காலியாக உள்ள வீட்டுமனைகளுக்கு சொத்து வரி விதிக்கப்படுமா?
நமது நாட்டில் நில வரி என்பது வருவாய் துறை சார்ந்த விஷயமாக இருந்து வருகிறது. இதில்
விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்காக நிலம் பயன்படுத்தப்பட்டால் அதில் கிடைக்கும் லாபம் அடிப்படையில் வரி விதிப்பு இருக்கும்.
ஆனால், நிலம் வீட்டு மனையாக மாற்றப்பட்டு, அதில் வீடுகள் கட்டப்படும் நிலையில், அப்பகுதியின் அடிப்படை வசதி மேம்பாட்டுக்காக உள்ளாட்சி அமைப்புகள் வரி விதிக்கும். இதற்காக நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
#propertytax #vacantplot #investment
இவ்வாறு சொத்து வரி விதிப்பதற்கு சட்ட ரீதியாக வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும்,
சில சமயங்களில் சொத்து வரி சார்ந்த சிக்கல்கள் எழுகின்றன.
தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி, கட்டடம் கட்டப்பட்டு இருந்தால் மட்டுமே சொத்து வரி விதிக்க முடியும். ஆனால்,
கூரை வீடுகளுக்கு சொத்து வரி விதிக்க முடியாது.
இதில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளவர்கள், நிலங்களை முறையாக மதிப்பீடு செய்து வரியை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால்,
பல இடங்களில் நிலங்களை நேரில் ஆய்வு செய்யாமல் சொத்து வரி நிர்ணயம் நடப்பதாக கூறப்படுகிறது.
இதனால், காலியாக உள்ள மனைகளுக்கு சொத்து வரி விதிக்கப்படுகிறது. இவ்வாறு
வரி விதிப்பு குறித்து தகவல் வரும்போது உரிமையாளர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இது குறித்து நேரில் சென்று விசாரித்தால் உள்ளாட்சி அமைப்புகளில் முறையான பதில் கிடைப்பதில்லை. இதனால்,
எதிர்காலத்தில் வீடு கட்டுவதற்காக மனை வாங்கி வைத்தவர்கள் கடுமையான அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.
காலியாக உள்ள மனைக்கும் சேர்த்து தான் அந்தந்த பகுதிகளில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படி
இருக்கும்போது, காலியாக உள்ள மனைகளின் உரிமையாளர்களுக்கு வரி விதிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என உள்ளாட்சி அமைப்புகள்
தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.
இதில், நகர்ப்புற பகுதிகளில் இத்தகைய நிலங்களுக்கு காலி மனை வரி விதிக்க தனியான வழிமுறை உள்ளது. அதை
கடைபிடிக்க உள்ளாட்சி அமைப்புகள் முன் வர வேண்டும்.
அதைவிடுத்து விதிகளை மீறி சொத்து வரி விதிப்பதால் சட்ட சிக்கல் தான் ஏற்படுகிறது. இது
விஷயத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகளுக்கு அரசு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
நன்றி : தினமலர் கனவு இல்லம்