காம்பவுண்ட் சுவரில் விரிசலை தவிர்க்க லிண்டல் பீம் அமைக்கலாம்!
புதிதாக வீடு கட்டும்போது, பிரதான கட்டுமானப் பணிகளில் தான் விரிசல் போன்ற பிரச்னைகள் வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறோம். இதற்கு அப்பால் காம்பவுண்ட் சுவர் போன்ற கட்டுமானங்களில் விரிசல் தடுப்புக்காக உரிய கவனம் செலுத்துவதில்லை என புகார் கூறப்படுகிறது.
பொதுவாக, வீட்டுக்கான சுவர் என்பது கட்டடத்தின் சுமையை தாங்கும் ஒரு காரணி யாக இருப்பதால், அதற்கு மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால், காம்பவுண்ட் சுவர் என்பது, வெளியாரின் அத்துமீறிய நுழைவைத் தடுப்பதற்காக மட்டும்தான் என்ற எண்ணம் உள்ளது.
வீட்டுக்கான கட்டுமானப் பணியில், 10ல் ஒரு பங்கு என்ற அளவில்கூட காம்பவுண்ட் சுவர் கட்டுவதில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால், பெரும்பாலான காம்பவுண்ட் சுவர்களில் மிக விரைவில் விரிசல்கள் ஏற்பட்டு, அவை உடைந்து விழும் நிலை ஏற்படுகிறது.
உங்கள் நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டுவது என்றால் அதற்கான பொருள் எது என்பதை முதலில் தெளிவாக முடிவு செய்யுங்கள், செங்கல், ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் என எந்த வகை பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த முடிவை தெளிவாக எடுக்க வேண்டும்.
இதன்பின், காம்பவுண்ட் சுவரின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும், தரைக்கு கீழ் எவ்வளவு ஆழம் செல்ல வேண்டும் என்பதையும் முடிவு செய்யுங்கள். பொதுவாக, தரை மட்டத்தில் இருந்து, 2 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைத்து காம்பவுண்ட் சுவர்களை கட்டுவது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இதேபோன்று, தரைக்கு மேல் காம்பவுண்ட் சுவர் கட்டும்போது, கிடைமட்டத்தில், 10 அடிக்கு ஒரு இடத்தில் துாண் அமைக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். எந்த வகையில் காம்பவுண்ட் சுவர் அமைப்பதானாலும், அதில், 10 அடிக்கு ஒரு இடத்தில் பிரேக் விடுவது போன்று துாண்கள் அமைப்பது அவசியமாகிறது.
இத்துடன், தரைமட்டத்தில் இருந்து சுவர் எழுப்பும்போது, 7 அடி உயரத்தில் கட்டடத்துக்கு லிண்டல் பீம் அமைப்பது போன்று இங்கு, டம்மியாக லிண்டல் பீம் அமைப்பது அவசியம். இதன்மேல் எந்த வகையில் கூடுதல் சுமை ஏற்படப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.
உண்மையில் சுவர்கள் கட்டும் போது, ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ஏற்படும் சுமை, அதன் மற்ற பகுதிகளில் முறையாக பரவ வேண்டும். இதில் குறைபாடு காணப்பட்டால் அந்த சுமையின் அழுத்தம் காரணமாக சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உயரமாக காம்பவுண்ட் சுவருக்கு தான் இப்படி என்று அலட்சியம் காட்டாமல் சாதாரண முறையில் கட்டும்போதும், குறிப்பிட்ட உயரத்தில் டம்மி லிண்டல் பீம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.
No comments:
Post a Comment