பொதுவாக முதன்முதலில், ஒரு வீடு அல்லது மனை வாங்குவது என்றால் அதற்கான தேடலில் ஈடுபடும் நிலையில் மக்கள் அதிக ஆர்வத்துடன் செயல்படுவர்.
பிரதான நகரத்தில் வீடு வாங்கி குடியேறிய நிலையில் எதிர்கால தேவைக்கு, குறைந்த விலையில் வீட்டு மனை வாங்கலாம் என்று நினைக்கின்றனர்.
இவ்வாறு முதலீட்டு நோக்கத்தில் மனை வாங்குவது எந்த விதத்திலும் தவறு இல்லை. ஆனால், இதற்கான செயல்பாடுகளில் முழுமையான விழிப்புடன் நடந்துகொள்ள தவறினால், உங்கள் முதலீடு உரிய பயனை அளிப்பதற்கு பதில் ஏமாற்றத்தை அளிக்கும் நிலை ஏற்படும்.
பொதுவாக, நமக்கு தெரிந்தவர்கள் மத்தியில் குறைந்தபட்சம் ஒருவர் அல்லது இரண்டு பேராவது, வெளியூரில் மனை வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், நான் வாங்கிய மனையை இதுவரை நேரில் சென்று பார்த்ததே இல்லை என்று பரவலாக கூற கேட்டு இருப்போம்.
இத்தகைய நபர்கள், வாங்கிய மனை என்பது அவர்களிடம் இருக்கும் பத்திரத்தில் மட்டுமே காணப்படும். நேரில் சென்றால், அந்த குறிப்பிட்ட ஊரில் அவர் வாங்கிய மனையை அடையாளம் கூட தெரியாத அளவுக்கு தான் பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்.
தவணை முறையில் பணம் கட்டினேன், மனை கொடுப்பதாக கூறினார்கள், பத்திரப்பதிவுக்கு என்று ஒரு குறிப்பிட்ட ஊருக்கு அழைத்தார்கள் சென்று பதிவு முடித்தோம். பத்திரம், பட்டா அனைத்தையும் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனமே கொண்டு வந்து கொடுத்துவிட்டது.
அந்த பத்திரங்களை வாங்கி, அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறோம், ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள நிலம் எங்கு, எப்படி இருக்கும் என்று தெரியாது என்ற நிலையில் பலரும் வலம் வருகின்றனர்.
உண்மையில் இது போன்று முறையான பத்திரங்கள் கையில் இருக்கிறது என்று அமைதியாக இருக்கும் நபர்களின் வாரிசுகள், பின்னர் நிலத்தை தேடி செல்லும் போது தான் பிரச்னையே தெரியவரும்.
பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள கிராமத்தில் சர்வே எண் மற்றும் மனை எண் விபரங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து தேடினால் நிலம் எங்கு இருக்கிறது என்று தெரியாது.
இது போன்று நிலத்தை நேரில் பார்க்காத நிலையில், நீங்கள் வாங்கிய சில ஆண்டுகளிலேயே அது வேறு நபர்களால் அபகரிக்கப்பட்டு இருக்கும்.
எதிர்காலத்தில் அந்த நிலத்தை பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைத்து காத்திருந்தால், அங்கு வேறு நபர்கள் வீடு கட்டி வசிப்பார்கள்.
முதலீட்டுக்கான இப்படி நேரில் பார்க்காமல் சொத்து வாங்கினால், அதை இழப்பதற்கு நீங்களே தயார் என்று தான் பிறர் பொருள் கொள்வார்கள்.
மனை வாங்கும் போது அதை நேரில் சென்று பார்த்து வாங்குவது மட்டுமல்லாது, குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்வையிடுவதும் அவசியம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
No comments:
Post a Comment