பாகப்பிரிவினை வாயிலாக பெற்ற நிலத்துக்கு பட்டா மாற்றம் அவசியம்!
நம்மில் பலரும் பரம்பரை வழியாக சொத்து கள் பெற்று இருப்போம். இவ்வாறு சொத்துக்கள் பெறுவோர், அதற்கான பட்டாவை மாற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை.
குறிப்பாக, பரம்பரை சொத்துக்களை பாகப்பிரிவினை வாயிலாக பங்கிட்டுக்கொள்வோர், பட்டா விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. பாகப்பிரிவினை முடிந்ததும் அதற்கான பத்திரத்தை முறையாக பதிவு செய்கின்றனர்.
அதன் பின், அந்த சொத்துக்கு பட்டா எந்த நிலையில் உள்ளது, அதை நம் பெயருக்கு மாற்றுவது எப்படி என்பதில் பலரும் அலட்சியம் காட்டுகின்றனர். பொதுவாக, பரம்பரை சொத்துக்கள் ஒருவரின் பெயரில் இருந்து பலரது பெயருக்கு பங்கிடப்படும்.
உதாரணமாக, கந்தசாமி என்பவரின் பெயரில், 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. பட்டாவும் அவர் பெயரில் தெளிவாக இருக்கிறது. அவரது மறைவுக்கு பின் வாரிசுகள் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்துக்கொள்கின்றனர்.
பங்கிடும் பணிகள் சுமுகமாக முடிந்துவிடுகின்றன. அதற்கான பத்திரங்களும் முறையாக பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், பட்டா கந்தசாமி பெயரிலேயே தொடர்கிறது.
தந்தை பெயரில் தானே பட்டா உள்ளது. அதை யார் என்ன செய்துவிட முடியும் என்று வாரிசுகள் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர்.
சில ஆண்டுகள் கழித்து, பாகம் பெற்றவர்களில் ஒருவர் தன் பங்கை வெளியாருக்கு விற்க நினைக்கிறார். அதை வாங்குபவர் வங்கிக்கடனுக்கு செல்கிறார்.
அப்போது விற்பவர் பெயரில் பட்டா இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தனி பட்டாவாக உள்ளது, பாகம் பிரித்தவர்கள், பட்டாவையும் பிரிக்காமல் விட்டுவிட்டனர்.
பட்டாவையும் பிரித்து கொண்டு வந்தால் தான் கடன் கிடைக்கும் என்ற சூழல் ஏற்படுகிறது. இதன் பின், விற்பவர் தாலுகா அலுவலகம் சென்று, பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால், பாகப்பிரிவினை செய்தவர்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
இது போன்ற அலைச்சல்களை தவிர்க்க, பாகப்பிரிவினை செய்த உடனே பட்டாவில் பெயர் மற்றம் செய்துவிட வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment