிவினை செய்த உடனே பட்டாவில் பெயர் மற்றம் செய்துவிட வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.


Why Do Redevelopment Projects Get Stuck

  Why Do Redevelopment Projects Get Stuck ? Let’s understand the challenges that often impede the progress of redevelopment projects and unc...