Tuesday, October 24, 2023

அரசு ஜப்தி செய்த நிலத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 அரசு ஜப்தி செய்த நிலத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
பொதுவாக வீடு, மனை போன்ற சொத்துக்களை அதன் உரிமையாளரிடம் இருந்து நேரடியாக வாங்குவதையே அனைவரும் விரும்புவர்.  ஆனால், சில சமயங்களில், வங்கிகள் கையகப்படுத்திய சொத்துக்கள் ஏலத்துக்கு வரும்.
           இத்தகைய சொத்துக்களை வாங்குவதில் சில நடைமுறை குழப்பங்கள் இருந்தன.  ஆனால், தற்போது வங்கிகளின் ஏலத்தில் பங்கேற்று சொத்துக்களை வாங்கும் அளவுக்கு மக்கள் முன்வந்துள்ளனர்.
           கடன் நிலுவைக்காக வங்கிகள் கையகப் படுத்திய சொத்துக்களை வாங்கி தனி நபர் பெயரில் இருப்பதாக காட்டி அதிக விலைக்கு விற்பதற்கே சில நபர்கள் வந்துவிட்டனர்.  இவர்களிடம் அதிக விலைக்கு வாங்குவதை விட நேரடியாக வங்கியிடமே வாங்கலாம் என்று மக்கள் தயாராகி உள்ளனர்.
            இதில் சில சமயங்களில் உரிமையாளர் மீதான நிலுவை பிரச்னைக்காக அரசு நேரடியாக சொத்துக்களை ஜப்தி செய்யும்.  உரிமையாளர் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலவரி, சொத்து வரி போன்றவை அபரிமிதமான நிலைக்கு செல்லும்போது அரசு சம்பந்தப்பட்ட சொத்துக்களை ஜப்தி செய்யும்.
           வருமான வரி பாக்கி பிரச்னை காரணமாகவும் வருவாய் துறை வாயிலாக தனியார் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படலாம்.  இவ்வாறு ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை ஏலத்தில் வாங்க சிலர் விரும்புகின்றனர்.  வங்கிகள் கையகப்படுத்தி ஏலம் விடுவதற்கும், வருவாய் துறை ஏலம் விடுவதற்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளன.
           வருவாய் துறை ஏலத்தில் வரும் சொத்துக்கள் குறித்த கூடுதல் தகவல்களை, ஆவணங்களை சரி பார்ப்பதில் தனி நபராக வருவோருக்கு போதிய ஒத்துழைப்பு இருப்பதில்லை.  பல இடங்களில் தனி நபர்கள் இத்தகைய ஏலத்தில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.  அதிகாரிகள் தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு அந்த சொத்து கிடைக்க மறைமுகமாக உதவுகின்றனர். 
            மேலும், சொத்தில் வேறு வில்லங்கம் இருக்கிறதா என்பதை விசாரிப்பதிலும் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகிறது.  வருவாய் துறையே ஏலம் விடுகிறது என்றால், அதில் வில்லங்கம் இருக்காது என்று யாரும் நினைக்காதீர்கள்.
             அந்த சொத்து தொடர்பாக ஏதாவது பழைய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.  வழக்கு நிலுவையில் இருந்தால் அது குறித்து விசாரித்து தெளிவு பெறாமல் சொத்துக்களை ஏலம் எடுப்பதில் அவசரம் காட்டாதீர்கள் என்கின்றனர் ரியல் எஸ்டேட் முகவர்கள்.

Saturday, October 21, 2023

சார் பதிவாளர் அலுவலகத்தில் உயில் பத்திரத்தை பதிவது கட்டாயமா?

 சார் பதிவாளர் அலுவலகத்தில் உயில் பத்திரத்தை பதிவது கட்டாயமா?

நாம் சம்பாதித்து சேர்த்த சொத்துக்கள், நமக்கு பின், நம் பிள்ளைகளுக்கு தானே என்று பலரும் அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.  இவ்வாறு நினைப்பது சரி ஆனால், அதற்கு என்ன ஆதாரம் என்பது தான் பிரச்னை.

         பொதுவாக, தந்தை சம்பாதித்த சொத்துக்கள் பிள்ளைகளுக்கு தான் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால், அதில் யாருக்கு, எவ்வளவு என்பதை அவர்களே முடிவு செய்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறான சூழலை உருவாக்கி விடும்.

        சொத்துக்களை வாங்கிச் சேர்ப்பது வரவேற்கத் தக்க விஷயம் என்றாலும், அவற்றை முறையாக ஆவணப்படுத்துவது அதை விட அவசியமானது.  அப்போதுதான், அந்த சொத்துக்கள் சென்றடைய வேண்டியவரை சிக்கல் இல்லாமல் எளிதாக சென்றடையும்.

        உங்கள் சொத்துக்களுக்கு உயில் எழுதும் முன், சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.  குறிப்பாக, உயில் எழுதுவதற்கு தகுதியான சொத்துக்களை முறையாக பட்டியலிட வேண்டும்.

        முக்கியமாக, ஒரு சொத்தை வாங்கிய காலம் துவங்கி, பாகப் பிரிவினைக்கு உட்படுத்தும் காலம் வரை எத்தனை ஆண்டுகளாக கையிருப்பில் அந்தச் சொத்து இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.  அந்தச் சொத்தின் மீது வில்லங்க விவகாரம் இல்லாததை உறுதி செய்ய வில்லங்கச் சான்றிதழைப் பெற வேண்டும்.

         எந்த சொத்து எங்கு உள்ளது, சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள், அளவுகள், தற்போதைய நிலவரம், முகவரி ஆகிய விபரங்களை தொகுக்க வேண்டும்.  இத்துடன், அந்த சொத்து வாயிலாக வருவாய் கிடைத்து வருகிறது என்றால், அதையும் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

        இதில், குடும்ப தலைவர்கள் நல்ல உடல் நலத்தில் இருக்கும் போதே, சொத்துக்களை உயில் வாயிலாக பகிர்ந்து கொடுப்பது பிற்காலத்தில் பிரச்னைகளை தவிர்க்க உதவும்.

        உயில் ஆவணத்தை முறைப்படி எழுதி, வழக்கறிஞரிடம் கொடுத்து வைப்பது அல்லது வங்கி லாக்கரில் வைப்பது போன்ற நடைமுறைகளை பின்பற்றலாம்.

        மேலும், உயில் பத்திரத்தை உடனடியாக சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை.  பதிவு செய்து விட்டால், அதை மாற்றுவதற்கு பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும்.

        எனவே, முறையாக எழுதி, பாதுகாப்பாக வைப்பதே நல்லது.  குடும்ப தலைவர் இறந்த பின், உயில் கண்டுபிடிக்கப்படும் போது, அதை அமல்படுத்த பதிவு செய்யலாம்.  உயில் எழுதும் போது, தங்களது எஞ்சிய வாழ்நாளுக்கு உரிய வழியை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

       சில குடும்ப தலைவர்கள் தங்கள் பெயரில் உள்ள சொத்துக்களை பிள்ளைகள் பெயருக்கு முழுமையாக கொடுத்து விடுவர்.  அவரது காலத்துக்கு பின், சொத்துக்களை பெறும் பிள்ளைகள், மனைவியை பார்த்துக் கொள்வர் என்று நினைக்கின்றனர்.

       இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள். 

பழைய வீடு வாங்கும்போது கவனம்

 பழைய வீடு வாங்கும்போது கவனம்
சொந்தமாக வீடு வாங்க நினைப்பவர்கள் புதிய வீட்டை தான் முதலில் தேடுவார்கள்.  ஆனால், நிதி நிலை காரணமாக பழைய வீட்டை வாங்க வேண்டிய நிலை வரலாம்.இதன்படி, பழைய வீட்டை வாங்கும்போது பல்வேறு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  இதில் வழக்கமாக, பத்திரங்கள், வீட்டின் அமைப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனிப்பர்.
          
ஆனால், பழைய வீடு விற்பனையில் அதன் உறுதித் தன்மையை வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.  விற்பனைக்கு வரும் சொத்து அதற்கு முந்தைய பத்திரத்தில் எப்படி இருந்ததே அப்படியே தற்போது இருக்க வேண்டும்.
       
          பல சமயங்களில், தற்போது பத்திரத்தில் எப்படி உள்ளதோ அதை அப்படியே புதிய பத்திரத்தில் குறிப்பிட்டு விற்றுவிடுவர்.  இவ்வாறு சொத்தை வாங்கியபின் அதன் எல்லை தாவாக்கள் தெரியவரும்.  இதைதவிர்க்க, பழைய வீட்டை வாங்கும் நிலையில் கூடுதல் விஷயங்களை கவனிப்பது அவசியம்.  அதிலும் சில விற்பனையாளர்கள் சிறுபிள்ளைதனமாக செயல்படுவதும் உண்டு.

         குறிப்பாக, விற்பனைக்கு வரும் சொத்தை நீங்கள் பார்க்க செல்லும் போது இருந்த நிலையில் அப்படியே உங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.  அதில் பயன்பாட்டு பொருட்களை மட்டுமே பழைய உரிமையாளர் எடுத்து செல்லலாம்.


          ஆனால், சில இடங்களில் விற்பனையாளர்கள், வரைபடத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் கூடுதலாக கட்டப்பட்ட அறைகளை பத்திரப் பதிவுக்கு முன் தன்னிச்சையாக இடித்து விடுவர்.  அலமாரி உள்ளிட்ட அமைப்புகளை பெயர்த்து எடுத்து செல்வர்.  இன்னும் சிலர், வீட்டிற்குள் விளக்குகளை அகற்றிவிடுகின்றனர்.  மேலும், கூடுதலாக அமைத்த சுவிட்ச் போர்டுகள், தண்ணீர் மோட்டார்களை அகற்றி விடுகின்றனர்.


          இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களை அனுமதிக்காதீர்.  வீடு வாங்க முன்பணம் கொடுக்கும்போதே, இது தொடர்பான விஷயங்களை கண்டிப்புடன் தெரிவிப்பது நல்லது.  அப்போது தான், வீட்டை வாங்கி நீங்கள் குடிபுகும் நிலை சிக்கல் இன்றி அமையும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.    


கட்டுமான பணிகள் தாமதமானால் இழப்பீடு கிடைப்பதை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்

 கட்டுமான பணிகள் தாமதமானால் இழப்பீடு கிடைப்பதை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்

  ஒவ்வொரு கட்டுமான நிறுவனமும் வீடு கட்டும் பணிகளை வேண்டுமென்றே கிடப்பில் போட நினைப்பது இல்லை.  சந்தர்ப்ப, சூழல் காரணமாக பல சில இடங்களில் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்படுகின்றன.  கட்டுமானத் திட்டங்கள் அவற்றின் இயல்பிலேயே பல காரணிகள் மற்றும் சூழ்நிலைகளைச் சார்ந்துள்ளன,  இவை இரண்டுமே எதிர்பார்க்கக்கூடியவை மற்றும் எதிர்பாராதவை.  கட்டுமானத் திட்டங்களை முடிப்பதில் தாமதங்கள் நம் நாட்டில் இயல்பானவை.  கட்டுமானத் தகராறுகளில் பெரும்பாலானவை கட்டுமானத் திட்டங்களில் ஏற்படும் தாமதங்களோடு தொடர்புடையவை.
                 இவ்வாறு கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டால் அதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது உரிமையாளர் தான்.  சேமிப்பு, வங்கிக்கடன் என திரட்டிய பணத்தை முதலீடு செய்த நிலையில், கட்டுமான பணிகள் பாதியில் முடங்கினால், உரிமையாளர் கடுமையான நெருக்கடிக்கு ஆளாவார்.
                  இந்த சூழலில் உரிமையாளர், கட்டுமான நிறுவனம் இடையே பிரச்னைகள் ஏற்படுகின்றன.  எனவே, இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க  கட்டுமான ஒப்பந்தம் தயாரிக்கும் நிலையிலேயே விழிப்புடன் இருக்க வேண்டும்.
                 ஒப்பந்தத்தில் இடத்தின் அளவு, வீடு கட்டி முடிக்கப்படும் காலம், வீட்டுக்கான மதிப்பு, வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிவறை, குளியலறை எப்படி அமைக்கப்படும் உள்படப் பல்வேறு விஷயங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெறும்.
                  பொதுவாக கட்டுமான ஒப்பந்தம் போடும் நிலையில் தாமதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து பலரும் கவலைப்படுவதில்லை.  தாமதம் காரணமாக பணிகள் முடங்கும் போது தான் ஒப்பந்த நிலையில் தவறு செய்துவிட்டோமே என்று வருத்தப்படுகின்றனர்.
                   கட்டுமான ஒப்பந்தம் கையெழுத்திடும் முன், அதில் கட்டுமான பணிக்கான கால அட்டவணையை குறிப்பிட வேண்டும்.  பணிகள் தாமதமானால், இதற்கான நிவாரணம் என்ன என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
                  பொதுவாக, சதுர அடிக்கு ஐந்து அல்லது, 10 ரூபாய் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாதத்துக்குமான இழப்பீடு கணக்கிடப்படும்.  இதில் ஒப்பந்தத்தில் சதுர அடிக்கு, 10  ரூபாய் என்று குறிப்பிடப்படும் நிலையில், கட்டுமான நிறுவனம், சதுர அடிக்கு, 5 ரூபாய் தான் இழப்பீடாக வழங்க முடியும் என்று கூறலாம்.
                   இது போன்ற நிகழ்வுகள் உரிமையாளரின் பொறுமையை சோதிப்பதாக அமைந்துவிடும்.  இத்தகைய நிகழ்வுகளில் உரிமையாளர்கள் பிரச்னைக்கு நிற்காமல் அது குறித்து ரியல் எஸ்டேட் ஆணையம், நீதிமன்றத்தை அணுகு வேண்டும்.
                   பல இடங்களில் கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்து கொடுக்கிறோம் என்று கூறி, சதுர அடிக்கு, 20 ரூபாய் தர எளிதில் ஒப்புக்கொள்கின்றனர்.  ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் நடக்கும்போது அவர் வேறு நிலைப்பாட்டை எடுப்பார்.
                    பிரச்னை ஆனால், என்னால் இவ்வளவு தான் தர முடியும் என்று வம்புக்கு நிற்பார்கள்.  அப்போது வேறு வழியின்றி அவர்கள் கொடுக்கும் இழப்பீட்டை பெறும் நிலைக்கு உரிமையாளர் தள்ளப்படுகிறார் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள்.

சொந்த வீடு வாங்க காலத்துக்கு ஏற்ப மாறும் எதிர்பார்ப்புகள்!

 சொந்த வீடு வாங்க காலத்துக்கு ஏற்ப மாறும் எதிர்பார்ப்புகள்!

சமுதாய அந்தஸ்து, பாதுகாப்பான தங்குமிடம் என்பது போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.  தங்களுக்கான வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன.


      இது தற்போதைய காலத்திலும் அப்படியே தொடர்கிறது என்றாலும், இதில் வீடு தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளில் மாற்றங்கள் வந்துள்ளன.  ஒரு காலத்தில் பாதுகாப்பாக தங்குவதற்கு ஒரு வீடு கிடைத்தால் போதும் என்று இருந்த மக்கள், தற்போது நவீன யுகத்துக்கு ஏற்ற வசதிகளை எதிர்பார்க்கின்றனர்.


      இதன் அடிப்படையில் தான் வீடு வாங்கும் எண்ணத்தை செயல் படுத்த மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  தனியாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் அல்லது, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கி குடியேற வேண்டும் என்ற நிலை தான் தற்போது உள்ளது.


      இதில் பாதுகாப்பான உறைவிடம் என்பதுடன் மற்றவர்கள் நம் வீடு குறித்து அதன் அடிப்படையில் நம் வாழ்க்கை நிலையை உயர்வாக நினைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.  இதற்காக வீடுகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் தான் செலவுகளை அதிகரிக்கின்றன.


     சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது உங்களது அத்தியாவசிய தேவை என்றாலும் அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.  நீங்கள் வாங்கும் அல்லது கட்டும் சொந்த வீடு, உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பயன்படுத்த ஏற்ற வகையில், பாதுகாப்பு உணர்வை அளிப்பதாக அமைய வேண்டும்.


      அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நமது அந்தஸ்து உயர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை.  அதே நேரம் இந்த நினைப்பை செயல்படுத்துவதில் தேவையில்லாத வகையில் கூடுதல் செலவுகளை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

      

நீங்கள் வாங்கும் வீடு சட்ட விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளதா, நிலம், கட்டட வரைபடம் தொடர்பான அரசு அங்கீகாரம், ஒப்புதல் முறையாக பெறப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.  அந்த வீட்டை யாரிடம் இருந்து எந்த அடிப்படையில் வாங்குகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


      கட்டடம் முறையாக பயன்படுத்த தகுதியான நிலையில் இருப்பதை உறுதி செய்யாமல், அதை வாங்குவதில் இறுதி முடிவு எடுக்காதீர்கள்.  ஒருமுறை அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டால் அதை எளிதில் சரி செய்ய முடியாது என்பதை கவனத்தில் வைத்து, இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள். 


Friday, October 20, 2023

வீடு கட்ட தனி நபர் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை!

  வீடு கட்ட தனி நபர் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை!
கட்டடம் கட்டும் போது நமக்கு பல கனவுகள் இருக்கும்.  அத்தனை கனவுகளையும் நனவாக்கும் தகுந்த திட்டமிடலும், சரியான ஒப்பந்ததாரரும் அமைய வேண்டும்.
          உங்களுக்கான கனவு இல்லத்தை கட்டித்தர யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
          பெரிய நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் முந்தைய திட்டங்களை ஆய்வு செய்வதே திருப்தியளிக்கும்.  ஆனால், தனி நபர் ஒப்பந்ததாரரை தேர்வு செய்வதில் அவரது முந்தைய திட்டங்கள் மட்டுமே போதுமானதல்ல.
           இதில், ஒப்பந்ததாரர்களாக செயல்படும் தனி நபர்களை நம்பி வேலையை ஒப்படைக்கலாமா என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.  கட்டுமானத் துறையை பொறுத்தவரை நிறுவனத்தின் பெயரை முன்னிலைப்படுத்தி பலரும் செயல்படுகின்றனர்.
           வணிக ரீதியில் இத்தகைய நிறுவனங்கள் பல்வேறு விஷயங்களில் பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றன.
           ஆனால், நிறுவன பெயர் இன்றி தனி நபர்கள் பெயரில் வீடு கட்டும் வேலையை ஒப்படைப்பதில் பலருக்கும் கசப்பான அனுபவங்கள் உள்ளன.
            எனினும், பல இடங்களில் பெரிய நிறுவனம் என்று இல்லாமல் தனி நபர்களாக வீடு கட்டுபவர்கள் சிவில் பொறியாளர்களாக இருந்தால் பரவாயில்லை.  இத்தகைய நபர்கள் தொழில் நுட்ப ரீதியாக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு கட்டுமான பணிகளை முடிப்பர்.  அவரின் முந்தைய கட்டுமானப் பணி எத்தனை லட்சம் வரை செய்திருக்கிறார்.
            நம் பணியின் பட்ஜெட் எவ்வளவு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
             தற்போது, பொது கட்டட விதிகள் போன்றவை நடைமுறைக்கு வந்துள்ளதால், அவர்கள் முறையாக பதிவு செய்து உரிமம் பெற்றுள்ளனர் என்று பார்க்க வேண்டும்.  உரிமம் பெறாத நபர்களிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைப்பதில் ஏற்படும் இழப்புகளுக்கு நிவாரணம் பெற முடியாது. 
            ஆனால்,  பொறியாளராக இல்லாமல், கட்டுமான திட்டங்களை செயல்படுத்த வரும் தனி நபர்கள் விஷயத்தில் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.  அவர்கள் பதிவு செய்த நிறுவனமாக, உதவியாளர்கள், வரைபட நிபுணர்கள் கொண்ட ஒரு அலுவலகமாக இருத்தல் அவசியம்.  அப்படி இருந்தால் தான் ஒரு வரையறைக்குள் கட்டுப்பட்டு நம் வேலையை கவனித்து செய்வர்.
            உள்ளூர் அரசியல் செல்வாக்கை மட்டுமே அடையாளமாக வைத்து கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவோரிடம் கவனமாக இருக்க வேண்டும்.  இத்தகைய நபர்கள் குறிப்பிட்டபடி வேலையை முடித்து தருவரா என்பதற்கு யாரும் உறுதி அளிக்க முடியாது.
        
             பாதியில் திட்டம் நிறுத்தப்பட்டால் இவர்கள் மீது அரசு அமைப்புகளில் புகார் அளிக்கவும் முடியாது.
             அப்படியே புகார் அளித்தால், அடியாட்களை வைத்து மிரட்டுவது, தாக்குவது போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
             இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க யாரிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைப்பது என்பதில் மிக கவனமாக எடுக்க  வேண்டும்.
              இத்துடன், உங்களுக்கான வீடு கட்டும் ஒப்பந்ததாரர், அதே பகுதியை சேர்ந்தவராக இருப்பது நல்லது.  உள்ளூர் நிறுவனம் தெரியாத நபர்களிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள். 

Monday, October 16, 2023

கடன் நிலுவையில் இருக்கும் சொத்தை பாகப்பிரிவினை செய்வதில் ஏற்படும் சிக்கல்கள்!

 கடன் நிலுவையில் இருக்கும் சொத்தை பாகப்பிரிவினை செய்வதில் ஏற்படும் சிக்கல்கள்!

ஒருவர் தான் சுயமாக சம்பாதித்த சொத்தை தன் காலத்துக்கு பின் யார் அனுபவிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உரிமை உண்டு.  அதே நேரம் அவர் உயில் எதுவும் எழுதாமல் இறந்துவிட்டால், வாரிசுகள் தங்களுக்குள் பாகப் பிரிவினை செய்துக்கொள்ளலாம்.

        சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இது இருந்து வருகிறது.  ஆனால், இந்த நடைமுறையை சில இடங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
        குறிப்பாக, வங்கியில் கடன் பெற்று ஒரு சொத்தை தந்தை வாங்கியிருப்பார்.  வங்கியில் கடனுக்கான தவணையை அவர் செலுத்தி வரும் நிலையில் அந்த சொத்தை வாரிசுகள் பெயரில் செட்டில்மென்ட் அல்லது உயில் வாயிலாக கொடுக்க நினைக்கலாம்.
        இத்தகைய சூழலில், கடன் கொடுத்த வங்கியின் ஒப்புதல் அத்தியாவசியமாகிறது.  இன்றைய சூழலில், வீட்டுக்கடன் வாங்கிய வங்கிகள் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கின்றன.
         கடன் நிலுவையில் இருக்கும் சொத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் பெயருக்கு மாற்றுவதால், இதுவரை தவணை செலுத்தி வந்தவர் அதிலிருந்து விடுபடுவார்.  அதே நேரம், சொத்து பெறும்  வாரிசுகளில் யார் மீதியுள்ள தவணைகளை செலுத்துவார்கள் என்பதை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
         சிக்கல் இன்றி இந்த நடைமுறையை நிறைவேற்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தாலும், வங்கிகள் இது விஷயத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க தயங்குகின்றன.  சொத்து பெறும் வாரிசுகள் கடன் தவணையை செலுத்தும் நிலையில் இருப்பதை வங்கி உறுதி செய்ய வேண்டும்.
         இதற்கு தகுதியான நிலையில் வாரிசுகள் இல்லை என்றால், அது வங்கிகளுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும்.  சில சமயங்களில் கடன் வாங்கியவர் இறந்தால், அந்த சொத்து வாரிசுகளை தான் சேரும்.
          
        அப்போதும், நிலுவை தவணைகளை வசூலிப்பதில் வங்கிகளுக்கு சிக்கல் ஏற்படும்.  இத்தகைய சூழலில், வாரிசுகளின் கடன் பெறும் தகுதியை பார்க்காமல் வங்கிகள் அவர்களிடம் வசூலில் இறங்கும்.  இறந்த பின் வாரிசுகள் பெயருக்கு சொத்து செல்லும் போது நிலுவையை வசூலிக்க ஒத்துவரும் வங்கிகள், உயிருடன் இருக்கும் உரிமையாளர் விஷயத்தில் வேண்டுமென்றே பிடிவாத போக்குடன் செயல்படுகின்றன.
        வங்கிகள் இது விஷயத்தில் வெளிப்படையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்கின்றனர் சொத்து மதிப்பீட்டாளர்கள்.

When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...