வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதற்கான கிரைய பத்திரத்தை தயாரிப்பது, பதிவுக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த விஷயங்களில் மிக கவனமாக இருந்தாலும் நம்மை அறியாமல் சில விஷயங்கள் தவறாக போவதற்கு வாய்ப்பு உள்ளது.
பதிவுக்கு பின் பத்திரத்தில் தவறுகள் தெரிய வந்தால், அதை சரி செய்வதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இதற்காக தவறுகள் நடந்தால் பரவாயில்லை என்ற ரீதியில் பத்திர விஷயத்தில் அலட்சியம் காட்டினால், அது பெரிய இழப்புகளை ஏற்படுத்தி விடும்.
குறிப்பாக, நீங்கள் வாங்கும் சொத்து தொடர்பாக என்னென்ன பத்திரங்களின் பிரதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும். விற்பனை செய்பவர் பெயரில் உள்ள பத்திரம், யார் பெயரில் இருந்து அவருக்கு வந்தது என்பதை குறிப்பிடும் பத்திரம் ஆகியவற்றை கேட்டு வாங்க வேண்டும்.
இந்த பத்திரங்களில் சொத்து குறித்த விபரங்கள் சரியாக இருக்கிறதா, ஒன்றுக்கொன்று ஒத்துபோகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இவற்றில் உள்ள விபரங்கள் அடிப்படையில், தற்போதைய சொத்து பரிமாற்றத்துக்கான புதிய கிரைய பத்திரத்தை தயாரிக்க வேண்டும்.
ஒரு சொத்தின் பழைய ஆவணங்களின் அசல் பிரதி இல்லாமல் புதிய கிரைய பத்திரத்தை பதிவு செய்ய செல்லாதீர்கள். சில இடங்களில் பழைய பத்திரங்கள் வங்கியில் கடனுக்கு ஈடாக கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தால், கடனை முடித்து பத்திரங்களை வாங்க வேண்டும்.
குறிப்பாக, சொத்தின் தாய் பத்திரம் எது என்பதை அறிந்து, அதன் அசல் பிரதியை வாங்குவது அவசியம். தற்போது நீங்கள் வங்கிக்கடன் வாயிலாக சொத்து வாங்குவதாக இருந்தாலும், அதற்கான கிரைய பத்திரம் மட்டுமே வங்கிக்கு செல்லும், அதற்கு முந்தைய அசல் பத்திரங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்.
விற்பனைக்கு வரும் சொத்தின் தாய் பத்திரம் என்று காட்டப்படும் பத்திரம் உண்மையானது தானா என்பதை நீங்கள் சரி பார்ப்பது அவசியம். சில சமயங்களில் போலியான பத்திரங்களை தயாரித்து, அது தான் அசல் தாய் பத்திரம் என்று குறிப்பிட்டு சொத்தை சிலர் விற்பனை செய்கின்றனர்.
பொது அதிகார முகவரிடம் இருந்து சொத்து வாங்குவதாக இருந்தால், அவருக்கு பவர் எப்போது, எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட சொத்தின் பொது அதிகாரம் கொடுத்தவர் தற்போது உயிரோடு இருக்கிறாரா என்பதை விசாரிக்காமல் பரிமாற்றத்தில் ஈடுபடாதீர் என்கின்றனர் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
No comments:
Post a Comment