அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்கு பாதுகாவலர் நியமிப்பதில் எழும் சிக்கல்கள்!
தனி வீடு வாங்குவோர், அதில் பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும். நேரடியாக கவனிக்கும் போது இப்பணிக்கான முழு செலவும் உரிமையாளர் பொறுப்பில் வந்துவிடும். ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பாதுகாப்பு, பராமரிப்பு விஷயங்களில் சங்கம் வாயிலாகவே நடவடிக்கை எடுக்க முடியும், தனிப்பட்ட முறையில் உங்கள் வீட்டுக்கான பாதுகாவலரை நீங்கள் நியமிக்க முடியாது.
அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பாதுகாவலர்களை நியமிப்பதில் தனியார் பாதுகாவல் சேவை வழங்கும் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் எத்தகைய நிறுவனங்களை தேர்வு செய்வது என்பதில் கவனம் தேவை.
குறிப்பாக, உங்கள் குடியிருப்பின் மொத்த வருவாய், செலவுக்கான பட்ஜெட் அடிப்படையிலேயே இதை முடிவு செய்ய வேண்டும். உங்கள் வளாகத்துக்கு பட்ஜெட்அடிப்படையிலேயே பாதுகாவல் பாதுகாவல் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்.
இதில் தொழிற்சாலைகள், அலுவலக வளாகங்கள் அளவுக்கு அதிக திறமை உள்ள பாதுகாவலர்களை பயன்படுத்த அனைவருக்கும் விருப்பம் இருக்கும். ஆனால், அதற்கு உங்கள் பட்ஜெட் இடம் கொடுக்க வேண்டும்.
குறைந்த செலவுக்கு ஆட்களை நியமித்தால், சேவையின் தரம் மோசமாக இருக்கும். இதனால், அபார்ட்மென்ட் வளாகத்துக்கு யார் வந்து செல்கின்றனர் என்பதை தெளிவாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இன்னும் சில இடங்களில் நேரடி நியமனம் முறையில் பாதுகாவலர்களை அமர்த்துவது குறித்து சங்க நிர்வாகங்கள் பரிசீலிக்கின்றன. இதில் பாதுகாவல் சேவை நிறுவன தலையீடு இருக்காது என்று நினைக்கின்றனர்.
ஆனால், பாதுகாவல் பணிக்கு வருவோரை தினமும் கண்காணிப்பதே சங்க நிர்வாகத்துக்கு தலைவலியை ஏற்படுத்தும். ஒவ்வொரு பாதுகாவலரும் பணிக்கு வருகிறாரா இல்லையா, திடீரென விடுப்பில் சென்றால் என்ன செய்வது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பெரிய தொல்லையாக அமையும்.
எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிய பாதுகாவல் நிறுவனங்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாக உள்ளது. இதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
No comments:
Post a Comment