மனை அளவை சரி பார்க்காமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!
புதிதாக மனை வாங்கும் பணிகள் முடிந்த நிலையில் அதில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். இதற்கு ஆவல் இருந்தால் மட்டும் போதுமா என்றால் நிச்சயம் போதாது என்றுதான் பதில் வரும்.
வீடு கட்ட மனை இருந்தால் போதும் என்று தானே நினைத்து இருந்தோம். இதற்கு மேல் வேறு என்ன தேவைபட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.
நிலங்கள் மனைகளாக பிரிக்கப்படும் நிலையில் சரியான விகிதத்தில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும். பொதுவாக, சீரான சதுரம் அல்லது செவ்வகத்தில் மனைகள் அமைந்து இருக்க வேண்டும். இதில் நகர், ஊரமைப்பு துறை விதிகளை சரியாக கடைப்பிடித்து பிரிக்கப்பட்ட மனைகள் எனில் அது பெரும்பாலும் சீரான செவ்வகத்தில் இருக்க வேண்டும். மனை வாங்கும் நிலையிலேயே அதன் நீள, அகலம் சீராக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
இப்படி சீரான அளவுகளுடன் இருக்கும் மனைகளில் வீடு கட்டும் பணிகளை உடனடியாக துவங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால், சில இடங்களில் சீரற்ற அளவுகளுடன் மனைகள் இருக்கும்.
அதாவது. முகப்பில், 20 அடி அகலம் இருக்கும், பின்னால், 15 அடி அகலம் இருக்கும், அதே போன்று, இடப்பக்கம், 40 அடி நீளம் இருக்கும், வலது பக்கத்தில் 45 அடி நீளம் இருக்கலாம்.
இது இடத்துக்கு இடம் வேறுபடும். இத்தகைய வேறுபாடுகள் உள்ள மனைகளில் வீடு கட்டும் முன், சில அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அளவுகளை நாம் சரி செய்ய முடியாது.
அதே நேரத்தில் இதற்குள் வீடு கட்டுவதற்கான பகுதியை சீரான அளவுகளுடன் தேர்ந்தெடுக்க முடியும். இப்படி சரியான பகுதியை தேர்வு செய்து அதில் கட்டுமான பணிகளை துவக்கலாம்.
அப்போது தான் கட்டடத்தின் அளவுகள் சீரான வடிவத்துக்குள் அடங்கும். கட்டடம் பார்ப்பதற்கு சரியான அமைப்பில் இருக்கும் என்கின்றனர் கட்டட வடிவமைப்பாளர்கள்.
No comments:
Post a Comment