Friday, September 20, 2024

சொத்து வாங்கும்போது பவர் பத்திர பிரச்னையில் சிக்காமல் இருக்க!

 சொத்து வாங்கும்போது பவர் பத்திர பிரச்னையில் சிக்காமல் இருக்க!
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோர், ஆவண ரீதியாக பல்வேறு விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். ஒரு சொத்தை அதன் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும்.
பொதுவாக ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது என்றால், அதை விற்பவர் அதன் முறையான உரிமையாளரா என்று பார்க்க வேண்டியது அவசியம். சில சமயங்களில் சொத்தின் உரிமையாளர்கள் அதை விற்பதற்கு பொது அதிகார அடிப்படையில் முகவர்களை நியமிப்பது வழக்கம்.


இதில் சொத்தின் உரிமையாளர் நேரடியா முன்னின்று விலை பேசுவது உள்ளிட்ட பணிகளை முடித்தாலும், பத்திரப்பதிவுக்கு வர இயலாத நிலையில் இருக்கலாம். இத்தகைய சூழலில், அவர் தனது சார்பில், விற்பனை ஆவணத்தில் கையெழுத்திட்டு பதிவு பணிகளை முடிக்க பொது அதிகார அடிப்படையில் ஒரு முகவரை நியமிக்கலாம்.

இவ்வாறு நியமிக்கப்படும் முகவர் விஷயத்தில், அனைத்து விஷயங்களும் உரிமையாளரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால் பெரிய சிக்கல் ஏற்படாது. ஆனால், சில இடங்களில் உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு பொது அதிகாரம் அளித்துள்ள நிலையில் முகவர்கள் தான் விற்பனை செய்வர்.

இது போன்ற சொத்துக்களை வாங்கும் போது, அதற்கான பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர் உயிருடன் இருக்க வேண்டும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக, அந்த பொது அதிகார ஆவணத்தை உரிமையாளர் ரத்து செய்யாமல் இருக்கிறார் என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
பொது அதிகார பத்திரத்தை உரிமையாளர் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியும் என்பதால், நீங்கள் வாங்கும் சொத்துக்கான பொது அதிகார ஆவணம் ரத்து செய்யப்படாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


இதே போன்று, பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர் உயிருடன் இருப்பதும் மிக மிக அவசியம். சில இடங்களில் பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர், அதை ரத்து செய்யாமல், வேறு ஒரு நபரிடம் விலை பேசி சொத்தை விற்க முயற்சிக்கலாம்.

இதேபோன்ற சூழலில், சொத்து வாங்குவோர் அலட்சியமாக இருந்தால், பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

பொது அதிகாரம் பெற்ற நபர் இறந்துவிட்டால், அவரது சார்பில் வேறு நபர்கள் அந்த ஆவணத்தை பயன்படுத்த முடியாது. இது போன்று பொது அதிகார முகவர் இறந்த நிலையில் வேறு நபர்கள் சொத்தை விற்க முயற்சித்தால் அதை வாங்கும் நபர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.

அசையா சொத்துக்களை வாங்கும் போது பொது அதிகார முகவர்களை முழுமையாக நம்புவதில் ஏற்படும் பிரச்னைகளை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.

தவறினால், சில சமயங்களில் அந்த சொத்து மொத்தமாக பறிபோகும் நிலையும் ஏற்படலாம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

கூட்டு உரிமையில் உள்ள சொத்துக்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

             தனி நபர்களின் பெயரில் உள்ள சொத்துக்களை வாங்குவதில் பெரும்பாலும் உரிமை சார்ந்த சிக்கல்கள் இருப்பதில்லைஆனால்,கூட்டு உரிமையில் உள்ள சொத்துக்களை பகுதியாக வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

      
               நம் நாட்டில் இந்து கூட்டு குடும்ப முறை தான் பரவலாக இருந்தது.  பல்வேறு தலைமுறைகளாக சொத்துக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன, தற்போது இத்தகைய சொத்துக்கள் உள்ளன.  இவ்வாறு, கூட்டு குடும்பத்தில் பரம்பரை சொத்துக்கள் பொதுவில் பராமரிக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களுக்கு பயன்கள் கிடைத்து வந்தன.  ஆனால், சமீபகாலமாக இத்தகைய கூட்டு குடும்ப பராமரிப்பில் உள்ள சொத்துக்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்பனைக்கு வருகின்றன.

                 இதில் கூட்டு குடும்ப உறுப்பினர் ஒருவர் தனக்கான பாகத்தை விற்பதற்கு உரிமை உள்ளவராகிறார்.  அவர் தனது சட்ட பூர்வ உரிமை அடிப்படையில் சொத்தில் தனக்கான பாகத்தை விற்கலாம்.  ஆனால், விற்பவர் நிலையில் பிரச்னைகள் இல்லை என்றாலும், அச்சொத்தை வாங்குபவர், இதில் கூடுதல் விஷயங்களை கவனிக்க வேண்டும்.  குறிப்பாக, கூட்டு பொறுப்பில் உள்ள சொத்தில், விற்பனைக்கு வரும் பாகத்தை தற்போதைய நிலை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

            அந்த சொத்தை வெளியார் வாங்கினால், அதை அவர் இயல்பு நிலையில், தன் விருப்பப்படி பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டும்.  பொதுவாக, கூட்டு பொறுப்பில் நிலத்தின் மைய பகுதி, இறுதி பகுதி போன்ற பாகங்களை அதற்கான பங்குரிமையாளர் விற்கின்றனர் என்றால், அதற்கு உரிய பாதை வசதி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

         மேலும், கூட்டு குடும்ப உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் தனி நபராக சொத்து வாங்கும் வெளியார் சிக்கிக் கொள்ள கூடாது.  இது போன்ற விஷயத்தில் விற்பவரின் சட்டபூர்வ உரிமையை சரி பார்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

           விற்பவர், அவருக்கு உரிய பங்கை தான் விற்கிறார் என்பதை முழுமையாக தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்இதில், தன்னுடைய பங்கு என்று அடுத்தவரின் பங்கை விற்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றனஇது போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு முன் சர்வே அதிகாரிகள் வாயிலாக ஆய்வு செய்வது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

Tuesday, September 10, 2024

சிறிய பிரச்னைகளை அலட்சியப்படுத்துவதால் பெரிய பாதிப்புகள்!

 
    பொதுவாக கட்டடங்களில் பிளம்பிங்கில் மின் இணைப்பு போன்ற அமைப்புகளில் அவ்வப்போது சிறு குறைபாடுகள் ஏற்படுவது உண்டுஇந்த குறைபாடுகளை சரி செய்ய உரிய பணியாளர்களை அழைப்பது அவசியம்.

     அதே நேரத்தில் இது போன்ற சிறிய பிரச்னைகள் ஏற்படும் சமயத்தில் உடனடியாக பணியாளர் வருகை என்பது பெரும்பாலும் சாத்தியப்படாது.  உதாரணமாக, உங்கள் வீட்டில், சமையலறை அல்லது குளியலறையில் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது.  இரவிலோ, அதிகாலையிலோ இது போன்ற பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக பிளம்பரை வரவழைக்க முடியாது.
     அதற்காக, குழாயை அப்படியே விட்டுவைக்க முடியாது.  இதில் முதலுதவி என்ற அடிப்படையில் விஷயங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.  இப்படி, குழாயில் உடைப்பு ஏற்பட்டால், அதற்கு தண்ணீர் வரும் பாதையை தடுக்க வேண்டும்.  இதற்காக மேல்நிலை தொட்டி அருகில் அமைக்கப்பட்டுள்ள வால்வுகளை மூடுவது நல்லது.
     இதனால், தண்ணீர் வீணாவது ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்படும்.  இதை விடுத்து பிளம்பர் வரும்வரை அப்படியே வைத்து இருப்பது நல்லதல்ல.  மேலும், மின் இணைப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை பொறுத்தவரை, பழுதுகள் ஏற்பட்டால் உடனடியாக வீட்டிற்கான பிரதான 'சுவிட்சை ஆப்' செய்துவிடவும்.  பழுது ஏற்பட்ட பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்து விட்டு மற்ற பகுதிகளில் மின் இணைப்புகளை பயன்படுத்தலாம்.  இது போன்று கட்டடங்களில் பழுதுகள் ஏற்படும் நிலையில் அதற்கான பணியாளர் வருவதற்கு முன் முதலுதவியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வேண்டும்.  இது விஷயத்தில் பதற்றப்பட்டு எதையாவது செய்து பிரச்னையை பெரிதாக்காமல் இருக்க வேண்டும்.
     கட்டடங்களில் இத்தகைய சிறிய பிரச்னைகளை சரி செய்ய வழக்கமாக சில பணியாளர்களை தொடர்பில் வைத்து இருப்பது நல்லது.  அப்போது தான் பிரச்னையின் போது என்ன வகையான முதலுதவி செய்வது என்ற வழிகாட்டுதல்கள் பெறமுடியும்.
      எனவே, கட்டடங்களில் சிறிய அளவில் ஏற்படும் பிரச்னைகளை அலட்சியப்படுத்தாமல் சமாளிப்பதில் தெளிவான நடைமுறையை வகுக்க வேண்டும்கட்டட உரிமையாளர்கள் மட்டுமின்றி, கட்டடத்தை பயன்படுத்தும் அனைவரும் இது போன்ற வழிமுறைகளை அறிந்து இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

Monday, September 9, 2024

நேரில் சென்று பார்க்காமல் சொத்து வாங்கினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?


சொந்தமாக வீடு, மனை வாங்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் பரவலாக காணப்படுகிறது. இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான வழிமுறையை தேர்வு செய்வதில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு தவறுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக முதன்முதலில், ஒரு வீடு அல்லது மனை வாங்குவது என்றால் அதற்கான தேடலில் ஈடுபடும் நிலையில் மக்கள் அதிக ஆர்வத்துடன் செயல்படுவர்.

பிரதான நகரத்தில் வீடு வாங்கி குடியேறிய நிலையில் எதிர்கால தேவைக்கு, குறைந்த விலையில் வீட்டு மனை வாங்கலாம் என்று நினைக்கின்றனர்.

இவ்வாறு முதலீட்டு நோக்கத்தில் மனை வாங்குவது எந்த விதத்திலும் தவறு இல்லை. ஆனால், இதற்கான செயல்பாடுகளில் முழுமையான விழிப்புடன் நடந்துகொள்ள தவறினால், உங்கள் முதலீடு உரிய பயனை அளிப்பதற்கு பதில் ஏமாற்றத்தை அளிக்கும் நிலை ஏற்படும்.


பொதுவாக, நமக்கு தெரிந்தவர்கள் மத்தியில் குறைந்தபட்சம் ஒருவர் அல்லது இரண்டு பேராவது, வெளியூரில் மனை வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், நான் வாங்கிய மனையை இதுவரை நேரில் சென்று பார்த்ததே இல்லை என்று பரவலாக கூற கேட்டு இருப்போம்.

இத்தகைய நபர்கள், வாங்கிய மனை என்பது அவர்களிடம் இருக்கும் பத்திரத்தில் மட்டுமே காணப்படும். நேரில் சென்றால், அந்த குறிப்பிட்ட ஊரில் அவர் வாங்கிய மனையை அடையாளம் கூட தெரியாத அளவுக்கு தான் பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்.

தவணை முறையில் பணம் கட்டினேன், மனை கொடுப்பதாக கூறினார்கள், பத்திரப்பதிவுக்கு என்று ஒரு குறிப்பிட்ட ஊருக்கு அழைத்தார்கள் சென்று பதிவு முடித்தோம். பத்திரம், பட்டா அனைத்தையும் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனமே கொண்டு வந்து கொடுத்துவிட்டது.

அந்த பத்திரங்களை வாங்கி, அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறோம், ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள நிலம் எங்கு, எப்படி இருக்கும் என்று தெரியாது என்ற நிலையில் பலரும் வலம் வருகின்றனர்.

உண்மையில் இது போன்று முறையான பத்திரங்கள் கையில் இருக்கிறது என்று அமைதியாக இருக்கும் நபர்களின் வாரிசுகள், பின்னர் நிலத்தை தேடி செல்லும் போது தான் பிரச்னையே தெரியவரும். 

பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள கிராமத்தில் சர்வே எண் மற்றும் மனை எண் விபரங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து தேடினால் நிலம் எங்கு இருக்கிறது என்று தெரியாது.

இது போன்று நிலத்தை நேரில் பார்க்காத நிலையில், நீங்கள் வாங்கிய சில ஆண்டுகளிலேயே அது வேறு நபர்களால் அபகரிக்கப்பட்டு இருக்கும்.


எதிர்காலத்தில் அந்த நிலத்தை பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைத்து காத்திருந்தால், அங்கு வேறு நபர்கள் வீடு கட்டி வசிப்பார்கள்.

முதலீட்டுக்கான இப்படி நேரில் பார்க்காமல் சொத்து வாங்கினால், அதை இழப்பதற்கு நீங்களே தயார் என்று தான் பிறர் பொருள் கொள்வார்கள்.

மனை வாங்கும் போது அதை நேரில் சென்று பார்த்து வாங்குவது மட்டுமல்லாது, குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்வையிடுவதும் அவசியம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

மாடிப்படி கைப்பிடிகள் விஷயத்தில் கவனம் தேவை!

 

வீடுகளில் சுவர்கள் எப்படி தரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அது போன்று, மாடிப்படி, அதற்கான கைப்பிடி சுவர் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

நீங்கள் கட்டும் வீட்டின் ஒட்டுமொத்த அமைப்பு என்ன, அளவு என்ன என்பதை கருத்தில் வைத்து மாடிப்படிக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக, மேல் தளத்துக்கு செல்வதற்கான மாடிப்படிகளை அமைப்பதற்கான திட்டமிடலில், பல்வேறு தவறுகள் நடக்கின்றன.  குறிப்பாக, ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் தனி வீடு எனில் அதற்கான மாடிப்படி அமைக்கும் விஷயத்தில் அதிகபட்ச அலட்சியம் காட்டப்படுகிறது.

குறைந்த பரப்பளவு மனைகளில் தனி வீடு கட்டுவோர், வரைபட நிலையில் மாடிப்படிக்கான இடத்தை முறையாக ஒதுக்குவதில்லை.

இதனால், கட்டுமான பணிகள் முடியும் நிலையில் அவசர கோலத்தில் இருக்கும் காலியிடத்தில் ஒரு பகுதியை பயன்படுத்தி மாடிப்படி அமைக்கின்றனர்.

இவ்வாறு கிடைக்கும் சிறிதளவு இடத்தில் மாடிப்படி அமைக்கும் போது அதற்கான தரத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  குறிப்பாக, படிகளின் எண்ணிக்கை, அகலம், உயரம் தொடர்பான விஷயங்கள் சீராக இல்லாத சூழல் ஏற்படுவதை பரவலாக பார்க்க முடிகிறது.

இதில்  தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் கட்டடத்தின் பிரதான சுவரை ஒட்டி மாடிப்படிகள் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறு பிரதான சுவரை ஒட்டி மாடிப்படி அமைக்கும் போது, அதில் ஒரு பக்கம் மட்டுமே கைப்பிடி சுவர் அமைக்க வாய்ப்பு இருக்கும்.  முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் இந்த படிகளை பயன்படுத்தும் போது, ஒரு பக்கம் மட்டும் கைப்பிடி சுவர் இருப்பதால் மறு பக்கத்தில் பிடிமானம் கிடைக்காமல் நிலைத்தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுவதாக பரவலாக புகார்கள் எழுகின்றன.

இது போன்ற இடங்களில் பிரதான சுவரில் இரும்பால், ‘ஹேண்ட்ரயில்’ எனப்படும் கைப்பிடிகளை அமைப்பது பரவலாக அதிகரித்துள்ளன.  இதில் மாடிப் படிகளில் உலோக கைப்பிடி அமைக்கும் போது, அதற்கு முந்தைய நுழைவுப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று படிகள் மட்டும் அமையும் இடங்கள் மிகவும் ஆபத்தானதாக உள்ளது.

மாடிப்படி துவங்கும் இடத்தில், 2 அல்லது 3 படிகள் அமையும் இடத்தில், சிறிய அளவில் கைப்பிடிகளை அமைப்பதால் விபத்துகளை தடுக்கலாம்.

அடுக்கு மாடி திட்டங்களில் புதிதாக வீடு வாங்கும் போது இது போன்ற கூடுதல் கைப்பிடி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Thursday, September 5, 2024

அரசு ஒதுக்கீட்டில் வீடு, மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

 அரசு ஒதுக்கீட்டில் வீடு, மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!
பொதுவாக வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், தேடலில் ஈடுபடும் மக்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  இதில் பெரும்பாலும் தனி நபர் பெயரில் உள்ள சொத்துக்களை தான் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


விற்பனைக்கு வரும் வீடு அல்லது மனை, அந்த நபருக்கு எப்படி வந்தது என்பது தொடர்பான விபரங்களை ஆவண அடிப்படையில் ஆராய வேண்டும்.  குறிப்பாக, தனி நபரிடம் இருந்து அந்த சொத்து வாங்கப்பட்டதா என்பது தொடர்பான விஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.


ஆனால், பல இடங்களில் அரசு துறையில் இருந்து ஒதுக்கீடு வாயிலாக, வீடு, மனை பெற்றவர்கள் அதை விற்க முன்வருகின்றனர்.  அரசு திட்டத்தில் உள்ள சொத்து என்பதால், பெரிய அளவில் வில்லங்கம் இருக்காது என்று மக்கள் நினைக்கின்றனர்.


சாதாரணமாக, தனியார் நிறுவனத்தின் திட்டத்துக்கும், அரசு நிறுவனத்தின் மனைப்பிரிவு திட்டத்துக்கும் பல்வேறு நிலைகளில் வேறுபாடுகள் இருக்கும்.  அரசு நிறுவனத்தின் திட்டம் என்றால் அதில் விதிமீறல்கள் இருக்காது, அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்னைகள் இருக்காது என்று மக்கள் நினைக்கின்றனர்.


இது போன்ற சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது அதை வாங்குவதற்கு மக்கள் இயல்பாகவே முன்னுரிமை கொடுப்பதை பார்க்க முடிகிறது.  ஆனால், இத்தகைய சொத்துக்கள் எந்த வழிமுறையில் அந்த நபருக்கு அரசால் ஒதுக்கப்பட்டது என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.  பொதுவாக, அரசு நிறுவனங்களில் வீடு, மனை ஒதுக்கீட்டில் சமூக ரீதியான இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு இருக்கும்.  இதில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு சலுகை வலையில், வீடு, மனை ஒதுக்கப்படுகிறது என்றால், அதை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது.


ஆனால், பொருளாதார தேவை என்ற அடிப்படையில் அரசு ஒதுக்கிய வீடு, மனையை அதை பெற்றவர்கள் விற்க முற்படுகின்றனர்.  வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை வாயிலாக பட்டியலினத்தவர், பழங்குடியினர் பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட வீடு, மனையை வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.


தவணைகளை முழுமையாக செலுத்தி விற்பனை பத்திரம் பெற்ற நிலையில் உரிமையாளர் அதை விற்பதில் தவறு என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம்.  உண்மையில் இது போன்ற சொத்துக்களை ஒதுக்கும் போது, அதற்கான உத்தரவில், 10 ஆண்டுகளுக்கு அவர் வெளியாட்களுக்கு விற்க கூடாது என்ற அடிப்படையில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கும்.


எனவே, இது போன்ற சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது, அதை வாங்க முற்படும் நபர்கள், 10 ஆண்டு நிபந்தனைகள் முடிந்துள்ளதா  என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.  நிபந்தனை காலத்தில் அந்த சொத்து வேறு பிரிவை சேர்ந்தவர்கள் வாங்கினால், அது விதிமீறலாக பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள்.

சொத்து வாங்குவோர் பத்திரப்பதிவின் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதற்கான கிரைய பத்திரத்தை தயாரிப்பது, பதிவுக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இந்த விஷயங்களில் மிக கவனமாக இருந்தாலும் நம்மை அறியாமல் சில விஷயங்கள் தவறாக போவதற்கு வாய்ப்பு உள்ளது.

பதிவுக்கு பின் பத்திரத்தில் தவறுகள் தெரிய வந்தால், அதை சரி செய்வதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் இருக்கின்றன.  ஆனால், இதற்காக தவறுகள் நடந்தால் பரவாயில்லை என்ற ரீதியில் பத்திர விஷயத்தில் அலட்சியம் காட்டினால், அது பெரிய இழப்புகளை ஏற்படுத்தி விடும்.

குறிப்பாக, நீங்கள் வாங்கும் சொத்து தொடர்பாக என்னென்ன பத்திரங்களின் பிரதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும்.  விற்பனை செய்பவர் பெயரில் உள்ள பத்திரம், யார் பெயரில் இருந்து அவருக்கு வந்தது என்பதை குறிப்பிடும் பத்திரம் ஆகியவற்றை கேட்டு வாங்க வேண்டும்.

இந்த பத்திரங்களில் சொத்து குறித்த விபரங்கள் சரியாக இருக்கிறதா, ஒன்றுக்கொன்று ஒத்துபோகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.  இவற்றில் உள்ள விபரங்கள் அடிப்படையில், தற்போதைய சொத்து பரிமாற்றத்துக்கான புதிய கிரைய பத்திரத்தை தயாரிக்க வேண்டும்.

ஒரு சொத்தின் பழைய ஆவணங்களின் அசல் பிரதி இல்லாமல் புதிய கிரைய பத்திரத்தை பதிவு செய்ய செல்லாதீர்கள்.  சில இடங்களில் பழைய பத்திரங்கள் வங்கியில் கடனுக்கு ஈடாக கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தால், கடனை முடித்து பத்திரங்களை வாங்க வேண்டும்.

குறிப்பாக, சொத்தின் தாய் பத்திரம் எது என்பதை அறிந்து, அதன் அசல் பிரதியை வாங்குவது அவசியம்.  தற்போது நீங்கள் வங்கிக்கடன் வாயிலாக சொத்து வாங்குவதாக இருந்தாலும், அதற்கான கிரைய பத்திரம் மட்டுமே வங்கிக்கு செல்லும், அதற்கு முந்தைய அசல் பத்திரங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்.

விற்பனைக்கு வரும் சொத்தின் தாய் பத்திரம் என்று காட்டப்படும் பத்திரம் உண்மையானது தானா என்பதை நீங்கள் சரி பார்ப்பது அவசியம்.  சில சமயங்களில் போலியான பத்திரங்களை தயாரித்து, அது தான் அசல் தாய் பத்திரம் என்று குறிப்பிட்டு சொத்தை சிலர் விற்பனை செய்கின்றனர்.

பொது அதிகார முகவரிடம் இருந்து சொத்து வாங்குவதாக இருந்தால், அவருக்கு பவர் எப்போது, எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும்.  அந்த குறிப்பிட்ட சொத்தின் பொது அதிகாரம் கொடுத்தவர் தற்போது உயிரோடு இருக்கிறாரா என்பதை விசாரிக்காமல் பரிமாற்றத்தில் ஈடுபடாதீர் என்கின்றனர் சொத்து மதிப்பீட்டாளர்கள்.

Bigger the house, bigger the responsibilities

  Here is a look at the aftermath of upgrading to a larger space Regardless of the size of the current home, many homeowners often nurture t...