அஸ்திவாரத்துக்கான வடிவமைப்பில் படத்தை வாங்கிப் பாருங்கள்
பொதுவாக, புதிய வீட்டை கட்டுவோர், அது எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடுவார்கள். இதில் கட்டடத்தின் வெளிப்புற தோற்றம் சார்ந்த வடிவமைப்பிலேயே பலரும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக, கட்டடத்தின் உட்புற பகுதிகளின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது.
கட்டடத்தின் அடிப்படை ஆதாரமாக உள்ள விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, கட்டடத்தின் வரைபடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலையில் அதன் அஸ்திவாரத்தின் வடிவமைப்பையும் முடிவு செய்ய வேண்டும்.
பொதுவாக, புதிய கட்டடங்களுக்கான திட்ட அனுமதி வரைபடம் தயாரிக்கும் போது, அஸ்திவார வடிவம் குறித்த குறிப்பு இருக்கும். பெரும்பாலான வரைபடங்களில் இது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது.
கட்டட அமைப்பியல் வல்லுனர் பரிந்துரை அடிப்படையிலான அஸ்திவார வடிவமைப்பு இருப்பதில்லை. கட்டட அனுமதி பெறுவதற்கு அளிக்கப்படும் குறிப்பாக மட்டுமே இது அமைந்துள்ளது.
இவ்வாறு வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி அந்த கட்டடத்தின் அஸ்திவாரம் அமைக்கப்படுகிறதா என்பதை மக்கள் கவனிப்பதில்லை.
உண்மையாக ஆய்வு செய்தால், கட்டட அனுமதி வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி பல கட்டடங்களில் அஸ்திவாரம் அமைக்கப்படுவதில்லை.
இதனால், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகிறது. இது பல உயிர்சேதங்களை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. கட்டட அனுமதி வரைபடத்தில் சிறு குறிப்பாக மட்டும் அஸ்திவார வடிவம் இருப்பது நல்லதல்ல.
கட்டட அமைப்பியல் பொறியாளரை அணுகி, அஸ்திவார தூண்களுக்கான வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற வரைபடத்தை பெறுவது நல்லது. இவ்வாறு, வரைபடம் தயாரிக்கும் போது, அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இத்தகைய ஆய்வுகளால் கட்டடத்தின் உறுதி தன்மை வலுவாகும். அதில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
No comments:
Post a Comment