வீட்டுமனை வாங்குவோர் நில அளவை ரீதியாக விசாரிக்க வேண்டிய விஷயங்கள்!
வீட்டுமனை வாங்கும்போது அது தொடர்பான பத்திரங்களில் எவ்வித விளக்கமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக சட்ட ரீதியாக ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
அதே போன்று, விற்பனைக்கு வரும் மனை தொடர்பான வருவாய்
ஆவணங்களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதில் பல இடங்களில் முழுமையான ஆய்வு நடப்பதில்லை.
ஒரு நிலம் மனையாக தற்போது விற்கப்படுகிறது என்றால், அது இதற்கு முன் என்ன வகைப்பாட்டில் இருந்தது என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக நகர், ஊரமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு வகைப்பாடு மாற்றி இருக்கிறார்களா என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, அந்த நிலம் இதற்கு முன் கடைசியாக எப்போது சர்வே செய்யப்பட்டது. அப்போது ஒதுக்கப்பட்ட சர்வே எண் என்ன என்பதை விசாரிக்க வேண்டும். அதற்கு முன் அந்த நிலத்துக்கு ஒதுக்கப்பட்ட சர்வே எண் குறித்து விசாரிப்பது நல்லது.
நில அளவை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடத்தில், அந்த நிலம் என்னவாக வகைபடுத்தப்பட்டது என்பதையும் அதில் தற்போது என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் கவனிப்பது அவசியம். தற்போதைய உரிமையாளர் வாங்கும்போது அந்த நிலம் என்ன வகைபாட்டில் இருந்தது, அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
பல சமயங்களில் விவசாய நிலமாக வாங்கப்பட்டு இருக்கும், விற்கும்போது, அது மனையாக தெரிவிக்கப்படும். இதில் வகைபாடு மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் இருக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் விற்கும் மனைகளிலும் இது போன்ற விபரங்களை கேட்டு வாங்கி பார்ப்பது நல்லது. பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இருப்பினும், வீடு வாங்குவோர் முடிந்தவரை வளைந்து கொடுக்காமல் கறாராக சம்பந்தப்பட்ட ஆவணங்களை கேட்டு வாங்கி சரிபார்ப்பது அவசியம். நம்பகமாக நிறுவனம், தெரிந்த நிர்வாகிகள், கூடுதல் சலுகை கிடைக்கும் என்பதற்காக சரிபார்ப்பு விஷயத்தில் சமரசம் செய்துக்கொள்ளாதீர் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment