பழைய அபார்ட்மெண்ட் வீட்டை மதிப்பீடு செய்வதில் வேறுபடும் விஷயங்கள்!
புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவதற்கும், பழைய வீட்டை வாங்குவதற்கும் பத்திர நிலையில் பல்வேறு விஷயங்கள் வேறுபடுகின்றன. இதை சரியாக புரிந்து செயல்பட்டால் தான் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
குறிப்பாக, புதிய வீட்டை வாங்கும்போது, விலை என்பது மொத்த பரப்பளவு அடிப்படையில் கணக்கிடப்படும். அது நிலத்தின் பங்குக்கு ஒரு தொகையாகவும், கட்டுமான மதிப்பு ஒரு தொகையாகவும் பிரித்து தனித்தனி பத்திரங்களாக பதிவு செய்யப்படும்.
நிலத்தின் பங்கான யு.டி.எஸ்., அளவுக்கு வழிகாட்டி மற்றும் சந்தை மதிப்பு அடிப்படையில் தொகை நிர்ணயிக்கப்படும். கட்டுமான பணியின் மொத்த மதிப்பு, கூடுதல் வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னொரு பத்திரம் பதிவு செய்யப்படும். இவ்வாறு வாங்கப்படும் வீட்டை சில ஆண்டுகளில் அந்த உரிமையாளர் விற்கிறார் என்றால், அதற்கு ஒரே பத்திரம்தான் எழுதப்படும். இவ்வாறு எழுதப்படும் நிலையில், யு.டி.எஸ்., மதிப்பு, கட்டடத்தின் மதிப்பு இரண்டும் சேர்க்கப்பட்டு மொத்த மதிப்பு வரையறுக்கப்படும்.
இந்த மொத்த மதிப்பு அடிப்படையிலேயே விற்பனை பத்திரம் எழுதப்படும். இதில் நிலத்தின் மதிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை சரியாக கணக்கிட வேண்டும்.
பதிவுத்துறையால் ஒவ்வொரு இடத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு அடிப்படையிலேயே இது கணக்கிடப்படுவது வழக்கம். அதே நேரத்தில், தற்போது மதிப்பு நிலவரத்தை சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகத்தை அணுகி கெரிந்து கொள்வது அவசியம்.
இதன் பின் கட்டடத்தின் மதிப்பை குறிப்பிடுவதிலும் தெளிவாக இருக்க வேண்டும். பழைய கட்டுமான ஒப்பந்தத்தில் உள்ள மதிப்பை அப்படியே குறிப்பிட்டுவிடக் கூடாது.
கட்டப்பட்டதில் இருந்து கட்டடத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறையும். இதற்கு மதிப்பீட்டாளர்கள் சில கணக்கீடுகளை வைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் மதிப்புகளை முடிவு செய்ய வேண்டும். விற்பனைக்கு வரும் வீட்டிற்கான யு.டி.எஸ்., அதன் மொத்த பரப்பளவில், 50 சதவீதமாவது இருக்க வேண்டும்.
அப்போது தான் அதற்கு ஓரளவுக்கு சரியான விற்பனை மதிப்பு இருக்கும். யு.டி.எஸ்., 30 அல்லது அதற்கு குறைவான சதவீதத்தில் இருக்கும் போது, கட்டடத்தின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி காட்டக் கூடாது.
இவ்வாறு, கட்டடத்தின் மதிப்பு செயற்கையாக உயர்த்தி பத்திரத்தில் குறிப்பிட்டது கண்டு பிடிக்கப்பட்டால் பதிவுக்கு ஏற்கப்படாமல் போகலாம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
No comments:
Post a Comment