பொதுவாக, தந்தை சம்பாதித்த சொத்துக்கள் பிள்ளைகளுக்கு தான் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால், அதில் யாருக்கு, எவ்வளவு என்பதை அவர்களே முடிவு செய்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறான சூழலை உருவாக்கி விடும்.
சொத்துக்களை வாங்கிச் சேர்ப்பது வரவேற்கத் தக்க விஷயம் என்றாலும், அவற்றை முறையாக ஆவணப்படுத்துவது அதை விட அவசியமானது. அப்போதுதான், அந்த சொத்துக்கள் சென்றடைய வேண்டியவரை சிக்கல் இல்லாமல் எளிதாக சென்றடையும்.
உங்கள் சொத்துக்களுக்கு உயில் எழுதும் முன், சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, உயில் எழுதுவதற்கு தகுதியான சொத்துக்களை முறையாக பட்டியலிட வேண்டும்.
முக்கியமாக, ஒரு சொத்தை வாங்கிய காலம் துவங்கி, பாகப் பிரிவினைக்கு உட்படுத்தும் காலம் வரை எத்தனை ஆண்டுகளாக கையிருப்பில் அந்தச் சொத்து இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அந்தச் சொத்தின் மீது வில்லங்க விவகாரம் இல்லாததை உறுதி செய்ய வில்லங்கச் சான்றிதழைப் பெற வேண்டும்.
எந்த சொத்து எங்கு உள்ளது, சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள், அளவுகள், தற்போதைய நிலவரம், முகவரி ஆகிய விபரங்களை தொகுக்க வேண்டும். இத்துடன், அந்த சொத்து வாயிலாக வருவாய் கிடைத்து வருகிறது என்றால், அதையும் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இதில், குடும்ப தலைவர்கள் நல்ல உடல் நலத்தில் இருக்கும் போதே, சொத்துக்களை உயில் வாயிலாக பகிர்ந்து கொடுப்பது பிற்காலத்தில் பிரச்னைகளை தவிர்க்க உதவும்.
உயில் ஆவணத்தை முறைப்படி எழுதி, வழக்கறிஞரிடம் கொடுத்து வைப்பது அல்லது வங்கி லாக்கரில் வைப்பது போன்ற நடைமுறைகளை பின்பற்றலாம்.
மேலும், உயில் பத்திரத்தை உடனடியாக சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்து விட்டால், அதை மாற்றுவதற்கு பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, முறையாக எழுதி, பாதுகாப்பாக வைப்பதே நல்லது. குடும்ப தலைவர் இறந்த பின், உயில் கண்டுபிடிக்கப்படும் போது, அதை அமல்படுத்த பதிவு செய்யலாம். உயில் எழுதும் போது, தங்களது எஞ்சிய வாழ்நாளுக்கு உரிய வழியை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
சில குடும்ப தலைவர்கள் தங்கள் பெயரில் உள்ள சொத்துக்களை பிள்ளைகள் பெயருக்கு முழுமையாக கொடுத்து விடுவர். அவரது காலத்துக்கு பின், சொத்துக்களை பெறும் பிள்ளைகள், மனைவியை பார்த்துக் கொள்வர் என்று நினைக்கின்றனர்.
இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
No comments:
Post a Comment