வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் பணிகளுக்கு கட்டுப்பாடு வருமா?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக மனை வாங்கி அதில் வீடு கட்டும் போது அப்பகுதி சாலையைவிட, 2 அடி உயரத்தில் தான் வீட்டின் தரை மட்டம் அமைக்கப்படும். இத்தகைய பகுதிகளில், சாலையின் தரைமட்டம் கடந்த, 20 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து வருவதால் வீட்டின் தரைமட்டத்தைவிட சாலை உயர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக புதிதாக சாலை அமைக்கும் போது அங்கு தரைமட்டத்தை உயர்த்தி அதன் மேல் தார் சாலை அமைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு தார் சாலை அமைக்கப்பட்ட பின், அடுத்து வரும் ஆண்டுகளில் புதுப்பித்தலின் போது, மேல் பகுதி தார் சாலை மில்லிங் முறையில் சுரண்டி எடுக்கப்பட்டு அதன் பின் புதிய சாலை அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், பல இடங்களில் மில்லிங் பணிகள் மேற்கொள்ளாமல் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டதால், அதன் தரை மட்டம் படிப்படியாக உயர்ந்துவிட்டது. இதனால், பெரும்பாலான இடங்களில் சாலையைவிட வீடு தாழ்வான பகுதியாக மாறியிருப்பதை பார்க்க முடிகிறது.
இதனால், மழைக்காலத்தில் சாலையில் வழிந்தோடும் வெள்ள நீர் நேரடியாக வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. இது போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, பழைய வீட்டை இடித்து கட்டுவோர் கூடுதல் உயரத்தில் தரைமட்டத்தை அமைப்பது வழக்கமாக மாறி உள்ளது.
பழைய வீட்டை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர் செயற்கை முறையில் வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் வழிமுறையை நாடுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, பீஹார், ஹரியானா மாநிலங்களில் இருந்து சில குழுக்கள், ஹைட்ராலிக் கருவிகளை பயன்படுத்தி வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தி கொடுக்கின்றன.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இக்குழுக்கள், வீடுகளின் தரைமட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபடுகின்றன. இதில் சாதாரணமாக, தரைதளம் மட்டும் உள்ள வீடுகள் மட்டுமின்றி, இரண்டு, மூன்று மாடி கட்டடங்களையும், 5 முதல், 10 அடி வரை உயரமாக்கி கொடுக்கின்றன.
மழைக்கால பாதுகாப்புக்காக இந்த வழிமுறையை உரிமையாளர்கள் பயன்படுத்தினாலும். அரசு துறைகள் இது விஷயத்தில் எவ்வித வரைமுறைகள், கட்டுப்பாடுகளை விதிக்காமல் உள்ளது ஏன் என்று தெரியவில்லை. எந்தெந்த பகுதியில் எத்தனை அடி வரை வீட்டின் தரை மட்டத்தை உயர்த்தலாம்.
தரைமட்டம் உயர்த்தப்பட்ட நிலையில் வீட்டின் ஸ்திரதன்மை எப்படி இருக்கும், தரைமட்டம் உயர்த்தும் பணியின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன என்பது போன்ற விஷயங்களில் அரசு நிர்வாகம் தனக்குள்ள பொறுப்பை உணராமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
இப்போதாவது அரசு விழித்து இது விஷயத்தில் உரிய கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும். தரைமட்டம் உயர்த்தும் பணிகளுக்கான பாதுகாப்பு விதிகளை வகுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment