Wednesday, September 4, 2024

சொத்துக்குள் நுழையும் வெளியாட்களை வகைப்படுத்தி அறிவது அவசியம்!

 சொத்துக்குள் நுழையும் வெளியாட்களை வகைப்படுத்தி அறிவது அவசியம்!
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கினால் மட்டும் போதாது, அதை முறையாக பாதுகாப்பதற்கான அடிப்படை வழிமுறைகள் தெரிந்து இருக்க வேண்டும்.  நீங்கள் வாங்கிய சொத்துக்குள் யார், எதற்காக வரலாம் என்பதை முடிவு செய்வது நீங்கள்தான். 


சொத்தின் முழுமையான உரிமையாளர் என்ற அடிப்படையில், அதற்குள் யார் எந்த நோக்கத்துக்காக வருவது என்பதை நீங்கள்தான் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.  உங்களுக்கு சொந்தமான சொத்தை பத்திரப்பதிவு செய்து வாங்கினால் மட்டும் போதாது, அதன் முறையான கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்க வேண்டும்.


ஒரு நபர் வாங்கிய சொத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் உரிமையுடன் உள்ளே வருவர் என்பதால், இதில் எவ்வித பிரச்னையும் இல்லை.  அதே நேரம் தவறான நோக்கத்தில் சிலர், சொத்துக்குள் அத்துமீறி நுழைந்து பிரச்னை செய்வதை தவிர்க்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு தான்.


இதில், ஒருவருக்கு சொந்தமான சொத்துக்குள் வரும் வெளியார் குறித்த வரையறை என்ன, வகைபாடு என்ன என்பதை அறிய வேண்டும்.  சொத்துக்குள் வருவோரை, விருந்தினர்கள், உரிமம் பெற்ற நபர்கள், அத்துமீறி நுழைபவர்கள் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.


விருந்தினர்கள் என்றால், உரிமையாளரால் விரும்பி அழைக்கப்படும் நபர்கள் என்று பொருள்.  இதில் உரிமையாளரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பணி நிமித்தம் உரிமையாளரால் அழைக்கப்பட்ட தொழிலாளர்களும் இந்த வரையறைக்குள் அடங்குவர்.


நீங்கள் வாங்கிய சொத்துக்குள் அலுவலர் நிமித்தமாக குறிப்பிட்ட சில நபர்கள் நுழைய வேண்டிய தேவை இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.  மின்சார இணைப்பு, தொலைபேசி இணைப்பு, குடிநீர், வடிகால் இணைப்பு, தபால்காரர், உணவு டெலிவரி நபர்கள், சொத்து வரி மதிப்பீட்டாளர், கட்டட அனுமதி தொடர்பாக ஆய்வு செய்பவர்கள், காவல்துறையினர் போன்றோர் உரிமம் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் நுழைவர்.


இந்த இரண்டு வகைப்பாட்டிலும் அடங்காத சிலர், உங்கள் சொத்துக்குள் வேண்டுமென்றே நுழைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.  உங்களுக்கு தெரியாமல், உங்கள் வீட்டில் இருந்து ஏதாவது பொருட்களை களவாடும் நோக்கத்தில் சிலர் நுழையலாம்.  மேலும் இதில், வேறு சில குற்ற எண்ணத்துடன் சிலர் உங்களுக்கு தெரியாமல் சொத்துக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.


குறிப்பாக, உங்களுக்கு வேண்டுமென்றே பாதகம் ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் இன்றி, குறிப்பாக அது உங்கள் சொத்து என்பதையும் அறியாமல் சிலர் சொத்தின் வழியே கடந்து செல்வர்.  இதுவும் ஒரு வகையில் அத்துமீறிய நுழைவு என்று தான் வகைப்படுத்தப்படும்.


இவ்வாறு வெளியாட்களை வகைப்படுத்தி, அதில் யாரை அனுமதிக்க கூடாது என்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்கி உரிமையாளர்கள் செயல்படுத்த வேண்டும்.  அப்போதுதான் சொத்து பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

No comments:

Post a Comment

Virtual home tours beyond ease and convenience

  Virtual home tours beyond ease and convenience Digital tours are also contributing to a greener planet by minimising the number of resourc...