பட்டா பெயர் மாற்ற விவகாரத்தில் முட்டிக்கொள்ளும் அரசு துறைகள்!
சொத்து விற்பனையில் பத்திரப்பதிவுக்கு பின் பட்டா பெயர் மாற்றம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
இதில், பத்திரப்பதிவு முடித்த பலரும் பட்டா மாறுதலுக்கு செல்லாமல் அலட்சியமாக உள்ளனர்.
வீடு மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கான பத்திர பதிவு முடிந்த பின், அவற்றிற்குரிய பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கான படிவம் பத்திர பதிவு துறை வாயிலாக வருவாய் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டா பெயர் மாறுதல் படிவம் (படிவம்-6) அனுப்பும் வசதி கணினி மூலம் செய்யப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு பத்திர பதிவுக்குப் பின், அதற்கான பட்டா பெயர் மாற்றம் செய்யும் படிவத்தை இணைய வழி மூலம் வருவாய் துறைக்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.
அவ்வாறு அனுப்பப்பட்டதற்கு சான்றாக ஒப்புகை சீட்டு எண்ணுடன் பத்திராதரருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும் வசதியும் இருந்தது.
வீடு, மனை போன்ற சொத்துக்களை முழுமையாகவோ, பகுதியாகவோ வாங்கினால், அது தொடர்பான பட்டாவில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும். நீங்கள் யாரிடம் சொத்து வாங்குகிறீர்கள் என்று பார்க்கும் போது அவர் பெயரில் பட்டா இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, விற்பவர் பெயரில் பட்டா இருந்தால் மட்டுமே பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், சில நடைமுறை சிக்கல்களால் இதில் சார்-பதிவாளர்கள் கடுமை காட்டாமல் இருக்கின்றனர்.
இதனால், பல இடங்களில் பட்டா பெயர் மாற்றத்துக்கு மக்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில், முழுமையாக விற்பனையாகும் சொத்துக்களின் பட்டாக்களில் தானியங்கி முறையில் பெயர் மாற்றத்துக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தரும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் உட்பிரிவு விஷயத்தில் சில பிரச்னைகள் எழுகின்றன.
இதில், தனியார் சர்வேக்களை உரிமம் அளித்து பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக, தனியார் சர்வேயர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன.
இத்துடன், கிராம நிர்வாக அலுவலர்களையும், உட்பிரிவு பட்டா வழங்கும் பணியில் ஈடுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு பட் ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு நில அளவை துறையினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு போதிய அனுபவம் இருக்காது என்று நில அவையாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், நடைமுறையில் நில அளவையாளர்களை காட்டிலும், கிராம நிர்வாக அலுவலர்கள்தான் பல விஷயங்களில் தேர்ந்தவர்களாக உள்ளனர். நில அளவை துறை சார்ந்த சில தொழில்நுட்பங்கள் வேண்டுமானால், அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.
நடைமுறையில் கிராமங்களில் எந்த நிலம் எப்படி உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது என்பதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நன்றாகவே புரிதல் இருப்பது மக்களுக்கு தெரியும். எனவே, இது விஷயத்தில் மோதலை தவிர்த்து, நில அளவை துறையினர் அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பதே நல்லது என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.