வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அது தொடர்பான என்னென்ன பத்திரங்களை சரி பார்க்க வேண்டும் என்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, விற்பவருக்கு அந்த சொத்து எழுதி கொடுக்கப்பட்ட பத்திரம் சரியாக இருந்தால் மட்டும் போதும் என்று பலரும் நினைக்கின்றனர்.
இதற்கு அப்பால், அவருக்கு முன் அந்த சொத்து எப்படி கைமாறியது என்பதை அறிய சொத்துக்கான தாய் பத்திரத்தை கேட்டு வாங்கி ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு சொத்துக்கும் தாய் பத்திரம் எது என்பதை கேட்டு வாங்கி பார்க்காமல், பரிமாற்றம் தொடர்பான நடவடிக்கையில் இறங்க கூடாது.
சரி, விற்பனைக்கு வரும் சொத்தின் உண்மை தன்மை அறிய அதன் தாய் பத்திரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை, அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், ஒவ்வொரு சொத்துக்கும் எது தாய் பத்திரம் என்பதை தெளிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் தெரியாதது தான் இங்கு பிரச்னையாக உள்ளது.
இன்றைய சூழலில் ஒரு வீடு அல்லது மனை விற்பனைக்கு வருகிறது என்றால், அதை விற்பவர் பெயரில் ஒரு கிரைய பத்திரம் இருக்கும்.
அந்த பத்திரம் எதன் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதற்கான பூர்வாங்க ஆதாரமாக ஒரு பத்திரம் இருக்கும் அல்லவா அது தான் அடிப்படையில் தாய் பத்திரம் என்று கருதப்படும்.
அதாவது, தற்போது விற்கும் உரிமையாளர் பெயருக்கு நேரடியாக கிரையம் கொடுக்க எழுதப்பட்ட, இதற்கு முந்தைய முழுமையான ஆவணம் தான் தாய் பத்திரம் என்று குறிப்பிடப்படும்.
இதில் பல இடங்களில் தற்போது, விற்பவர் பொது அதிகார முகவராக இருக்கலாம், அவருக்கு முந்தைய நபர் முழுமையான உரிமையாளராக இருக்கலாம்.
இதில் இந்த உரிமையாளர் பெயருக்கு சொத்து கொடுக்கப்பட்ட பத்திரத்தை தாய் பத்திரம் என்று பலர் நம்பி ஏமாறுகின்றனர். இதே போன்று கடைசி கிரைய பத்திரம் வைத்துள்ள உரிமையாளருக்கு முன், பொது அதிகார பத்திரம், செட்டில்மென்ட், உயில் போன்ற பத்திரங்கள் இருந்தால் அவை தாய் பத்திரம் ஆகாது.
நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து தொடர்பான, முந்தைய முறையான கிரைய பத்திரம் எது என்பதை தேடி பார்த்து, அது தான் தாய் பத்திரம் என்று வரையறுக்கப்படும். சில சமயங்களில், பாகப்பிரிவினை, செட்டில்மென்ட், உயில், விடுதலை போன்ற ஆவணங்கள் வழியே சொத்து பெறப்பட்டு இருக்கும்.
இந்த ஆவணங்கள் தாய் பத்திரங்கள் ஆகாது என்பதால், இதற்கு முந்தைய நிலையில் கிரையம் நடந்த முறையான பத்திரம் எது என்பதை தேடி பார்த்து வாங்கி ஆய்வு செய்ய வேண்டும்.
இதில், முறையான தாய் பத்திரம் பார்க்காமல் சொத்து வாங்கினால் அது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் பதிவுத்துறை அலுவலர்கள்.
No comments:
Post a Comment