சட்ட வரம்பு தெரியாமல் செயல்படும் குடியிருப்போர் சங்கங்களால் ஏற்படும் சிக்கல்கள்!
இன்றைய சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்வகிப்பது சவாலான பணியாக உள்ளது. இதற்கு அதில் வீடு வாங்கிய உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து கொள்ள வேண்டும்.
இதில் குடியிருப்போர் சங்கங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த அடுக்குமாடி குடியிருப்போர் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1994 ல் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான வீட்டு உரிமையாளர் சங்கங்கள், 1975 ம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் படியே பதிவு செய்யப்படுகின்றன.
இந்த இரு சட்டங்களில் குறிப்பிட்ட விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் அடிப்படையிலேயே வீட்டு உரிமையாளர் சங்கங்கள் செயல்பட வேண்டும். இதை கண்காணிக்க வேண்டியது பதிவுத்துறையின் சங்கங்கள் பதிவாளரின் பொறுப்பு.
ஆனால், தற்போதைய சூழலில் பெரும்பாலான சங்கங்கள் செயல்பாடு முறையாக ஆய்வு செய்யப்படுவதில்லை. இதில் குறிப்பாக சங்கங்களின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவற்றின் செயல்பாடுகள் இருக்கிறதா என்பதை பதிவாளர்கள் ஆய்வு செய்வதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறதா, வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டதா என்று மட்டுமே அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இவ்வாறு, கணக்கு தாக்கல் செய்யாதது மட்டுமே குறைபாடாக பார்க்கப்படுகிறது.
கூட்டம் நடத்தி, வரவு செலவு கணக்கு தாக்கல் செய்கிறோம் என்று சங்க நிர்வாகிகள் அளிக்கும் ஆவணங்களை கண்மூடி தனமாக அதிகாரிகள் ஏற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. வரவு செலவு கணக்குகள் முறைப்படி உள்ளதா, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா என்று பதிவாளர்கள் ஆராய்வது இல்லை.
இதனால், என்ன நடந்து விட போகிறது என்று மக்கள் நினைக்கலாம். இப்படி முறையாக ஆராயப்படாத சங்கங்களால், பல்வேறு சட்ட விதிமீறல்கள் நடக்கின்றன.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக கூட சில சங்கங்களின் தீர்மானங்கள் அமைந்து விடுகின்றன. இதில் உறுப்பினர்கள் யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் அது குறித்து சங்கங்கள் பதிவாளர் விசாரணை மேற்கொள்வார்.
அப்போதும், பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுவது இல்லை. சங்கங்கள் பதிவாளர் தீர்மான திருத்தம் தொடர்பாக அளிக்கும் உத்தரவுகளும் முறையாக கடைபிடிக்கப் படுவதில்லை.
இதில் பெரும்பாலான சமயங்களில் சட்ட விதிகளை மீறுகிறோம் என்பது தெரியாமலேயே பல சங்கங்கள் செயல்படுகின்றன. இது விஷயத்தில் அரசு தெளிவான நடைமுறைகளை வகுக்க வேண்டும்.
அப்போது தான் சங்கங்கள் தொடர்பான உரிமையில் வழக்குகள் வருவது குறையும் என்கின்றனர் சங்கங்களின் நிர்வாகிகள்.
No comments:
Post a Comment