சொந்த வீடு வாங்க காலத்துக்கு ஏற்ப மாறும் எதிர்பார்ப்புகள்!
சமுதாய அந்தஸ்து, பாதுகாப்பான தங்குமிடம் என்பது போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தங்களுக்கான வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன.
இது தற்போதைய காலத்திலும் அப்படியே தொடர்கிறது என்றாலும், இதில் வீடு தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளில் மாற்றங்கள் வந்துள்ளன. ஒரு காலத்தில் பாதுகாப்பாக தங்குவதற்கு ஒரு வீடு கிடைத்தால் போதும் என்று இருந்த மக்கள், தற்போது நவீன யுகத்துக்கு ஏற்ற வசதிகளை எதிர்பார்க்கின்றனர்.
இதன் அடிப்படையில் தான் வீடு வாங்கும் எண்ணத்தை செயல் படுத்த மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தனியாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் அல்லது, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கி குடியேற வேண்டும் என்ற நிலை தான் தற்போது உள்ளது.
இதில் பாதுகாப்பான உறைவிடம் என்பதுடன் மற்றவர்கள் நம் வீடு குறித்து அதன் அடிப்படையில் நம் வாழ்க்கை நிலையை உயர்வாக நினைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர். இதற்காக வீடுகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் தான் செலவுகளை அதிகரிக்கின்றன.
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது உங்களது அத்தியாவசிய தேவை என்றாலும் அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் அல்லது கட்டும் சொந்த வீடு, உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பயன்படுத்த ஏற்ற வகையில், பாதுகாப்பு உணர்வை அளிப்பதாக அமைய வேண்டும்.
அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நமது அந்தஸ்து உயர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அதே நேரம் இந்த நினைப்பை செயல்படுத்துவதில் தேவையில்லாத வகையில் கூடுதல் செலவுகளை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
நீங்கள் வாங்கும் வீடு சட்ட விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளதா, நிலம், கட்டட வரைபடம் தொடர்பான அரசு அங்கீகாரம், ஒப்புதல் முறையாக பெறப்பட்டுள்ளதா என்று பாருங்கள். அந்த வீட்டை யாரிடம் இருந்து எந்த அடிப்படையில் வாங்குகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
கட்டடம் முறையாக பயன்படுத்த தகுதியான நிலையில் இருப்பதை உறுதி செய்யாமல், அதை வாங்குவதில் இறுதி முடிவு எடுக்காதீர்கள். ஒருமுறை அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டால் அதை எளிதில் சரி செய்ய முடியாது என்பதை கவனத்தில் வைத்து, இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.