Thursday, September 5, 2024

அரசு ஒதுக்கீட்டில் வீடு, மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

 அரசு ஒதுக்கீட்டில் வீடு, மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!
பொதுவாக வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், தேடலில் ஈடுபடும் மக்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  இதில் பெரும்பாலும் தனி நபர் பெயரில் உள்ள சொத்துக்களை தான் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


விற்பனைக்கு வரும் வீடு அல்லது மனை, அந்த நபருக்கு எப்படி வந்தது என்பது தொடர்பான விபரங்களை ஆவண அடிப்படையில் ஆராய வேண்டும்.  குறிப்பாக, தனி நபரிடம் இருந்து அந்த சொத்து வாங்கப்பட்டதா என்பது தொடர்பான விஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.


ஆனால், பல இடங்களில் அரசு துறையில் இருந்து ஒதுக்கீடு வாயிலாக, வீடு, மனை பெற்றவர்கள் அதை விற்க முன்வருகின்றனர்.  அரசு திட்டத்தில் உள்ள சொத்து என்பதால், பெரிய அளவில் வில்லங்கம் இருக்காது என்று மக்கள் நினைக்கின்றனர்.


சாதாரணமாக, தனியார் நிறுவனத்தின் திட்டத்துக்கும், அரசு நிறுவனத்தின் மனைப்பிரிவு திட்டத்துக்கும் பல்வேறு நிலைகளில் வேறுபாடுகள் இருக்கும்.  அரசு நிறுவனத்தின் திட்டம் என்றால் அதில் விதிமீறல்கள் இருக்காது, அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்னைகள் இருக்காது என்று மக்கள் நினைக்கின்றனர்.


இது போன்ற சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது அதை வாங்குவதற்கு மக்கள் இயல்பாகவே முன்னுரிமை கொடுப்பதை பார்க்க முடிகிறது.  ஆனால், இத்தகைய சொத்துக்கள் எந்த வழிமுறையில் அந்த நபருக்கு அரசால் ஒதுக்கப்பட்டது என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.  பொதுவாக, அரசு நிறுவனங்களில் வீடு, மனை ஒதுக்கீட்டில் சமூக ரீதியான இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு இருக்கும்.  இதில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு சலுகை வலையில், வீடு, மனை ஒதுக்கப்படுகிறது என்றால், அதை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது.


ஆனால், பொருளாதார தேவை என்ற அடிப்படையில் அரசு ஒதுக்கிய வீடு, மனையை அதை பெற்றவர்கள் விற்க முற்படுகின்றனர்.  வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை வாயிலாக பட்டியலினத்தவர், பழங்குடியினர் பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட வீடு, மனையை வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.


தவணைகளை முழுமையாக செலுத்தி விற்பனை பத்திரம் பெற்ற நிலையில் உரிமையாளர் அதை விற்பதில் தவறு என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம்.  உண்மையில் இது போன்ற சொத்துக்களை ஒதுக்கும் போது, அதற்கான உத்தரவில், 10 ஆண்டுகளுக்கு அவர் வெளியாட்களுக்கு விற்க கூடாது என்ற அடிப்படையில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கும்.


எனவே, இது போன்ற சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது, அதை வாங்க முற்படும் நபர்கள், 10 ஆண்டு நிபந்தனைகள் முடிந்துள்ளதா  என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.  நிபந்தனை காலத்தில் அந்த சொத்து வேறு பிரிவை சேர்ந்தவர்கள் வாங்கினால், அது விதிமீறலாக பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள்.

No comments:

Post a Comment

Bigger the house, bigger the responsibilities

  Here is a look at the aftermath of upgrading to a larger space Regardless of the size of the current home, many homeowners often nurture t...