சொத்து வாங்கும்போது பவர் பத்திர பிரச்னையில் சிக்காமல் இருக்க!
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோர், ஆவண ரீதியாக பல்வேறு விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். ஒரு சொத்தை அதன் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும்.
பொதுவாக ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது என்றால், அதை விற்பவர் அதன் முறையான உரிமையாளரா என்று பார்க்க வேண்டியது அவசியம். சில சமயங்களில் சொத்தின் உரிமையாளர்கள் அதை விற்பதற்கு பொது அதிகார அடிப்படையில் முகவர்களை நியமிப்பது வழக்கம்.
இதில் சொத்தின் உரிமையாளர் நேரடியா முன்னின்று விலை பேசுவது உள்ளிட்ட பணிகளை முடித்தாலும், பத்திரப்பதிவுக்கு வர இயலாத நிலையில் இருக்கலாம். இத்தகைய சூழலில், அவர் தனது சார்பில், விற்பனை ஆவணத்தில் கையெழுத்திட்டு பதிவு பணிகளை முடிக்க பொது அதிகார அடிப்படையில் ஒரு முகவரை நியமிக்கலாம்.
இவ்வாறு நியமிக்கப்படும் முகவர் விஷயத்தில், அனைத்து விஷயங்களும் உரிமையாளரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால் பெரிய சிக்கல் ஏற்படாது. ஆனால், சில இடங்களில் உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு பொது அதிகாரம் அளித்துள்ள நிலையில் முகவர்கள் தான் விற்பனை செய்வர்.
இது போன்ற சொத்துக்களை வாங்கும் போது, அதற்கான பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர் உயிருடன் இருக்க வேண்டும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.
குறிப்பாக, அந்த பொது அதிகார ஆவணத்தை உரிமையாளர் ரத்து செய்யாமல் இருக்கிறார் என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
பொது அதிகார பத்திரத்தை உரிமையாளர் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியும் என்பதால், நீங்கள் வாங்கும் சொத்துக்கான பொது அதிகார ஆவணம் ரத்து செய்யப்படாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
பொது அதிகார பத்திரத்தை உரிமையாளர் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியும் என்பதால், நீங்கள் வாங்கும் சொத்துக்கான பொது அதிகார ஆவணம் ரத்து செய்யப்படாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
இதே போன்று, பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர் உயிருடன் இருப்பதும் மிக மிக அவசியம். சில இடங்களில் பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர், அதை ரத்து செய்யாமல், வேறு ஒரு நபரிடம் விலை பேசி சொத்தை விற்க முயற்சிக்கலாம்.
இதேபோன்ற சூழலில், சொத்து வாங்குவோர் அலட்சியமாக இருந்தால், பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
பொது அதிகாரம் பெற்ற நபர் இறந்துவிட்டால், அவரது சார்பில் வேறு நபர்கள் அந்த ஆவணத்தை பயன்படுத்த முடியாது. இது போன்று பொது அதிகார முகவர் இறந்த நிலையில் வேறு நபர்கள் சொத்தை விற்க முயற்சித்தால் அதை வாங்கும் நபர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அசையா சொத்துக்களை வாங்கும் போது பொது அதிகார முகவர்களை முழுமையாக நம்புவதில் ஏற்படும் பிரச்னைகளை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.
தவறினால், சில சமயங்களில் அந்த சொத்து மொத்தமாக பறிபோகும் நிலையும் ஏற்படலாம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment