புதிய வீட்டுக்கான முன்பதிவு செய்வதில் கவனிக்க வேண்டியவை !
சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில் தங்களுக்கான வீட்டை முன்பதிவு செய்வது வழக்கம். இதில், மக்களை ஈர்க்க கட்டுமான நிறுவனங்கள் முதலில் வரும் நபர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன.
சில ஆண்டுகள் முன்பு வரை புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் நாட்களில், அதில் வீடு வாங்க முன்பதிவு செய்வதில் மக்களிடம் கடும் போட்டி இருந்தன. இதை ஊக்குவிக்கும் வகையில் கட்டுமான நிறுவங்கள் சலுகைகளை வாரி வழங்கி வந்தன.
பொதுவாக, இப்படி புதிய திட்டம் அறிவிக்கப்படும் போது முன்பதிவு செய்தால், அப்போது, அடையாளமாக 1 லட்சம் ரூபாய் வரை மக்கள் செலுத்துவர். அதன் பின் நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., பத்திரப்பதிவு முடிந்த பின், வங்கிக்கடன் வாயிலாக வீட்டின் விலை தொகை கட்டுமான நிறுவனத்துக்கு வரும்.
இவ்வாறு வரும் தொகையை அடிப்படையாக வைத்து தான் கட்டுமான பணியில் ஏற்படும் பல்வேறு செலவுகளை கட்டுமான நிறுவனங்கள் சமாளிக்கும்.
இதில் ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், கட்டுமான திட்டம் அறிவிக்கப்படும் போதும், கட்டுமான பணிகள் நடக்கும் நிலையில் விற்பனையாகும் வீட்டுக்கு ஐந்து சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது.
ஆனால், கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு உரிய சி.சி,, சான்றிதழ் பெற்ற நிலையில், அந்த வீட்டை வாங்கும் போது ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படாது. இதனால், பெரும்பாலான மக்கள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் வரை காத்திருந்து அதன் பின் அந்தந்த திட்டங்களில் வீடு வாங்க முன்வருகின்றனர்.
இதனால், கட்டுமான நிறுனங்களுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்படுவதுடன், வீடுகள் விற்பது உறுதியாகாத நிலையில் அவர் வங்கியில் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டியுள்ளது.
இது புதிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவதில், கட்டுமான நிறுவனங்களுக்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும்.
எனவே, புதிய வீடு வாங்கும் மக்கள் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளை வாங்க முன்வந்தால் தான் அடுத்தடுத்த புதிய திட்டங்கள் வருவதற்கு ஏற்ற சூழல் உருவாகும். குறிப்பாக, ஜி.எஸ்.டி., தொடர்பாக சில விஷயங்களை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
கட்டுமான பணி முடிந்து, சி.சி. சான்று வாங்கிய வீடுகளுக்கு ஜி.எஸ்.டி., வரி இல்லை என்றாலும், அதில் பல்வேறு நிலைகளில் கட்டுமான நிறுவனம் செலுத்திய ஜி.எஸ்.டி., வரி தொகை, விலையில் தான் சேர்க்கப்படும் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.
மேலும், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய பதிவு விதிகளின்படி, கட்டுமான பணி முடியும் நாள் குறித்த விபரங்களை, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment