Friday, August 25, 2023

சொத்து நிர்வாகத்தில் குடும்ப ஏற்பாட்டுக்கும், பாகப் பிரிவினைக்கும் வேறுபாடு என்ன?

 சொத்து நிர்வாகத்தில் குடும்ப ஏற்பாட்டுக்கும், பாகப் பிரிவினைக்கும் வேறுபாடு என்ன?


 சொத்துக்கள் இருந்தால் எதிர்காலத்தில் குடும்பத்துக்கு நல்லது என அனைவரும் நம்புகின்றோம்.

     ஆனால், சொத்துக்களை, ஒவ்வொருவருக்கும் பங்கு பிரித்துக்கொடுப்பதில் ஆயிரமாயிரம் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

     இப்படியான பரம்பரை சொத்துக்களை பங்கிட்டு கொள்வதில் ஏற்படும் சச்சரவுகளில் குடும்பத்தின் கவுரவம் பாதிக்காமல் இருக்க வேண்டும் என சிலர் நினைப்பர்.

      இதற்கான தீர்வாய் தான் இந்த பேமிலி அக்ரிமென்ட்எனப்படும் குடும்ப ஏற்பாடு முறை வந்தது.  இதுபோன்ற பல சொத்து பிரச்னைகளுக்கு இந்த முறை கைக்கொடுக்கிறது.  குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் வகையிலான ஒப்பந்தம் செய்து கொள்வதே இதன் அடிப்படை.

      தங்கள் குடும்பத்துக்குள் ஏற்படும் சொத்துப் பிரச்னையை குடும்ப உறுப்பினர்களே பேசி சரி செய்து, பங்கிட்டுக் கொள்வதை சட்டம் நேரிடையாக அங்கீகரிக்காது.  அதாவது, குடும்ப ஏற்பாட்டை ஒரு சொத்து பரிமாற்றமாக சட்டம் கருதாது.  ஆனால், ஒருவர் தனக்கான உரிமையை இன்னொருவருக்கு விட்டு கொடுப்பதை சட்டம் இதன் வாயிலாக அங்கீகரிக்கிறது.

      குடும்ப ஏற்பாடு என்பது, சிறியோர், பெரியோர் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் உள்ளடக்கியதாக அமையும்.  குறிப்பாக, மைனர்களையும், கருவில் இருக்கும் சிசு உள்பட, அனைத்து நிலையிலும் யார் யாருக்கு உரிமை கோர வாய்ப்பு இருக்கிறதோ அனைவரையும் உள்ளடக்கியதாக உள்ளது.

       நம் நாட்டில் குடும்ப ஏற்பாடு, ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிமுறையாக இல்லாமல் அதற்கு அப்பாற்பட்ட நிலையில் அனைவருக்கும் பொதுவானதாக அமைந்துள்ளது.  எனவே, சட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் குடும்ப ஏற்பாடு சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

        இது பாகப்பிரிவினை ஆவணத்தை விட, சில குறிப்பிட்ட அம்சங்களில் வேறுபடுகிறது.  குறிப்பாக, தகராறு ஏற்படும் என்ற யூகத்தின் அடிப்படையில், அதை தவிர்க்க, சுமுகமாக பங்கீட்டுக்கு குடும்ப ஏற்பாடு மேற்கொள்ளலாம்.

    சொத்துக்காக, தகராறு ஏற்பட்டு, பல ஆண்டுகளாய் நிலுவையில் இருக்கும் பல வழக்குகளை நம் நீதி மன்றமும், நாமும் அறிவோம்.  அப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க, இந்த குடும்ப சொத்து ஏற்பாடு உதவுகிறது.

    சொத்து பங்கீடு உயில் மூலம் நடக்கும் போது, பல வரையறைகள் உண்டு.  உயிலில் இல்லாத நபர்கள் அடங்கியிருக்காது.  இதற்கு பஞ்சாயத்து பேச வெளியாட்கள் உள் நுழைவர்.  குடும்பத்து ஆட்களை தாண்டி சொத்து வெளியாட்களிடமும் செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.  உயில் வாயிலான பாகப்பிரிவினையில், குடும்பத்துக்கு வெளியில் உள்ளவர்களும் சில சமயம் உள்ளே வருவர்.  ஆனால், குடும்ப ஏற்பாடு என்ற வழிமுறையில், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வருவர்.

    குடும்ப ஏற்பாடு என்பதில் உறுப்பினர்கள் ஒட்டுமொத்த பொது நலன் அடிப்படையில் சொத்து மீதான தன் உரிமையை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க வாய்ப்புகள் உண்டு.இதில், ஒரு முறை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தேவை அடிப்படையில் திருத்த வாய்ப்பு உள்ளது.

    ஆனால், பாகப்பிரிவினையில் இத்தகைய வழிமுறைகள் இல்லை.  இதனால், பாகப்பிரிவினை அடிப்படையில் சொத்துக்களை பங்கிடுவதை காட்டிலும், குடும்ப ஏற்பாடு என்ற பெயரில் உரிமையை தாமாக முன்வந்து பகிர்ந்து கொள்ளலாம் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.


No comments:

Post a Comment

When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...