வீடுகளில் சுவர்கள் எப்படி தரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அது போன்று, மாடிப்படி, அதற்கான கைப்பிடி சுவர் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் கட்டும் வீட்டின் ஒட்டுமொத்த அமைப்பு என்ன, அளவு என்ன என்பதை கருத்தில் வைத்து மாடிப்படிக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக, மேல் தளத்துக்கு செல்வதற்கான மாடிப்படிகளை அமைப்பதற்கான திட்டமிடலில், பல்வேறு தவறுகள் நடக்கின்றன. குறிப்பாக, ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் தனி வீடு எனில் அதற்கான மாடிப்படி அமைக்கும் விஷயத்தில் அதிகபட்ச அலட்சியம் காட்டப்படுகிறது.
குறைந்த பரப்பளவு மனைகளில் தனி வீடு கட்டுவோர், வரைபட நிலையில் மாடிப்படிக்கான இடத்தை முறையாக ஒதுக்குவதில்லை.
இதனால், கட்டுமான பணிகள் முடியும் நிலையில் அவசர கோலத்தில் இருக்கும் காலியிடத்தில் ஒரு பகுதியை பயன்படுத்தி மாடிப்படி அமைக்கின்றனர்.
இவ்வாறு கிடைக்கும் சிறிதளவு இடத்தில் மாடிப்படி அமைக்கும் போது அதற்கான தரத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, படிகளின் எண்ணிக்கை, அகலம், உயரம் தொடர்பான விஷயங்கள் சீராக இல்லாத சூழல் ஏற்படுவதை பரவலாக பார்க்க முடிகிறது.
இதில் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் கட்டடத்தின் பிரதான சுவரை ஒட்டி மாடிப்படிகள் அமைக்கப்படுகின்றன.
இவ்வாறு பிரதான சுவரை ஒட்டி மாடிப்படி அமைக்கும் போது, அதில் ஒரு பக்கம் மட்டுமே கைப்பிடி சுவர் அமைக்க வாய்ப்பு இருக்கும். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் இந்த படிகளை பயன்படுத்தும் போது, ஒரு பக்கம் மட்டும் கைப்பிடி சுவர் இருப்பதால் மறு பக்கத்தில் பிடிமானம் கிடைக்காமல் நிலைத்தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுவதாக பரவலாக புகார்கள் எழுகின்றன.
இது போன்ற இடங்களில் பிரதான சுவரில் இரும்பால், ‘ஹேண்ட்ரயில்’ எனப்படும் கைப்பிடிகளை அமைப்பது பரவலாக அதிகரித்துள்ளன. இதில் மாடிப் படிகளில் உலோக கைப்பிடி அமைக்கும் போது, அதற்கு முந்தைய நுழைவுப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று படிகள் மட்டும் அமையும் இடங்கள் மிகவும் ஆபத்தானதாக உள்ளது.
மாடிப்படி துவங்கும் இடத்தில், 2 அல்லது 3 படிகள் அமையும் இடத்தில், சிறிய அளவில் கைப்பிடிகளை அமைப்பதால் விபத்துகளை தடுக்கலாம்.
அடுக்கு மாடி திட்டங்களில் புதிதாக வீடு வாங்கும் போது இது போன்ற கூடுதல் கைப்பிடி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment