தெளிவான செயல்திட்டம் இல்லாமல் வீடு வாங்க போகாதீர்கள்!
சொந்தமாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று நம்மில் பலரும் ஆசைப்படுகிறோம். பெரும்பாலான மக்களுக்கு வாழ்நாள் லட்சியமாகவும் இது அமைகிறது.
இதற்காக, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்த தெளிவான செயல் திட்டம் இருக்க வேண்டும். வீடு, மனை வாங்க நீங்கள் முயற்சிக்கும்போது, ஏராளமானோர் ஆலோசனை கூறுவர்.
குறிப்பாக, நண்பர்கள், உறவினர்கள், புரோக்கர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆலோசனையை அள்ளி தெளிப்பார்கள். வீடு, மனை வாங்குவது என்பது உங்கள் அளவில் புதிய நடவடிக்கையாக இருக்கலாம்.
ஆனால், உங்களுக்கு முன் பலர் சென்ற பாதைதான் அது என்பதை கவனத்தில் வைத்து செயல்படுவது நல்லது. ஏனெனில், உங்களுக்கு முன் அந்த பாதையில் சென்றவர்களின் அனுபவங்கள் தான் உங்கள் முயற்சியில் தவறுகளை தவிர்க்க உதவும்.
இதில் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதில் எவ்வித தயக்கமும் தேவையில்லை. வீடு வாங்குவதா அல்லது மனை வாங்குவதா என்பதை முதலில் தீர்மானம் செய்யுங்கள். அதன் பின் எந்த இடத்தில சொத்து வாங்குவது என்பதில் தெளிவான முடிவு எடுங்கள். இதில் வெளியாரின் ஆலோசனையை கேட்பதற்கு முன், குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் கல்வி, வேலை போன்ற தேவைகளுக்கு ஏற்ற பகுதியை தேர்வு செய்வது நல்லது. அதிலும், அவசர காலத்தில் மருத்துவ உதவி, போக்குவரத்து வசதி போன்றவை சரியான முறையில் இருக்கும் பகுதியை தேர்ந்தெடுங்கள்.
இதன் பின், வெளியாரின் ஆலோசனையை கேட்கும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பகுதியில் காணப்படும் பிரச்னைகள் குறித்து விசாரியுங்கள். இதில் வளர்ச்சி திட்டங்களை சாதகமாகவும் பார்க்கலாம், பாதகமாகவும் பார்க்கலாம்.
இந்த விஷயத்தில் மிகுந்த தெளிவுடன் செயல்படுவது அவசியம். இது போன்ற ஆலோசனைகள் அடிப்படையில் தெளிவான செயல்திட்டம் வகுக்காமல் வீடு தேடும் பணியில் இறங்காதீர்கள் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
No comments:
Post a Comment