வீட்டு உரிமையாளர் சங்கங்களின் பதிவு தொடர்பான விழிப்புணர்வு தேவை!
தமிழகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளின் நிர்வாகம், வீட்டு உரிமையாளர்கள் சங்கங்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சங்கங்கள், 1975 தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கம், குடியிருப்போர் நல சங்கம், அடுக்குமாடி
வீட்டு உரிமையாளர் சங்கம், நகர் நல சங்கம் என,
எந்த சங்கமாக இருந்தாலும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தில், பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த சட்ட விதிகளின்படியே, செயல்பட வேண்டும். இந்த சங்கங்களை, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு, பதிவு செய்ய, நோக்க குறிப்புரை, துணை விதிகள், உறுப்பினர்கள் பட்டியல், நிர்வாகிகள் பட்டியல் குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும். இதில்,
பதிவாளர் திருப்தி அடையும் நிலையில், சங்கம் பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் ஒதுக்கப்படும்.
நிரந்தர சங்கம் உருவான பின்பே, அனைத்து வீட்டுக்காரர்களும் இணைந்து, சங்கப் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்ய முடியும். அதன்பின்,
குடியிருப்புச் சங்கத்தின் விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தனி
நபர் விருப்பத்திற்கேற்பவோ, சங்க பொறுப்பாளர்கள் விருப்பத்திற்கு ஏற்பவோ, விதி முறைகளைக் கண்டிப்பாக உருவாக்க கூடாது.
அனைத்து வீட்டுக்காரர்களின் கருத்துகளையும் அறிந்து, அதன்படி, விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எக்காரணத்தைக்
கொண்டும், வாடகைக்கு குடியிருபவர்களை, சங்க பொறுப்புகளில் நியமிக்க முடியாது.
இத்துடன், அனைத்து பணிகளும் முடிந்து விட்டதாக நினைத்து விடாதீர். ஒவ்வொரு
நிதி ஆண்டு முடிவிலும், பொதுக்குழு கூட்டம் நடத்தி, வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும்.
இவ்வாறு ஒப்புதல் பெற்ற பின், பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் அடங்கிய குறிப்பேட்டின் பிரதி, உறுப்பினர்கள் சேர்க்கை, நீக்க விபரங்கள், வரவு செலவு கணக்கு அறிக்கை ஆகியவற்றை பதிவாளரிடம் தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு
நிதி ஆண்டிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சங்கத்தின்
செயல்பாடுகள் குறித்து, நிர்வாகிகள் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கிடைக்கும் வகையில், எழுத்துப் பூர்வ அறிக்கை அளிக்க வேண்டும். இதில்,
பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இதில், பதிவு சட்ட விதி மீறல்கள் இல்லாத நிலையில், கணக்குகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும். இத்தகைய
ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, சங்க பதிவு புதுபிக்கப்படும்.
இவ்வாறு,
கோர்வைக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கு கட்டணம் செலுத்தியதற்காக ரசீது வழங்கப்படும். இதன்
பின், கோர்வை முடிந்ததாக சம்பந்தப் பட்ட ஆவணங்களில் சான்று அளிக்கப்படும்.
இந்த சான்று இருந்தால் மட்டுமே சங்கம் முறையாக தொடர்ந்து செயல்பட முடியும். சில
இடங்களில் பதிவு காலாவதியான நிலையில் புதுப்பிக்க ஆவணங்கள் தாக்கல் செய்வர். இதற்கு
கட்டணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும்.
இவ்வாறு ரசீது வழங்கப்பட்டதாலேயே புதுப்பித்தல் முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது.
கோர்வைக்கு தாக்கல் செய்யப்பட்டது ஒரு நிலை, ஆய்வு முடிந்து சான்று அளிக்கப்பட்டால் மட்டுமே கோர்வை முடிந்ததாக எடுத்துக் கொள்ள முடியும்.
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படாத நிலையில், பதிவுத் துறை சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பும். இதற்கு
உரிய விளக்கம் கிடைக்காத நிலையில், சங்க பதிவு ரத்து செய்யப்படும்.