புதிய வீடு கட்ட சதுர அடி விலையை முடிவு செய்யும் முன் பெற வேண்டிய விபரங்கள்!
நீங்கள் எத்தகைய கட்டுமான ஒப்பந்ததாரரை தேர்வு செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். நம்பகமான, அனுபவம் வாய்ந்தவராக இருந்தால் அதிலேயே பாதி வேலை முடிந்துவிட்டதாக நினைக்கலாம்.
இதற்கு அடுத்தபடியாக, 1 சதுர அடிக்கான கட்டுமான செலவு என்ன என்பதற்கு கட்டுமான ஒப்பந்ததாரரிடம் இருந்து 'கொடேஷன்' எனப்படும் செலவு பட்டியலை பெற வேண்டும். இதில், 1 சதுர அடிக்கு, 1 , 400 ருபாய், 1 , 800 ருபாய் என கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
தொழில் போட்டி காரணமாக கூட சில நிறுவனங்கள் மிக குறைந்த தொகையை கொடேஷனில் குறிப்பிடுகின்றன. இதில் எது நியாயமான தொகை என்பதை மேலோட்டமாக பார்த்து முடிவு செய்துவிடாதீர்கள்.
முதலில், சதுர அடிக்கு இவ்வளவு என்று கட்டுமான நிறுவனம் குறிப்பிடும் விலையில் எந்தெந்த வேலைகள் அடங்கும் என்பதை விபரம் பெறுங்கள். சில நிறுவனங்கள் மிக மிக குறைவான தொகையை குறிப்பிடுகின்றன.
அதை நம்பி சென்றால், அஸ்திவாரம், சுவர்கள், அறை பிரிப்புகள், மேல் தளம், தரை அமைப்பது ஆகிய வேலை மட்டுமே செய்வேன் என்று கூறுவர். மீதி வேலைகள் இந்த விலையில் அடங்காது என்பர்.
இத்தகைய விபரங்களை பணியை பெறும்வரை அவர்கள் தெளிவுபடுத்தமாட்டார்கள். கட்டுமான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்ட பின் தான் இது குறித்து வாய் திறப்பர்.
கட்டுமான நிறுவனங்கள் கூறும் சதுர அடி செலவு தொகை குறித்து, தன்னிச்சையாக சில கட்டுமான பொறியாளர்களிடம் விசாரித்து பாருங்கள். அவர்கள் அதில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள முடியும் என்று கூறுவர்.
குறிப்பாக, பெரும்பாலான கட்டுமான ஒப்பந்ததாரர்கள், பால்கனி கிரில் அமைப்பது, குளியலறை சுவர்களில் டைல்ஸ் பதிப்பது, மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டுவது, கழிவு நீர் தொட்டி கட்டுவது போன்ற பணிகளை சதுர அடி செலவில் சேர்க்க மாட்டார்கள்.
பிரதான வாயிலில் கிரில் கேட் அமைப்பது போன்ற பணிகளையும் சதுர அடிக்கான செலவில் ஒப்பந்ததாரர்கள் சேர்க்க மாட்டார்கள். இது போன்ற விபரங்களை தெரிந்து கட்டுமான பணிகளை ஒப்படைப்பது நல்லது.
நீங்கள் தேர்வு செய்யும் கட்டுமான நிறுவனத்திடம் இது தொடர்பான விஷயங்களை ஆரம்பத்திலேயே தெளிவாக விசாரிக்க வேண்டும். இதை எழுத்துப்பூர்வமாக பெற்று, அதை கட்டுமான ஒப்பந்தத்தில் இணைப்பாக சேர்க்கலாம்.
இப்படி தெளிவாக செயல்பட்டால் வீடு கட்டும்போது கட்டுமான நிறுவனத்துடன் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.