முன்னோர் சொத்துக்களை பெற விரும்பும் வாரிசுகள் கவனத்துக்கு…
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் பெரும்பாலும் சுய சம்பாத்தியத்தில் சேர்த்த பணத்தை கொடுத்து உரிய நபரிடம் இருந்து கிரையம் பெறுவது வழக்கம். இவ்வாறு கிரையம் வாயிலாக பெறப்படும் சொத்துக்கு அந்த நபர் தான் முழுமையான உரிமையாளர் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்குவது ஒரு பக்கம் என்றால், முன்னோர் சேர்த்து வைத்த சொத்துக்களை முறையாக திரட்டி, அதன் வாரிசாக இருப்பது ஒரு ரகம். இதில் முன்னோர் சொத்துக்களை அடைய வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
குறிப்பாக, ஒரு குடும்பத்தில் தந்தை வாங்கி வைத்த சொத்துக்கள் அவரது மகன், மகள்களுக்கு சேரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தந்தை இறந்த நிலையில் சொத்துக்களுக்கு நாம் உரிமையாளர் ஆகிவிடுவோம் என்று தான் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.
தந்தை அல்லது அவருக்கு முந்தைய தலைமுறையினர் சேர்த்த சொத்துக்களுக்கு நீங்கள் வாரிசாக இருந்தால், அதை முறைப்படி ஆவண ரீதியாக நிரூபிக்க வேண்டும். இதற்கு, சொத்தின் உரிமையாளராக இருந்த நபர்கள் இறந்து விட்டதாக வாய்மொழியாக சொல்வது போதாது.
சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர் எப்போது, எப்படி இறந்தார் என்பதற்கான ஆவண ஆதாரங்கள் முறையாக பெற வேண்டியது அவசியம்.
குறிப்பாக, சொத்து உரிமையாளர் இறந்தது குறித்த இறப்பு சான்றிதழ், அவருக்கு நீங்கள் எந்த விதத்தில் வாரிசு என்பதை உறுதி செய்யும் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்து தான் சொத்தை உங்கள் பெயருக்கு மாற்ற முடியும்.
இந்த ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருந்தால் போதுமா என்றால் இத்துடன் கூடுதலாக மேலும் சில ஆவணங்களையும் அளிக்க வேண்டும். சம்பந்தபட்ட சொத்து குறித்து அதன் உரிமையாளர் உயில் எதுவும் எழுதி வைத்திருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இதே போன்று, அந்த சொத்து அவர் பெயருக்கு எப்படி வந்தது என்பதற்கான பத்திரம், அதற்கு முந்தைய உரிமையாளரிடம் இருந்ததற்கான பத்திரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.
இதில் பழைய பத்திரங்கள், பட்டா, நில அளவை வரைபடம் ஆகியவற்றை முறையாக அளித்தால் தான் உங்கள் பெயருக்கு சொத்து வரும்.
பல இடங்களில் தந்தை இறந்த நிலையில் ஒரு மகன் அல்லது ஒரு மகள் இருக்கும் குடும்பத்தில், சொத்து தானாக தங்கள் பெயருக்கு வந்துவிட்டதாக நினைத்துக்கொள்கின்றனர். இதனால், பல ஆண்டுகளாக அப்படியே அனுபவித்தும் வருகின்றனர். இதில் ஆவண ரீதியாக உரிய கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.
No comments:
Post a Comment