வீடு விற்பனையில் 'கார்ப்பெட் ஏரியா' அடிப்படையில் விலை நிர்ணயம் நடைமுறையில் சாத்தியமாகுமா?
வீடு விற்பனையில் பெரும்பாலான நிறுவனங்கள் 'கார்ப்பெட் ஏரியா' எனப்படும் கட்டட உட்பகுதி பரப்பளவு விபரத்தை துல்லியமாக தெரிவிப்பது இல்லை. சூப்பர் பில்டப் ஏரியா என்று, இதர வசதிகளுடன் சேர்த்து மொத்தமாக பரப்பளவை கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனால், மக்கள் விலையாக செலுத்தும் தொகைக்கு குறிப்பிடப்படும் பரப்பளவுக்கும் வேறுபாடு இருக்கிறது. சதுர அடிக்கான விலை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் இதில் மக்கள் விழிப்படைய துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம் வந்த பின், வீடுகள் விற்பனையில், கார்ப்பெட் ஏரியா எனப்படும் கட்டட உள்பரப்பளவு குறிப்பிடப்படுகிறது. ஆனால், மொத்த விலை என்று வரும்போது, சூப்பர் பில்டப் ஏரியா அடிப்படையிலேயே விலை நிர்ணயம் நடப்பதாக கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் ஆணையத்தில் கட்டுமான திட்டங்களை பதிவு செய்யும்போது, கார்ப்பெட் ஏரியா குறிப்பிடப்படுகிறது. ஆணையத்தில் இணையதளத்திலும் இது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படுகின்றன.
இருப்பினும், வீடு வாங்குவோர், கார்ப்பெட் ஏரியா அடிப்படையில் மட்டுமே விலை பேச வேண்டிய நிலை தொடர்கிறது. பத்திரத்திலும், சூப்பர் பில்டப் ஏரியா அடிப்படையில் கணக்கிடப்பட்ட தொகை குறிப்பிடப்படுகிறது.இது விஷயத்தில், கட்டுமான நிறுவனங்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரியல் எஸ்டேட் சட்டப்படி, விலை நிர்ணயம் என்பதற்கான விதிமுறைகளை ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒரு வீட்டை கட்டி விற்பவர், எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில், வாகன நிறுத்துமிடம், பொது பயன்பாட்டு இடங்கள் ஆகிகியவற்றுக்கான கட்டுமான செலவை வீடுகளின் விலையில் எப்படி பிரிப்பது என்பதில் தெளிவு தேவை.
புதிய வீட்டுக்கான பத்திரப்பதிவில், யு.டி.எஸ்., குறிப்பிடப்பட்டு அதற்கான விலை என்ன என்பதை கட்டுமான நிறுவனங்கள் தெளிவு படுத்த வேண்டும்.
பத்திரங்கள் தயாரிப்பு நிலையில் இத்தகைய விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டால் மக்கள் குழப்பம் இன்றி வீடு வாங்க முடியும் என்கின்றனர் நுகர்வோர் நல ஆர்வலர்கள்.
No comments:
Post a Comment