Friday, September 22, 2023

பூர்வீக சொத்துக்களை தேடி கண்டுபிடிப்பதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

 பூர்வீக சொத்துக்களை தேடி கண்டுபிடிப்பதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

பொதுவாக, குடும்பத்தில் பெரியவர்கள் பல்வேறு இடங்களில்   அசையா சொத்துக்களை வாங்கி வைத்திருப்பர்.  இந்த சொத்துக்களை முறையாக அடுத்த தலைமுறையினருக்கு பத்திரம் எழுதியிருப்பர்.

                           ஆனால், நடைமுறையில் அந்த சொத்து வாரிசுகள் கட்டுப்பாட்டில் இருக்காது.  தாங்கள் வசிக்கும் பகுதியில், சொத்து இருந்தால், நேரடியாக அதில் வாரிசுகள் உரிமை கொண்டாடுவர்.

                            சில சமயங்களில், வெளியூரில் சொத்து வாங்கி வைக்கப்பட்டு இருக்கும்.  இந்த சொத்து தொடர்பான பத்திரம் மட்டுமே பெரியவர்களிடம் இருக்கும்.

                           அதை வைத்து அவர்கள் உயில் அல்லது செட்டில்மென்ட் பத்திரம் எழுதி கொடுத்து இருப்பர்.  இன்னும் சில இடங்களில் பெரியவர்கள் பெயரில் பத்திரம் மட்டுமே இருக்கும்.  உயில் போன்ற மாற்றங்கள் நடந்து இருக்காது.  பெரிய குடும்பங்களில் இத்தகைய சொத்துக்களை சொந்தமாக்குவதும் மாற்றுவதும் சற்று சவாலானது.

                           சில பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி தங்கள் சந்ததியினருடன் நல்ல உறவைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அவர்கள் மூதாதையர் சொத்தை வாரிசாகப் பெறுவதைத் தடுக்க விரும்பலாம்.  இருப்பினும், இது சட்டப்படி சாத்தியமில்லை.

                          இத்தகைய சூழலில், நில அபகரிப்பாளர்களிடம் இருந்து பூர்வீக சொத்துக்களை பாதுகாப்பது, வாரிசுகளுக்கு சவாலான பணியாக உள்ளது.  குறிப்பாக, பூர்வீக சொத்து தொடர்பான பத்திரத்தை மட்டும் வைத்து, அதை நேரடியாக கண்டுபிடிப்பது எளிதான பணி அல்ல.

                           இதில் சம்பந்தப்பட்ட பகுதிக்கான வருவாய் துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

                            தொடர்ந்து, பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாத நிலையில் உள்ள சொத்தில் அக்கம் பக்கத்தினர் அத்துமீறி நுழைந்து இருக்கலாம்.

                            தங்கள் பத்திரத்தில் இந்த நிலத்தின் சில பகுதிகளை  சேர்த்து மோசடி செய்வது என்றும் இறங்கி இருக்கலாம்.

                             சில சமயங்களில், அடுத்தவர் மனை என்று தெரியாமல், கட்டடமும் கட்டி இருக்கலாம்.

                             இதில், சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வழக்கறிஞர் உதவியுடன் அறிந்து செயல்பட வேண்டியது அவசியம்.

                              குறிப்பாக, அதிரடியாக செயல்படுகிறோம் என்று பிரச்னை ஏற்படுத்தி கொள்ளாமல் காரியத்தை சாதிப்பதில், வாரிசுகள் கவனமாக இருக்க வேண்டும்.  ஒருவரின் தந்தை அல்லது தாத்தா மூலம் பெறப்பட்ட சொத்து என்று வரும்போது சொத்துச் சட்டத்தின் வாரிசுச்சட்டம் அதன் சொந்த விதிமுறைகளைக் கொண்டுள்ளது.

                              நீங்கள், உங்கள் குடும்பத்தினர் யாரும் வசிக்காத ஊரில் உள்ள பூர்வீக சொத்துக்களை மீட்பதில் நடைமுறை ரீதியாக, இது போன்ற பிரச்னைகள் வரும்.  இதை பொறுமையாக சமாளிப்பதில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்மையும் சில சமயங்களில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

                              எனவே, பூர்வீக சொத்துக்களை மீட்கும் பணியில் இறங்கும் வாரிசுகள் இத்தகைய பிரச்னைகளை சமாளிப்பது அவசியம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.


வீடு வாங்கும் பகுதியின் சுற்றுப் புறத்தை ஆய்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை….

 வீடு வாங்கும் பகுதியின் சுற்றுப் புறத்தை ஆய்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை…. 

குறிப்பாக, நீங்கள் வாங்க நினைக்கும் வீடு, மனை எங்கு, எப்படி அமைந்துள்ளது என்று துல்லியமாக ஆய்வு செய்யுங்கள்.

                இதில் கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதன் கட்டுமானம் தொடர்பாகவும் ஆய்வு செய்ய வேண்டும்.

                கட்டடத்தை வாங்கும் போது, அதன் மதிப்பை கணக்கிடுவதற்காக மதிப்பீட்டாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

                அதே போன்று, கட்டடத்தின் உறுதி தன்மையை கட்டட அமைப்பியல் வல்லுனர்கள் உதவியுடன் ஆய்வு செய்ய வேண்டும்.

                உறுதித் தன்மை வகையில் தெளிவு பெறாமல், கட்டடங்களை வாங்குவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.  நீங்கள் வாங்கும் வீடு, சிறிய கட்டடத்தில் அமைந்து இருக்கலாம்.

               வளர்ந்து வரும் இந்த உலகில், பெரிய பில்டர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வருகின்றன.

                  நீங்கள் விரும்பும் நகரத்தில் சிறந்த பில்டர்கள் பொருத்தமான விருப்பமாக இருக்கலாம்.

                 தரமற்ற வீடுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் நம்பகமான பிராண்டட் பில்டருடன் நீங்கள் செல்ல வேண்டியது அவசியம்.

                 அதன் அக்கம் பக்கத்து சூழல் நிலவரம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.  இதில் இடது, வலது, முன், பின் பக்கத்து சூழலை மட்டும் பார்ப்பது அவசியம்.  இந்த பக்கங்களில் பெரிய அளவில் காலி இடம் எதுவும் உள்ளதா என்றும், அதில் எதிர்காலத்தில் பெரிய கட்டுமானங்கள் வர வாய்ப்புள்ளதா என்றும் பார்க்க வேண்டும். 

                 பக்கத்து மனை பெரிய அளவிலான காலி நிலமாக இருப்பதில் என்ன பிரச்னை வந்து விட போகிறது என்று நினைக்காதீர்.  இது போன்ற காலி நிலங்களை சிறிய நிறுவனங்கள் வாங்கி, சிறிய அளவிலான குடியிருப்புகளை காட்டினாள் பிரச்னை இல்லை.  ஆனால், அந்த நிலங்களில் பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் வருகிறது என்றால், அது உங்களுக்கு தொல்லையாக அமைய வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக, பெரிய கட்டுமான திட்டங்களுக்காக, ‘பைல் பவுண்டேஷன்’ அமைப்பதில் துவங்கி பல்வேறு பணிகள், அக்கம் பக்கத்தில் உள்ள சிறிய குடியிருப்புகளுக்கு பெரும் தொல்லையாக அமைப்பது சிக்கல்.  மேலும், அக்கம் பக்கத்தில் ரசாயன அடிப்படையிலான ஆலைகள், கிடங்குகள் எதுவும் உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

                 இது போன்று பல்வேறு விஷயங்களிலும் துல்லியமான விசாரணையை மேற்கொண்டால், சிறிது கால தாமதம் ஏற்படும் தான்.  இருப்பினும், எதிர்கால நலனை கருத்தில் வைத்து, இதற்கு நேரத்தை செலவிடுவது அவசியம் தான் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.


Thursday, September 14, 2023

அஸ்திவாரத்துக்கான வடிவமைப்பில் படத்தை வாங்கிப் பாருங்கள்

 அஸ்திவாரத்துக்கான வடிவமைப்பில் படத்தை வாங்கிப் பாருங்கள்

           பொதுவாக, புதிய வீட்டை கட்டுவோர், அது எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடுவார்கள்.  இதில் கட்டடத்தின் வெளிப்புற தோற்றம் சார்ந்த வடிவமைப்பிலேயே பலரும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.


          இதற்கு அடுத்தபடியாக, கட்டடத்தின் உட்புற பகுதிகளின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.  இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது.


           கட்டடத்தின் அடிப்படை ஆதாரமாக உள்ள விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  குறிப்பாக, கட்டடத்தின் வரைபடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலையில் அதன் அஸ்திவாரத்தின் வடிவமைப்பையும் முடிவு செய்ய வேண்டும்.


          பொதுவாக, புதிய கட்டடங்களுக்கான திட்ட அனுமதி வரைபடம் தயாரிக்கும் போது,  அஸ்திவார வடிவம் குறித்த குறிப்பு இருக்கும்.  பெரும்பாலான வரைபடங்களில் இது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது.


           கட்டட அமைப்பியல் வல்லுனர் பரிந்துரை அடிப்படையிலான அஸ்திவார வடிவமைப்பு இருப்பதில்லை.  கட்டட அனுமதி பெறுவதற்கு அளிக்கப்படும் குறிப்பாக மட்டுமே இது அமைந்துள்ளது.


           இவ்வாறு வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி அந்த கட்டடத்தின் அஸ்திவாரம் அமைக்கப்படுகிறதா என்பதை மக்கள் கவனிப்பதில்லை.

            

         உண்மையாக ஆய்வு செய்தால், கட்டட அனுமதி வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி பல கட்டடங்களில் அஸ்திவாரம் அமைக்கப்படுவதில்லை.


         இதனால், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகிறது.  இது பல உயிர்சேதங்களை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகிறது.  கட்டட அனுமதி வரைபடத்தில் சிறு குறிப்பாக மட்டும் அஸ்திவார வடிவம் இருப்பது நல்லதல்ல.


         கட்டட அமைப்பியல் பொறியாளரை அணுகி, அஸ்திவார தூண்களுக்கான வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற வரைபடத்தை பெறுவது நல்லது.  இவ்வாறு, வரைபடம் தயாரிக்கும் போது, அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.


         இத்தகைய ஆய்வுகளால் கட்டடத்தின் உறுதி தன்மை வலுவாகும்.  அதில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.


Monday, September 11, 2023

வீடு, மனை வாங்குவோர் உரிமையாளருக்கு பணத்தை கொடுப்பதில் கவனம் தேவை!

 வீடு, மனை வாங்குவோர் உரிமையாளருக்கு பணத்தை கொடுப்பதில் கவனம் தேவை!

       சொத்து வாங்குவது என்பது மிகப் பெரிய சாதனை.  அது வீடாக, நிலமாக, மனையாக எப்படியிருந்தாலும், நமக்கான பெருமையும் சாதனையுமாகும்.  இதில் சொத்துக் குறித்தான ஆவணங்கள் மற்றும் வில்லங்

கம் தொடர்பான, பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

        ஆரம்பக் கட்ட பேச்சிலிருந்து, ஆவணங்கள் சரி பார்ப்பதிலிருந்து பதிவு செய்யும் காலம் வரை கவனமாய் இருக்க வேண்டியது அவசியம்.


        குறிப்பாக, விலையை பேசி முடிவு செய்வதில், எவ்வித குழப்பத்துக்கும் இடம் கொடுக்க கூடாது.  சொத்தின் சந்தை மதிப்பு, நாம் பேசியிருக்கும் மதிப்பு என எதிலும் சுணக்கம் இருத்தல் கூடாது.


         மொத்தத்தில், 50 சதவீத அளவுக்கே உங்களுக்கு உடன்பாடு இருக்கும் நிலையில், விலையை முடிவு செய்து முன்பணம் கொடுப்பதில் எவ்வித பயனும் இல்லை.


        விலையை முடிவு செய்த நிலையில், அதை உறுதிபடுத்த விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.  இந்த விற்பனை ஒப்பந்தம் என்பது சொத்து விற்பவரிடமிருந்து சொத்துக்கான உரிமையும் சொத்து வாங்குபவரிடத்திற்கு மாற்றப்பட்டதற்கான முக்கியமான ஆவணம் ஆகும்.


         இந்த சமயத்தில் முடிவு செய்யப்பட்ட விலை எவ்வளவு, அதில் முன்பணம் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விபரங்களை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும்.


         அத்துடன், கிரைய பத்திரம் எப்போது பதிவு செய்வது என்பதையும், விலையாக பேசப்பட்ட தொகை எப்படி, எப்போது கொடுக்கப்படும் என்பதையும் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.  இவ்வாறு, குறிப்பிட்டபடி, கிரைய பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.


          இதில், கிரைய பத்திரம் பதிவுக்கு முன் முழு தொகையையும் கொடுப்பது சரியா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.  பொதுவாக, பத்திரப்பதிவின் போது, சார்-பதிவாளர், விற்பவரிடம், ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை வாங்கி விட்டீர்களா என்று விசாரிக்க வேண்டும்.

         

 பல இடங்களில், இந்த விஷயத்தில், சார்-பதிவாளர்கள் தலையிடாமல் ஒதுங்கி விடுகின்றனர்.  பத்திரத்தில் குறிப்பிட்ட தொகை கைமாறிய நிலையிலேயே பதிவு செய்ய வேண்டும்.


           ஆனால், சில இடங்களில் பத்திரம் பதிவுக்கு ஏற்கப்பட்ட பின் தான் பணம் கைமாறுகிறது.  இதில், சார்-பதிவாளர்கள் உரிமையாளருக்கு சொத்துக்கான பணம் வந்ததா இல்லையா என்பதில் கவனம் செலுத்துவதில்லை.


           விலையாக பேசப் பட்ட தொகை முழுதும் கைமாறிய நிலையிலேயே, பத்திரம் பதிவுக்கு ஏற்கப்பட வேண்டும்.  பணம் கிடைக்காத நிலையில், பத்திரம் பதிவு செய்யப்படுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

                

             அதே நேரத்தில் பணம் வாங்கிக் கொண்டவர், பத்திரப்பதிவுக்கு ஒத்துழைக்க வேண்டும்.  அவர் கடைசி நிமிடத்தில் ஏதாவது பிரச்னை செய்தால், அது சொத்து வாங்குவோருக்கு சிக்கலாகி விடும்.


             எனவே, இதில் ஒப்பந்தம் எழுதி, அதன் அடிப்படையில் விற்பவரும், வாங்குபவரும் செயல்படுவது அவசியம்.


             இழப்பீடு விதியும் இதில் சேர்க்கப்பட வேண்டும்.  அதாவது, சொத்தின் உரிமை தொடர்பான பிரச்னையோ அல்லது பண இழப்போ ஏற்படும் வகையிலான சேதங்களுக்கு, சொத்து விற்பனையாளர், அதை வாங்குபவருக்கு பணம் செலுத்துவேன் என அளிக்கும் உறுதி என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.


தெளிவான செயல்திட்டம் இல்லாமல் வீடு வாங்க போகாதீர்கள்!

 தெளிவான செயல்திட்டம் இல்லாமல் வீடு வாங்க போகாதீர்கள்!

                          சொந்தமாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று நம்மில் பலரும் ஆசைப்படுகிறோம்.  பெரும்பாலான மக்களுக்கு வாழ்நாள் லட்சியமாகவும் இது அமைகிறது.

                இதற்காக, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்த தெளிவான செயல் திட்டம் இருக்க வேண்டும்.  வீடு, மனை வாங்க நீங்கள் முயற்சிக்கும்போது, ஏராளமானோர் ஆலோசனை கூறுவர்.

                குறிப்பாக, நண்பர்கள், உறவினர்கள், புரோக்கர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆலோசனையை அள்ளி தெளிப்பார்கள்.  வீடு, மனை வாங்குவது என்பது உங்கள் அளவில் புதிய நடவடிக்கையாக இருக்கலாம்.

                ஆனால், உங்களுக்கு முன் பலர் சென்ற பாதைதான் அது என்பதை கவனத்தில் வைத்து செயல்படுவது நல்லது.  ஏனெனில், உங்களுக்கு முன் அந்த பாதையில் சென்றவர்களின் அனுபவங்கள் தான் உங்கள் முயற்சியில் தவறுகளை தவிர்க்க உதவும்.

                இதில் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதில் எவ்வித தயக்கமும் தேவையில்லை.  வீடு வாங்குவதா அல்லது மனை வாங்குவதா என்பதை முதலில் தீர்மானம் செய்யுங்கள்.  அதன் பின் எந்த இடத்தில சொத்து வாங்குவது என்பதில் தெளிவான முடிவு எடுங்கள்.  இதில் வெளியாரின் ஆலோசனையை கேட்பதற்கு முன், குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.

                உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் கல்வி, வேலை போன்ற தேவைகளுக்கு ஏற்ற பகுதியை தேர்வு செய்வது நல்லது.  அதிலும், அவசர காலத்தில் மருத்துவ உதவி, போக்குவரத்து வசதி போன்றவை சரியான முறையில் இருக்கும் பகுதியை தேர்ந்தெடுங்கள்.

                இதன் பின், வெளியாரின் ஆலோசனையை கேட்கும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பகுதியில் காணப்படும் பிரச்னைகள் குறித்து விசாரியுங்கள்.  இதில் வளர்ச்சி திட்டங்களை சாதகமாகவும் பார்க்கலாம், பாதகமாகவும் பார்க்கலாம்.

                இந்த விஷயத்தில் மிகுந்த தெளிவுடன் செயல்படுவது அவசியம்.  இது போன்ற ஆலோசனைகள் அடிப்படையில் தெளிவான செயல்திட்டம் வகுக்காமல் வீடு தேடும் பணியில் இறங்காதீர்கள் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.


Saturday, September 9, 2023

மனை அளவை சரி பார்க்காமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!

 மனை அளவை சரி பார்க்காமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!

        புதிதாக மனை வாங்கும் பணிகள் முடிந்த நிலையில் அதில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும்.  இதற்கு ஆவல் இருந்தால் மட்டும் போதுமா என்றால் நிச்சயம் போதாது என்றுதான் பதில் வரும்.


        வீடு கட்ட மனை இருந்தால் போதும் என்று தானே நினைத்து இருந்தோம்.  இதற்கு மேல் வேறு என்ன தேவைபட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.


         நிலங்கள் மனைகளாக பிரிக்கப்படும் நிலையில் சரியான விகிதத்தில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும்.  பொதுவாக, சீரான சதுரம் அல்லது செவ்வகத்தில் மனைகள் அமைந்து இருக்க வேண்டும்.  இதில் நகர், ஊரமைப்பு துறை விதிகளை சரியாக கடைப்பிடித்து பிரிக்கப்பட்ட மனைகள் எனில் அது பெரும்பாலும் சீரான செவ்வகத்தில் இருக்க வேண்டும்.  மனை வாங்கும் நிலையிலேயே அதன் நீள, அகலம் சீராக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.


        இப்படி சீரான அளவுகளுடன் இருக்கும் மனைகளில் வீடு கட்டும் பணிகளை உடனடியாக துவங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.  ஆனால், சில இடங்களில் சீரற்ற அளவுகளுடன் மனைகள் இருக்கும்.


         அதாவது.  முகப்பில், 20 அடி அகலம் இருக்கும், பின்னால், 15 அடி அகலம் இருக்கும், அதே போன்று, இடப்பக்கம், 40 அடி நீளம் இருக்கும், வலது பக்கத்தில் 45 அடி நீளம் இருக்கலாம்.


         இது இடத்துக்கு இடம் வேறுபடும்.  இத்தகைய வேறுபாடுகள் உள்ள மனைகளில் வீடு கட்டும் முன், சில அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  இந்த அளவுகளை நாம் சரி செய்ய முடியாது.


          அதே நேரத்தில் இதற்குள் வீடு கட்டுவதற்கான பகுதியை சீரான அளவுகளுடன் தேர்ந்தெடுக்க முடியும்.  இப்படி சரியான பகுதியை தேர்வு செய்து அதில் கட்டுமான பணிகளை துவக்கலாம்.


          அப்போது தான் கட்டடத்தின் அளவுகள் சீரான வடிவத்துக்குள் அடங்கும்.  கட்டடம் பார்ப்பதற்கு சரியான அமைப்பில் இருக்கும் என்கின்றனர் கட்டட வடிவமைப்பாளர்கள்.


வீட்டுமனை வாங்குவோர் நில அளவை ரீதியாக விசாரிக்க வேண்டிய விஷயங்கள்!

 வீட்டுமனை வாங்குவோர் நில அளவை ரீதியாக விசாரிக்க வேண்டிய விஷயங்கள்!

             

                வீட்டுமனை வாங்கும்போது அது தொடர்பான பத்திரங்களில் எவ்வித விளக்கமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  இதற்காக சட்ட ரீதியாக ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.


                  அதே போன்று, விற்பனைக்கு வரும் மனை தொடர்பான வருவாய் 

ஆவணங்களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  இதில் பல இடங்களில் முழுமையான ஆய்வு நடப்பதில்லை.


                   ஒரு நிலம் மனையாக தற்போது விற்கப்படுகிறது என்றால், அது இதற்கு முன் என்ன வகைப்பாட்டில் இருந்தது என்பதை கவனிக்க வேண்டும்.  குறிப்பாக நகர், ஊரமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு வகைப்பாடு மாற்றி இருக்கிறார்களா என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.


                   குறிப்பாக, அந்த நிலம் இதற்கு முன் கடைசியாக எப்போது சர்வே செய்யப்பட்டது.  அப்போது ஒதுக்கப்பட்ட சர்வே எண் என்ன என்பதை விசாரிக்க வேண்டும்.  அதற்கு முன் அந்த நிலத்துக்கு ஒதுக்கப்பட்ட சர்வே எண் குறித்து விசாரிப்பது நல்லது.


                    நில அளவை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடத்தில், அந்த நிலம் என்னவாக வகைபடுத்தப்பட்டது என்பதையும் அதில் தற்போது என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் கவனிப்பது அவசியம்.  தற்போதைய உரிமையாளர் வாங்கும்போது அந்த நிலம் என்ன வகைபாட்டில் இருந்தது, அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று பாருங்கள்.


                    பல சமயங்களில் விவசாய நிலமாக வாங்கப்பட்டு இருக்கும், விற்கும்போது, அது மனையாக தெரிவிக்கப்படும்.  இதில் வகைபாடு மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் இருக்க வேண்டும்.


                     தனியார் நிறுவனங்கள் விற்கும் மனைகளிலும் இது போன்ற விபரங்களை கேட்டு வாங்கி பார்ப்பது நல்லது.  பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.


                     இருப்பினும், வீடு வாங்குவோர் முடிந்தவரை வளைந்து கொடுக்காமல் கறாராக சம்பந்தப்பட்ட ஆவணங்களை கேட்டு வாங்கி சரிபார்ப்பது அவசியம்.  நம்பகமாக நிறுவனம், தெரிந்த நிர்வாகிகள், கூடுதல் சலுகை கிடைக்கும் என்பதற்காக சரிபார்ப்பு விஷயத்தில் சமரசம் செய்துக்கொள்ளாதீர் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.


Friday, September 8, 2023

சொத்து பாகப்பிரிவினையில் ஏற்படும் இயல்பான சட்ட சிக்கல்கள்!

 சொத்து பாகப்பிரிவினையில் ஏற்படும் இயல்பான சட்ட சிக்கல்கள்!


          பொதுவாக இந்து குடும்பங்களில் பரம்பரை சொத்துக்களை பாகப்பிரிவினை செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.  மக்களின் அலட்சியம் காரணமாக இதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.

          பாகப்பிரிவினை செய்வது என்பதில் பாரம்பரியமாக பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  இருப்பினும் சட்டத்தால் சில வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


          இந்த வழிமுறைகளை உணர்ந்து வாரிசுகள் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்துக்கொள்ள வேண்டும்.  இதில் எத்தகைய சொத்துக்கள் பாகப்பிரிவினைக்கு உட்படும் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.


          உயில் எழுதப்படாத அனைத்து சொத்துக்களையும் வாரிசுகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளலாம் என்ற பொதுவான எண்ணம் உள்ளது.  தந்தை வழி சொத்துக்கள் மட்டுமே பாகப்பிரிவினைக்கு உட்படும்.


          தாயின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் அவரின் தனிப்பட்ட சொத்துக்களாகிவிடும்.  தந்தையின் சொத்துக்களுக்கு வாரிசாகும் அனைவரும், தாயின் சொத்துக்கும் வாரிசு என்று கருத முடியாது.  இன்றைய சூழலில், தந்தை வழி சொத்திலும், அவர் சுயமாக சம்பாதித்ததா அல்லது பரம்பரை வழியாக அவர் பெயருக்கு வந்ததா என்பதை பார்க்க வேண்டும்.  தந்தையின் சுயசம்பாத்திய சொத்து எனில், அவரது மகன், மகள்கள் பாகப்பிரிவினை செய்து கொள்ளலாம்.


         அதே சமயம் பரம்பரை வழியில் வந்த சொத்து எனில், வேறு சிலரும் அதில் உரிமை கோர வாய்ப்பு இருக்கும்.  இதில் சொத்துக்கள் வாரிசுகளுக்கு சமமாக பங்கிடப்பட வேண்டும்.


          பங்கீடு செய்வதில் யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.


         இது போன்ற வழக்குகளில் பல சமயங்களில் பாகப்பிரிவினை செல்லாது என்று அறிவிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.  அதன் பின் அனைத்து வாரிசுகளும் ஒன்றாக பேசி பிரச்னையை தீர்க்க வேண்டும்.


         தேவைப்பட்டால், இது போன்ற பிரச்னைகளில் சமரச பணிகளுக்கு உரிய நபர்களை நீதிமன்றம் நியமிக்கலாம் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.  


அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்கு பாதுகாவலர் நியமிப்பதில் எழும் சிக்கல்கள்!

 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்கு பாதுகாவலர் நியமிப்பதில் எழும் சிக்கல்கள்!



                     

                           தனி வீடு வாங்குவோர், அதில் பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும்.  நேரடியாக கவனிக்கும் போது இப்பணிக்கான முழு செலவும் உரிமையாளர் பொறுப்பில் வந்துவிடும்.  ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பாதுகாப்பு, பராமரிப்பு விஷயங்களில் சங்கம் வாயிலாகவே நடவடிக்கை எடுக்க முடியும், தனிப்பட்ட முறையில் உங்கள் வீட்டுக்கான பாதுகாவலரை நீங்கள் நியமிக்க முடியாது.


                          அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பாதுகாவலர்களை நியமிப்பதில் தனியார் பாதுகாவல் சேவை வழங்கும் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.  இதில் எத்தகைய நிறுவனங்களை தேர்வு செய்வது என்பதில் கவனம் தேவை.


                          குறிப்பாக, உங்கள் குடியிருப்பின் மொத்த வருவாய், செலவுக்கான பட்ஜெட் அடிப்படையிலேயே இதை முடிவு செய்ய வேண்டும்.  உங்கள் வளாகத்துக்கு பட்ஜெட்அடிப்படையிலேயே பாதுகாவல் பாதுகாவல் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்.


                          இதில் தொழிற்சாலைகள், அலுவலக வளாகங்கள் அளவுக்கு அதிக திறமை உள்ள பாதுகாவலர்களை பயன்படுத்த அனைவருக்கும் விருப்பம் இருக்கும்.  ஆனால், அதற்கு உங்கள் பட்ஜெட் இடம் கொடுக்க வேண்டும்.


                            குறைந்த செலவுக்கு ஆட்களை நியமித்தால், சேவையின் தரம் மோசமாக இருக்கும்.  இதனால், அபார்ட்மென்ட் வளாகத்துக்கு யார் வந்து செல்கின்றனர் என்பதை தெளிவாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.


                          இன்னும் சில இடங்களில் நேரடி நியமனம் முறையில் பாதுகாவலர்களை அமர்த்துவது குறித்து சங்க நிர்வாகங்கள் பரிசீலிக்கின்றன.  இதில் பாதுகாவல் சேவை நிறுவன தலையீடு இருக்காது என்று நினைக்கின்றனர். 


                         ஆனால், பாதுகாவல் பணிக்கு வருவோரை தினமும் கண்காணிப்பதே சங்க நிர்வாகத்துக்கு தலைவலியை ஏற்படுத்தும்.  ஒவ்வொரு பாதுகாவலரும் பணிக்கு வருகிறாரா இல்லையா, திடீரென விடுப்பில் சென்றால் என்ன செய்வது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பெரிய தொல்லையாக அமையும்.


                          எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிய பாதுகாவல் நிறுவனங்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாக உள்ளது.  இதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.   


                            


                           

Thursday, September 7, 2023

ஆபத்தான தொழில்கள் நடக்கும் இடங்களில் வீடு, மனை வாங்காதீர்!

 ஆபத்தான தொழில்கள் நடக்கும் இடங்களில் வீடு, மனை வாங்காதீர்!



            பொதுவாக வீடு, மனை வாங்கும் போது அதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பகுதி குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.  விற்பவர், தரகர்கள் வாய் வழியாக வரும் செய்திகளில் அவர்களது நோக்கம் பிரதானமாக இருக்கும்.


             எனவே, அதை அப்படியே ஏற்பது என்பதைவிட உண்மைநிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  உதாரணமாக ஒரு புதிய மனைப்பிரிவு, குடியிருப்பு திட்டம் குறித்து விசாரிக்கும் போது, விற்பனை நிறுவனங்கள் கூறுவதில் பெரும்பாலான விஷயங்கள் அவர்களுக்கு சாதகமான விஷயங்களாகவே இருக்கும்.


             இதை அப்படியே நம்பினால், வீடு, மனை வாங்குவோர் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, தொழிற்பேட்டை பக்கத்திலேயே மனைப்பிரிவு இருக்கிறது என்பார்கள்.


             நாமும் பரவாயில்லை, வேலைக்கு விரைவாக சென்று வரலாம் என்று நினைத்து வாங்கிவிடுவோம்.  அங்கு குடியேறிய பின் தான் தொழிற்பேட்டையில் இருந்து வரும் பிரச்னைகள் தெரியவரும்.


           குறிப்பாக, நீங்கள் வீடு வாங்கும் பகுதி எத்தகைய நிலையில் உள்ளது என்பதை தன்னிச்சையாக ஆய்வு செய்ய வேண்டும்.  அதிலும், அதன் அருகில் தொழில் நிறுவனங்கள் இருந்தால் அதன் தன்மை, மாசு ஏற்படுத்துமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


              சில இடங்களில், குடியிருப்பு பகுதியாக இருக்கும், ஆனால், வீட்டிலேயே வைத்து குறுந்தொழில் செய்வார்கள்.  இதில் எத்தகைய தொழில் நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.


             குறிப்பாக, அக்கம் பக்கத்து வீடுகளில் குறுந்தொழில்கள் நடக்கின்றன என்றால் அது குறித்த கூடுதல் ஆய்வு தேவை.  உள்ளூர் நுகர்வோரை சார்ந்த தொழில்கள் என்றால் அதில் எத்தகைய அச்சமும் தேவையில்லை.


              அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் நடக்கும் குறுந்தொழில் பெரிய நிறுவனங்களை சார்ந்தது என்றால், அதனால் மாசு ஏற்படுமா என்பதை ஆராய வேண்டும்.  இதில் தோல் தொழில், சாயத் தொழில், மருந்து தயாரிப்பு போன்ற தொழில்களில் வெளிப்படும் மாசு உடனடியாக தெரியாது.


            இது போன்ற விஷயங்களில், அக்கம் பக்கத்து வீட்டுக்காரரை வெளியேற்ற முடியாது.  எனவே, வீடு வாங்கும் நிலையிலேயே கவனமாக இருந்து இப்பகுதிகளில் குடியேறுவதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.  


When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...