ஒருவர் தான் சுயமாக சம்பாதித்த சொத்தை தன் காலத்துக்கு பின் யார் அனுபவிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உரிமை உண்டு. அதே நேரம் அவர் உயில் எதுவும் எழுதாமல் இறந்துவிட்டால், வாரிசுகள் தங்களுக்குள் பாகப் பிரிவினை செய்துக்கொள்ளலாம்.
குறிப்பாக, வங்கியில் கடன் பெற்று ஒரு சொத்தை தந்தை வாங்கியிருப்பார். வங்கியில் கடனுக்கான தவணையை அவர் செலுத்தி வரும் நிலையில் அந்த சொத்தை வாரிசுகள் பெயரில் செட்டில்மென்ட் அல்லது உயில் வாயிலாக கொடுக்க நினைக்கலாம்.
இத்தகைய சூழலில், கடன் கொடுத்த வங்கியின் ஒப்புதல் அத்தியாவசியமாகிறது. இன்றைய சூழலில், வீட்டுக்கடன் வாங்கிய வங்கிகள் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கின்றன.
கடன் நிலுவையில் இருக்கும் சொத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் பெயருக்கு மாற்றுவதால், இதுவரை தவணை செலுத்தி வந்தவர் அதிலிருந்து விடுபடுவார். அதே நேரம், சொத்து பெறும் வாரிசுகளில் யார் மீதியுள்ள தவணைகளை செலுத்துவார்கள் என்பதை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
சிக்கல் இன்றி இந்த நடைமுறையை நிறைவேற்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தாலும், வங்கிகள் இது விஷயத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க தயங்குகின்றன. சொத்து பெறும் வாரிசுகள் கடன் தவணையை செலுத்தும் நிலையில் இருப்பதை வங்கி உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு தகுதியான நிலையில் வாரிசுகள் இல்லை என்றால், அது வங்கிகளுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும். சில சமயங்களில் கடன் வாங்கியவர் இறந்தால், அந்த சொத்து வாரிசுகளை தான் சேரும்.
அப்போதும், நிலுவை தவணைகளை வசூலிப்பதில் வங்கிகளுக்கு சிக்கல் ஏற்படும். இத்தகைய சூழலில், வாரிசுகளின் கடன் பெறும் தகுதியை பார்க்காமல் வங்கிகள் அவர்களிடம் வசூலில் இறங்கும். இறந்த பின் வாரிசுகள் பெயருக்கு சொத்து செல்லும் போது நிலுவையை வசூலிக்க ஒத்துவரும் வங்கிகள், உயிருடன் இருக்கும் உரிமையாளர் விஷயத்தில் வேண்டுமென்றே பிடிவாத போக்குடன் செயல்படுகின்றன.
வங்கிகள் இது விஷயத்தில் வெளிப்படையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்கின்றனர் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
No comments:
Post a Comment