இந்த நோக்கம் அனைவருக்கும் இயல்பாக ஏற்படுவது உண்மை தான். ஆனாலும், எதிர்காலத்தில் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வாங்கப்படும் மனைக்கு என்னென்ன சிக்கல்கள் வரும் என்று பார்க்க வேண்டும்.
அரசு திட்டத்துக்காக கையகப் படுத்தப்படும் வாய்ப்புள்ள நிலங்களை சிலர் மனையாக விற்பனை செய்துவிடுகின்றனர். இவ்வாறு, விற்பனைக்கு வரும் மனையை சிலர் ஆசைப்பட்டு வாங்கி விடுகின்றனர்.
சொத்து வாங்கப்பட்டு பத்திரப்பதிவு முடிந்து பட்டா மாறுதலுக்காக செல்லும் போது சில சமயங்களில் கையகப்படுத்துதல் பிரச்னை தெரியவரலாம். சில சமயங்களில், பத்திரப்பதிவு, பட்டா மாறுதல் முடிந்த சில ஆண்டுகள் கழித்து வருவாய் துறை நோட்டீஸ் வரும் போது தான் பிரச்னை தெரியவரும்.
இத்தகைய சூழலில், நமக்கான மனையை பாதுகாக்க வேண்டும் என்று அரசை எதிர்த்து சட்ட போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும். இன்றைய சூழலில், நடுத்தர வருவாய் பிரிவினரில் எத்தனை பேருக்கு இதற்கான வாய்ப்பு இருக்கும் என்பது கேள்விக்குறியே. இன்னும், சில இடங்களில் கையகப்படுத்தப்படாது என்று அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில், மனையை மக்கள் வாங்கி இருப்பார்கள். ஆனால், அந்த பகுதிக்கு அருகில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டத்தில் ஏதாவது மாறுதல் செய்யப்படலாம்.
இவ்வாறு மாறுதல்கள் செய்யப்படும் நிலையில், புதிதாக நிலம் கையகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, புதிதாக சொத்து வாங்கும் போது, அந்தப்பகுதியில் எத்தகைய வளர்ச்சி திட்டங்கள் வர வாய்ப்புள்ளது என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
பத்திரப்பதிவுக்கு முன் இது போன்ற விஷயங்களை தெளிவு படுத்திக்கொள்வது அவசியம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.