அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு செயற்கை சீலிங் அமைப்பது ஏன்?
வீடு கட்டுவதில் காலம் தோறும் பல்வேறு மாற்றங்கள் வருகின்றன. இதில் அந்தந்த காலத்து சூழலுக்கு ஏற்ப புதிய மாற்றங்கள் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
பழைய நிலை மாறி செய்யப்படும் பல பாரம்பரிய கட்டுமான பணி வேலைகளுக்கு இப்போது அத்தனை மவுசு இல்லையென்றே சொல்ல தோன்றுகிறது. புதுப்புது நவீன தொழிற்நுட்பங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இதில், நம் வீட்டில் எத்தகைய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதில், நாம் கவனமாக இருக்க வேண்டும். சரியான சமயத்தில் உரிய முடிவுகள் எடுப்பதில்,
வீட்டு உரிமையாளர்களுக்கு தான் பொறுப்பும்,
கவனமும் அதிகம். எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என கட்டுமான இஞ்சினியர்களை கைக்காட்டி விட்டுச் செல்ல முடியாது. சமீபகாலமாக வீடு கட்டுவதில்,
உள் அலங்காரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
முக்கியமாய் எந்தெந்தப் பொருட்களை எங்கெங்கு பயன்படுத்த வேண்டும், எந்த அளவில் அது இருக்க வேண்டும் என்பதிலிருந்து அனைத்து உள் அலங்கார வேளைகளில் உரிமையாளரின் தலையீடும், வழிக்காட்டுதலும் இருக்கிறது.
இதன் ஒரு வழிமுறையாக, வீடுகளுக்குள் செயற்கை 'சீலிங்' அமைக்கும் பணி மிகப் பெரியதாய் பார்க்கப்படுகிறது.
வீடுகளில் தரையில் இருந்து மேற்கூரை வரையிலான உயரத்தை குறைத்து காட்ட பலரும் விரும்புகின்றனர். பொதுவாக, வீட்டின் உட்புற உயரம் அதிகமாக இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் மக்கள் விரும்பினர். அப்போது தான் ஊஞ்சல்,
அலமாரி, தொங்கும் விளக்குகள், மின்விசிறி என, பல பயன்பாடு அதில் அமைக்க முடியும் என மக்கள் நம்பினர். ஆனால், பயன்பாடு ரீதியாகவும், காற்றோட்டத்தை உறுதிபடுத்தவும் உயரம் குறைவான உள்கூரையே அத்தியாவசியமானதாக உள்ளது.
ஆனால், காலப்போக்கில் அதிக தளங்களை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டின் உட்புற உயரம் கட்டுமான நிலையிலேயே குறைக்கப்படுகிறது. இருப்பினும், ஒன்பது அடி வரை வீடுகளின் உட்புற உயரம் வரையறுக்கப்படுகிறது. இதில் 'ஏசி' உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துவதால், உயரத்தை குறைக்க பலரும் முற்படுகின்றனர். இதற்கான வழிமுறைகளை பொறியாளர் மேற்பார்வையில் கடை பிடிக்க வேண்டும். இதற்கு செயற்கை சீலிங் அமைப்பது வழக்கமாகி உள்ளது. இது தொடர்பான பணியில் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும்.
வீட்டின் உயரத்தை குறைத்து காட்ட செயற்கை சீலிங்குகள் வெகுவாக பயன்படுகின்றன. இதில் எத்தகைய பொருட்களை பயன்படுத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தரமான பொருட்களை பயன்படுத்தி செயற்கை சீலிங்குகளை அமைக்க வேண்டும். இதில், அதன் வெளிப்புற தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பல்வேறு மாதிரிகளை பயன்படுத்தி ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கலாம்.
அசல் சிமென்ட் வேலைபாடு செயற்கை சீலிங் அமைத்து விட்டோம் என்று அமைதியாக இருந்து விட முடியாது.
அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக பராமரிக்க வேண்டும் என்கின்றனர் உள் அலங்கார வல்லுனர்கள்.