Saturday, July 20, 2024

அடுக்குமாடி குடியிருப்பில் பதிவு செய்யாத சங்கத்தால் வரும் சிக்கல்கள் என்ன?

 

அடுக்குமாடி குடியிருப்பில் பதிவு செய்யாத சங்கத்தால் வரும் சிக்கல்கள் என்ன?
தமிழகத்தில் இன்றைய சூழலில் தனியாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று மக்கள் நினைத்தாலும் விலைவாசி இதற்கு ஒத்துழைப்பதில்லை. இதனால், பெரும்பாலான மக்கள் தங்களுக்கான கனவு இல்லத்தை அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் தேடுகின்றனர்.


இதுபோன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவது என்று முடிவு எடுத்து, அதற்கான தேடலில் இறங்கும் நிலையில் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் தெளிவு வேண்டும். குறிப்பாக, எத்தகைய அடுக்குமாடி குடியிருப்பு நமக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

தற்போதைய சூழலில், அதிக எண்ணிக்கையிலான வீடுகள் உள்ள கேட்டட் கம்யூனிட்டி முறையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய குடியிருப்புகள் வருகின்றன. இதுபோன்ற திட்டங்களில் வீடு வாங்கினால், வேலைக்கு செல்வதைத் தவிர்த்து பிற விஷயங்களுக்கு வெளியில் அலைய வேண்டாம்.

இதில் பராமரிப்பு பணியை நிர்வகிக்க, வீட்டு உரிமையாளர்கள் சங்கம் என்ற அமைப்பு இருக்கும். அதற்கான விதிமுறைகளின்படியே அனைத்து விஷயங்களும் அந்த வளாகத்தில் நடக்கும் என்பதை வீடு வாங்குவோர் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், அதிக எண்ணிக்கையில் வீடுகள் இல்லாத சிறிய அளவிலான குடியிருப்புகளில் சங்கம் ஏற்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தின்படி, 5க்கு மேற்பட்ட வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சங்கம் இருப்பது கட்டாயம்.

எனவே, சிறிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளிலும், அதன் அடிப்படை வசதிகளை பராமரிப்பதில் சங்கம் என்ற அமைப்பு இருப்பது அவசியம். பொதுவாக, 10க்கும் குறைவான வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் வருகின்றன.

பெயரளவுக்கு இவர்கள் ஒரு சங்கத்தை ஏற்படுத்தி, பொது விஷயங்களை அதன் வழியே நிர்வகித்தாலும், சட்டப்படி பதிவு செய்வதில்லை. ஒரு சங்கத்தை பதிவு செய்துவிட்டால், ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தி, வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விபரங்களை ஒவ்வொரு ஆண்டும், சங்கங்களின் பதிவாளரிடம் அளிக்க வேண்டியது அவசியம். இதில் சங்கத்தை பதிவு செய்வது, ஆண்டுதோறும் கணக்கு கொடுத்து புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கு ஏற்படும் செலவு, இதைத் தொடர்ந்து ஒரு நபர் பொறுப்பேற்று நடத்துவது என பல்வேறு பிரச்னைகள் வருகின்றன.

இந்நிலையில், 10க்கும் குறைவான வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சிக்கல் இன்றி அடிப்படை வசதி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாற்று வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தில் இதற்கான விதிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

No comments:

Post a Comment

Virtual home tours beyond ease and convenience

  Virtual home tours beyond ease and convenience Digital tours are also contributing to a greener planet by minimising the number of resourc...