நில நிர்வாகத்தில் மாறுதல் பதிவேட்டில் சேர்க்கப்படும் தகவல்கள் என்ன?
தமிழகத்தில் நில நிர்வாகத்தில் வருவாய் துறையே பிரதான அதிகாரம் பெற்றுள்ளது. இதில் எந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது என்பதில் துவங்கி, அதன் வகைப்பாடு போன்ற தகவல்களும் இவர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
வருவாய் துறையில் நில நிர்வாக பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், நில அளவை என தனித்தனி பிரிவுகள் இருக்கின்றன. இவற்றின் பணிகள் குறித்து பொது மக்கள் தெரிந்துக் கொள்வதில்லை.
இதனால், நில உரிமை தொடர்பான பிரச்னைகளில் தீர்வு பெறுவதில் அதிக தாமதம் ஏற்படுகிறது. பொதுவாக, நிலம் வாங்குவோர் பட்டா, ‘அ’ பதிவேடு போன்ற ஆவணங்களை மட்டுமே பார்க்கின்றனர். இதற்கு அப்பால் மேலும் சில ஆவணங்கள் வருவாய் துறையால் பராமரிக்கப்படுகின்றன. இவர்களை சரியாக புரிந்து கொண்டால் நில நிர்வாக குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
வருவாய் துறையில் ‘மூன்றாம் எண் மாறுதல் பதிவேடு’ பராமரிக்கப்படுகிறது. நில அளவை துறை அதிகாரிகள் பராமரிப்பில் இந்த பதிவேடு இருக்கும். இந்த பதிவேட்டில், தாலுகா அலுவலகத்தில் இருந்து வரும் பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல் உத்தரவு விபரங்கள் இடம் பெறும்.
ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களின் சர்வே விபரங்கள், பட்டா விபரங்கள், செட்டில்மென்ட் நில விபரங்கள் இந்த பதிவேட்டில் சேர்க்கப்படும். பெரும்பாலும் இது அலுவலக பயன்பாட்டுக்காக மட்டுமே இருக்கும்.
பொது மக்கள் பார்வைக்கு இந்த பதிவேடு அளிக்கப்படமாட்டாது. ஒரு நிலம் அரசுக்கு சொந்தமானதா, தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்டதா என்பதை அறிய இப்பதிவேடு உதவும்.
அரசு நிலங்கள் மோசடியாக தனியாரால் அபகரிக்கப்பட்டால், அது குறித்த விசாரணையில், இந்த பதிவேட்டு விபரங்கள் சாட்சியாக இருக்கும் என்கின்றனர் நில அளவை துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment