பொதுவாக புதிய வீடு கட்டும் போது, அதற்கான பணிகளை எப்போது துவங்குவது என்பது குறித்து திட்டமிடுகிறோம். ஆனால், அதை திட்டமிட்டபடி முடிப்பது என்பதில் தான் பெரும்பாலான இடங்களில் பிரச்னைகள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.
கட்டுமான பணிகளை துவங்கும் முன் எந்தெந்த காலத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த, கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.
இதில் குறிப்பிடப்படும் கால அவகாசத்தில் ஒவ்வொரு பணிகளையும் முடிக்க வேண்டும் என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும்.
பெரும்பாலான இடங்களில், முறையாக திட்டமிடாத நிலையிலும், 3 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்தடுத்து புதிய திட்டங்களைசெயல்படுத்தும் நிலையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைந்து முடிக்க ஆர்வம் காட்டுவர்.
ஆனால், சில ஒப்பந்ததாரர்கள் தான் இதில் முறையான திட்டமிடல் இன்றி செயல்படும் போது, கட்டுமான பணிகள் முடிப்பது தாமதம் ஆகிறது. பொதுவாக, 3 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிப்பது என்றால் அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு பணியும் முடிகிறதா என்பதை ஒப்பந்ததாரர்கள் சரி பார்க்க வேண்டும்.
ஒப்பந்தத்தில், 3மாதத்தில் முடிக்கப்படும் என்று சொல்லப் பட்ட நிலையில் அதுவரை எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்து விட்டு, கடைசியில் பணிகள் முடியவில்லை என்று வருத்தப்படுவதிலும், கோபப்படுவதிலும் பயன் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே பணிகள் சரியான கால அவகாசத்தில் முடிக்கப்படுகிறதா என்று பார்ப்பது அவசியம்.
கட்டுமான பணிகள் முடியும் நிலையில், சுவர்களில் பூச்சு வேலை, வண்ணம் அடிப்பது, ஒயரிங், பிளம்பிங் போன்ற வேலைகள் உரிய வரிசை முறையில் முடிக்கப்பட வேண்டும். இதில், கதவுகள் அமைப்பது, உள் அலங்காரம் போன்ற பணிகளையும் முறையாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
சில இடங்களில் மின்சார இணைப்பு பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படும் என்பதால், அதற்கு ஏற்ப ஒயரிங் பணிகள் தாமதப்படுத்தப்படுகிறது. இதனால், அடுத்தடுத்த பிற கட்டுமான வேலைகளும் தாமதமாவதற்கு நாமே காரணமாகிவிடும் நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, மின்சார இணைப்புகள், குடிநீர் வடிகால் இணைப்புகள் பெறுவது தொடர்பான விஷயங்களில் உரிய கவனம் செலுத்த வேண்டும். பணிகள் முடியும் நிலையில், வரைபடத்துடன் ஒப்பிட்டு விதிமீறல் எதுவும் இல்லை என்பதை பொறியாளர் முன்னிலையில் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
பணிகள் முடிப்பதில் உரிமையாளர்கள் அலட்சியம் காட்டும் போது தான் விதிமீறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன என்கின்றனர் நகரமைப்பு துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment