சொத்து பத்திரங்களை 'லேமினேட்' செய்தால் வீட்டுக்கடன் சிக்கலாகும்!
சொந்தமாக வீடு வாங்க வங்கிகடன் திட்டங்களை மக்கள் நாடுகின்றனர். இதில் வங்கிகள் கடன் தருவதற்கு சில விதிமுறைகளை வைத்துள்ளன.
வீட்டுக்கடன் வழங்க வங்கிகள் என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி சில வரையறைகளை வைத்துள்ளது. இதில் சொத்தின் உண்மை தன்மை, மதிப்பு, விண்ணப்பதாரரின் அடையாள சான்று போன்ற விதிகள் கடுமையாக உள்ளன.
இதன் பின், ஆட்சேபகரமான சொத்துக்களுக்கு வங்கிகள் கடன் வழங்காது. குறிப்பாக, பட்டா இல்லாத சொத்துக்கள், விதிமீறல் உள்ள கட்டுமான திட்டங்களுக்கு வங்கிக்கடன் கிடைக்காது.
இவை கடன் வழங்குவதற்கு பொதுவான விதிமுறைகளாக உள்ளன. இதற்கு மேல் சில சிறப்பு கட்டுப்பாடுகளையும் வங்கிகள் கடைப்பிடிக்கின்றன.
அதாவது, கடன் கோரி வரும் விண்ணப்பதாரர் தாக்கல் செய்யும் பத்திரங்கள் துல்லிய ஆய்வுக்கு உட்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும். பத்திரம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதில் வங்கிகள் எதிர்பார்ப்பு பூர்த்தியாக வேண்டும்.
இதில் சில நடைமுறை தவறுகளால் பிரச்னைகள் ஏற்படுகின்றன. நம்மில் பலரும், ஆவணங்களை பத்திரப்படுத்தி வைப்பதில் கவனமாக இருக்கிறோம்.
இதில் சிலர் அதிக ஆர்வத்தின் காரணமாக, சொத்து பத்திரங்களை லேமினேட் செய்து விடுகின்றனர். இவ்வாறு லேமினேட் செய்த பத்திரங்களை துல்லிய ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.
இதனால், பத்திரத்தின் உண்மை தன்மையை மிக துல்லியமாக சரி பார்க்க முடியவில்லை என்ற அடிப்படையில் கடன் விண்ணப்பத்தை வங்கிகள் நிராகரிப்பது உண்டு. இதற்காக, லேமினேட் கவரை பிரித்தால் பத்திரம் சேதமடையும்.
எனவே, வீட்டுக்கடன் உள்ளிட்ட வாய்ப்புகள் பாதிக்கும் என்பதை கருத்தில் வைத்து பத்திரங்களை லேமினேட் செய்வதை தவிருங்கள் என்கின்றனர் பதிவாளர்கள்.
No comments:
Post a Comment