Monday, October 16, 2023

பத்திரத்தில் வீட்டின் பரப்பளவை குறிப்பிடுவதில் குழப்பங்களை தவிருங்கள்!

 பத்திரத்தில் வீட்டின் பரப்பளவை குறிப்பிடுவதில் குழப்பங்களை தவிருங்கள்!
அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கும் போது வீட்டின் பரப்பளவு தான் பத்திரத்தின் அடிப்படை தகவலாக இருக்கும்.  ஆனால், பழைய தனி வீட்டை வாங்குவோர் அதற்கான பத்திரத்தில் வீட்டின் பரப்பளவு தொடர்பான விபரங்களை குறிப்பிடுவதில் குழப்பம் ஏற்படுகிறது.  பொதுவாக, ஒரு சொத்தை வாங்கும் போது அதற்கான கிரைய பத்திரம் முறையாக எழுதப்பட வேண்டும்.
        இதில் இன்னார் பெயரில், அனுபவத்தில் உள்ள இந்த சொத்தை இவர் வாங்குகிறார் என்பதே அடிப்படையாக குறிப்பிடப்படும்.  இதில், இன்ன சொத்து என்பதில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் எது என்பதில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன.  அதிக மதிப்புள்ள பெரிய சொத்து வாங்குவோர் தான் கட்டட மதிப்புகளை குறிப்பிட வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர்.
        ஆனால், பழைய கட்டடமாக உள்ள தனி வீட்டை வாங்குவோர் இத்தகைய மதிப்புகளை குறிப்பிட வேண்டியதில்லை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.  பழைய தனி வீடு விற்பனையில் நிலத்தின் மதிப்பு மட்டுமே பத்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.
        அதில் வீடு ஒன்று உள்ளது என்ற அளவில் மட்டுமே விபரங்கள் சேர்க்கப்படுகின்றன.  அந்த வீடு எதனால் கட்டப்பட்டது, அதன் பரப்பளவு என்ன என்பதை பலரும் பத்திரத்தில் குறிப்பிடாமல் தவிர்க்கின்றனர்.
         இதனால், பத்திரப்பதிவில் கடைசி நிமிடத்தில் புதிய சிக்கல்கள் ஏற்படலாம்.  பத்திர தகவல்களை ஆய்வு செய்யும் சார்-பதிவாளர், அந்த நிலத்தில் உள்ள வீட்டின் மதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றால், பத்திரப்பதிவு தாமதமாகலாம்.
         மேலும், முறையான அங்கீகாரம் இன்றி கட்டப்பட்ட வீட்டின் பரப்பளவை பத்திரத்தில் குறிப்பிட பலரும் தயங்குகின்றனர்.  இவ்வாறு, உண்மையான அளவை தெரிவித்தால், சொத்து வரி மாற்றத்துக்கு செல்லும் போது சிக்கல் வரும் என்று மக்கள் நினைக்கின்றனர்.  இது போன்ற எண்ணங்கள்தான் வீடு வாங்குவோரை பெரிய சிக்கலில் கொண்டு விடும்.
   நீங்கள் வாங்கும் வீட்டின் உண்மையான மதிப்பு பத்திரத்தில் சேர்க்கப்படுவதன் அவசியத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
          முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடமானாலும், அது குறித்து பத்திரத்தில் குறிப்பிட்டால், எதிர்காலத்தில் வரன்முறை செய்யும் போது, உதவியாக இருக்கும் என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர்.  சொத்து வாங்குவதற்கான பத்திர தயாரிப்பில் கட்டடத்தின் அளவுகளை சரியாக குறிப்பிடுவதன் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள். 


No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...