வீடு, மனை வாங்கும் போது நிலம் தொடர்பான பல்வேறு சட்ட ரீதியான விஷயங்களில் தெளிவாக செயல்பட வேண்டும். ஒரு வீடு, மனை வாங்க நீங்கள் முடிவு செய்யும் போது, அது அமைந்துள்ள நிலம் யாருடையது என்பது தொடர்பான ஆவண ஆதாரங்களை கேட்டு பெற வேண்டியது அவசியம்.
இதில், நிலம் தொடர்பான விற்பவரிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் பெற்றுவிட்டோம், அனைத்தும் அசல் என்பதுடன் அமைதியாகிவிடாதீர்கள். அந்த ஆவணங்களில் நிலம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை முழுமையாக ஆய்வு செய்யுங்கள்.
அந்த குறிப்பிட்ட நிலம் இதற்கு முன் என்னவாக இருந்தது, அரசின் நிர்வாகத்தில் அது என்ன வகைபாட்டில் இருந்து தற்போது பட்டா நிலமாக மாறிஉள்ளது என்பதை அறிவது அவசியம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலம் தொடர்பான வகைபாடுகளில் மக்களிடம் சில குழப்பங்கள் காணப்படுகின்றன.
எந்தெந்த வகைபாட்டில் உள்ள நிலங்களை பொது மக்கள் வாங்கலாம், விற்கலாம் என்பது குறித்த விஷயங்களை அறிவது அவசியம். நம் நாட்டில் ஒரு சில நபர்களிடம் ஒட்டுமொத்த நில உரிமையும் குவிய கூடாது என்பதற்காக, நில உச்சவரம்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதன்படி, தனி நபர்கள், குடும்பங்களுக்கு கூட்டாகவும், அமைப்புகள் பெயரில் எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மேற்பட்ட நிலம் இருந்தால் அது அரசுடைமையாகிவிடும் என்பதே இந்த சட்டத்தின் அடிப்படை சிறப்பு அம்சமாக உள்ளது.
இந்நிலையில், உச்சவரம்பு சட்டப்படி அரசுடைமையான நிலங்கள் வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது போன்ற நிலங்களில் யாரும் உரிமை கோரப்படாத நிலையில் உள்ள நிலங்கள் அனாதீனம் என்ற வகைபாட்டில் வைக்கப்பட்டு, வருவாய் துறையால் பராமரிக்கப்படும்.
இது போன்று அனாதீனம் என்று வகைபடுத்தி வைக்கப்பட்ட நிலங்களை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. சில ஆண்டுகள் முன்புவரை சொந்த வீடு இல்லாத மக்கள் இது போன்ற உரிமை கோரப்படாத நிலத்தில் குடிசைகள் போட்டு வசித்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் இவ்வாறு குடியேறியவர்கள் தங்கள் பெயருக்கு பட்டா வழங்கும்படியும் அரசிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. இதில் சில இடங்களில், பக்கத்தில் உள்ள முறையான பட்டா நிலத்துடன், அனாதீன நிலமும் சேர்ந்து விற்பனை ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு நடந்த விற்பனையை சுட்டிக்காட்டி, விடுபட்ட நிலம் என தவறான தகவல் அளித்து, அனாதீன நிலங்களுக்கு சிலர் பட்டா பெறுகின்றனர். வருவாய் துறையில் கீழ்மட்டத்தில் சிலரின் தவறால் இது போன்ற பட்டாக்கள் வழங்கப்பட்டது தெரியவரும் நிலையில் மேலதிகாரிகள் இதை ரத்து செய்கின்றனர்.
இதில், சில இடங்களில் இது போன்ற தவறான பட்டாவை நம்பி நிலம் வாங்கும் கட்டுமான நிறுவனங்கள் அதில், குடியிருப்புகளை கட்டிவிடுகின்றன. இந்நிலையில் அனாதீன நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் வீடு, மனை வாங்கியவர்கள் தங்கள் பெயருக்கு பட்டா மாறுதலுக்கு செல்லும் போது தான் பிரச்னை தெரியவரும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.