இவ்வகை கட்டுமானங்கள் அதிக சுமையை தாங்கி, நீண்டகாலம் உழைக்கும் என்ற நம்பிக்கை பரவலாக காணப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக கான்கிரீட் கட்டடங்கள், 70 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் என்று வல்லுனர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், எதார்த்த நிலையில் பெரும்பாலான கான்கிரீட் கட்டடங்கள், 40 ஆண்டுகளை கடப்பதே சவாலான விஷயமாக உள்ளது. கான்கிரீட் கட்டடங்களில் ஏற்படும் நீர்க்கசிவு, விரிசல் போன்ற பிரச்னைகள் அதன் உறுதியையும் ஆயுள் காலத்தையும் குலைப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கட்டுமான பணியில் எந்த இடத்தில் எத்தகைய கம்பிகளை பயன்படுத்த வேண்டும், கான்கிரீட் தேர்வு விஷயங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதே நேரம், இது போன்ற கட்டுமானங்களில் எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை எழும்.
இதை கருத்தில் வைத்து துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஓரத்தில், கான்கிரீட் பூச்சு இல்லாமல் கம்பிகள் விடப்படுவது வழக்கம். இவ்வாறு கம்பிகளை விடும் நிலையில் அதில் பல்வேறு வகை பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்ட வேண்டும் எனும் போது. துாண்கள், பீம்களின் நீட்சியாக கம்பிகள் விடுவது அவசியம் தான். குறிப்பாக மொட்டை மாடியில் துாண்களின் நீட்சியாக விடப்படும் கம்பிகள் மழை போன்ற பாதிப்புகளை நேரடியாக சந்திப்பதால் துரு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எனவே, மொட்டை மாடி போன்ற இடங்களில் எதிர்கால தேவைக்காக விடப்படும் கம்பிகளில் கான்கிரீட் கொட்டி டம்மியாக பூச்சு வேலை செய்ய வேண்டும். இது போன்ற கூடுதல் பாகங்களாக கம்பிகள் நீட்டிக்கொண்டு இருந்தால் அது அந்த இடத்தை பயன்படுத்துவோருக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய கம்பிகளை பாதுகாப்பு காரணங்கள் அடிப்படையில் மூடுவதற்கான சரியான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
டம்மி துாண்கள் அமைப்பது மட்டுமல்லாது, துரு பிடிக்காமல் இருப்பதற்கான ரசாயனங்களை பூசுவது போன்ற விஷயங்களையும் கடைப்பிடிக்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment