Tuesday, June 11, 2024

ஏலத்தில் வரும் வீட்டின் முழு ஆவணங்களையும் ஆய்வு செய்வது அவசியம் !

 ஏலத்தில் வரும் வீட்டின் முழு ஆவணங்களையும் ஆய்வு செய்வது அவசியம் !

பொதுவாக, சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்போர், புதிதாக கட்டப்படும் வீடுகளை வாங்க வேண்டும் என்று தான் திட்டமிடுகின்றனர். புதிய வீடுகள் விலை மிக மிக அதிகமாக இருக்கும் நிலையில், பொது மக்கள் பழைய வீடு கிடைத்தால் கூட பரவாயில்லை என்று வாங்க முற்படுகின்றனர்.


இவ்வாறு, பழைய வீடு வாங்கும் நிலையில், உரிமையாளர் நல்ல முறையில் பயன்படுத்தி வரும் வீடு என்றால் மட்டுமே அதை வாங்குவர். இதில் அடுத்த கட்டமாக, வங்கிகள் ஏலத்தில் விற்கும் வீடுகளை வாங்க மக்கள் மத்தியில் பரவலாக ஆர்வம் அதிகரித்துள்ளது.


உதாரணமாக, சென்னையில் ஒரு இடத்தில் புதிதாக கட்டப்படும், 600 சதுர அடி வீடு, 35 லட்சம் ரூபாய் என்று விலை இருக்கும் இடத்தில் வங்கி ஏலத்தில், 22 லட்சம் ரூபாய்க்கு வீடு கிடைத்தால், அதை வாங்குவது லாபகரமானது தான்என்ற முடிவுக்குமக்கள் வருகின்றனர்.


வீட்டுக்கடனை முறையாக செலுத்தாத நபர்களின் வீடுகளை வங்கிகள் இவ்வாறு ஏலம் வாயிலாக விற்பனை செய்யும். இதில் பெரும்பாலான வங்கிகள் உரிய சந்தை மதிப்பை ஆராய்ந்து அத்தொகைக்கு ஏலம் விடுவதைவிட, தங்கள் நிலுவைத் தொகை வந்தால்போதும் என்று நினைக்கின்றன. 


இதனால், குறைந்த விலையில் வீடுகள் ஏலத்துக்கு வருவதை பார்க்க முடிகிறது. இத்தகைய வீடுகளை வாங்க வேண்டும் என்று நினைப்போர் வங்கிகளை முறையாக அணுகி, ஏலத்தில் பங்கேற்று அந்த வீடுகளை வாங்கலாம்.


இவ்வாறு, ஏலத்தில் அறிவிக்கப்படும் வீட்டை வாங்க நினைப்போர், முதலில் ஏல அறிவிப்பில் உள்ள முகவரி, சர்வே எண் விபரங்கள் அடிப்படையில் அந்த சொத்து தொடர்பான வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். 


அதன் பின் அந்த முகவரிக்கு நேரில் சென்று கட்டடத்தின் தற்போதைய நிலை, அது அமைந்துள்ள பகுதியின் நிலை ஆகியவற்றை ஆராய வேண்டும். அதன் பின் ஏலத்தில் பணம் செலுத்தி பங்கேற்று, வீட்டை வாங்கும் போது, அது தொடர்பாக கடன் தாரர் என்னென்ன ஆவணங்களை ஒப்படைத்தார் என்ற பட்டியலை கேட்க வேண்டும்.


அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் பிரதிகளையும், அசலையும் கேட்டு வாங்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் சட்ட ரீதியான வில்லங்க சரிபார்ப்புக்கான ஆவணங்கள், கிரைய பத்திரங்கள், கட்டட வரைபடம், தாய் பத்திரம், பட்டா பிரதி ஆகியவற்றை மட்டுமே வங்கிகள் கொடுக்கின்றன. 


இந்த வீட்டின் மின்சார இணைப்பு, சொத்து வரி, குடிநீர் வடிகால் இணைப்புக்கான ஆவணங்களையும் மக்கள் கேட்டு வாங்க வேண்டும், இதை தவறவிட்டால், வீடு வாங்கியபின் இந்த இணைப்புகளை தங்கள் பெயருக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

No comments:

Post a Comment

Bigger the house, bigger the responsibilities

  Here is a look at the aftermath of upgrading to a larger space Regardless of the size of the current home, many homeowners often nurture t...