ஒரு கட்டடம் கட்டப்படுகிறது என்றால், அதற்கான பணிகளை துவங்கும்முன், அதில் என்னென்ன வகையில் சுமை ஏற்படும் என்பதை கணக்கிட வேண்டும். கட்டடத்தின் மொத்த சுமை என்ன என்பதை துல்லியமாகக் கணக்கிட்டால்தான் அதைத் தாங்கும் வகையில் துாண்கள், பீம்களை வடிவமைக்க முடியும்.
பொதுவாக வீடு கட்டும்போது, நம்மிடம் உள்ள நிலத்தின் மொத்த பரப்பளவு என்ன அதில், எவ்வளவு பகுதியை பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கணக்கிடுகின்றனர். இதன் அடிப்படையில் புதிய கட்டடத்துக்கான அடிப்படை கணக்கீடு அறிய கட்டட அமைப்பியல் பொறியாளர்களை அணுக வேண்டும்.
ஆனால், பெரும்பாலான மக்கள், கட்டுமானப் பணிகளை சிவில் பொறியாளரிடம் ஒப்படைத்தால் போதும் அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று இருக்கின்றனர். நீங்கள் தேர்வு செய்த சிவில் பொறியாளர், முறையாக பதிவு செய்த கட்டட அமைப்பியல் பொறியாளரின் வழிகாட்டுதல்களை பெற்றாரா என்பது யாருக்கும் தெரியாது.
இத்தகைய சூழலில், பல இடங்களில் சிவில் பொறியாளர்கள், கட்டட அமைப்பியல் பொறியாளர்களை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். நேரடியாக கட்டட வடிவமைப்பாளர் ஒருவரை அணுகி புதிய கட்டடத்துக்கான வரைபடத்தை தயாரிப்பது வாடிக்கையாக உள்ளது.
இவ்வாறு, நேரடியாக கட்டடத்துக்கான வரைபடம் தயாரிக்கும்போது, அதில் ஏற்படும் மொத்த சுமை என்ன, அதை தாங்கும் வகையில் துாண்கள் உள்ளதா என்பதை, உறுதி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, புதிதாக வீடு கட்டுவோர், அதற்கான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும்போது, கட்டட அமைப்பியல் பொறியாளர் அறிக்கை பெறுவது, மண் பரிசோதனை அறிக்கை பெறுவது உள்ளிட்ட பணிகளில் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக ஒரு கட்டடத்தில் கட்டுமான பாகங்களால் எவ்வளவு சுமை ஏற்படும் என்பதை துல்லியமாகக் கணக்கிட்டு, அதை தாங்கும் வகையில் அஸ்திவார பணிகளை திட்டமிட வேண்டும். பீம்கள், மேல்தளம், அதற்கு மேல் கட்டப்படும் அமைப்புகள் அடிப்படையில் சுமை அளவு என்ன என்பதை கணக்கிட வேண்டும்.
பெரும்பாலான இடங்களில் தற்போது கட்டப்படும் தரைதள கட்டடத்தின் மொத்த எடை அடிப்படையில் மட்டுமே கட்டடத்துக்கான சுமையை கணக்கிடுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் கட்டப்படும் கூடுதல் அறைகள் காரணமாக ஏற்படும் சுமையை கட்டடத்தின் அஸ்திவாரம், துாண்கள் தாங்க முடியாத நிலை ஏற்படும்.
நீங்கள் கட்ட உத்தேசித்துள்ள கட்டடத்தின் மொத்த பரப்பளவு என்ன, எதிர்காலத்தில் கட்டப்பட உள்ள பகுதிகள் என்ன என்ற அடிப்படையில், அதில் ஏற்படும் சுமையை கணக்கிட வேண்டும். இத்துடன் பயன்பாடு அடிப்படையில் ஏற்படும் சுமையின் அளவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டட அமைப்பியல் பொறியாளர்கள்.