Saturday, July 27, 2024

அதி விரைவு முறையில் வீடுகள் கட்ட உதவும் புதிய தொழில்நுட்பங்கள்!

 அதி விரைவு முறையில் வீடுகள் கட்ட உதவும் புதிய தொழில்நுட்பங்கள்!

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று விரும்புவோர் அது தொடர்பான திட்டமிடலில் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொதுவாக சொந்த வீடு என்றால் அதை எப்போது, எப்படி, எங்கு கட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவோர் அதற்கான கால அட்டவணை விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர்.

வீட்டுக்கான கட்டுமான பணிகளை குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிக்க வேண்டும் என்பதில் மக்கள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். சாதாரணமாக ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்றால் அதன் அளவை பொறுத்து அதற்கான கால அவகாசம் முடிவு செய்யப்படும்.

இதில் கான்கிரீட் முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு கட்டத்திலும் நீராற்றுவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்.

இயல்பு நிலையில் கான்கிரீட் போட்ட பின், அதில் இறுக்கம் ஏற்படவும் உட்புறத்தில் உறுதியான சூழல் ஏற்படவும், 20 நாட்கள் வரை கால அவகாசம் தேவைப்படும்.

துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றுக்கான பணிகளில் ஒவ்வொரு நிலையிலும், 20 நாட்கள் வரை கால அவகாசம் விடுவதால் அதிக நாட்கள் ஆவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
நீராற்றும் விஷயத்தில் சமரசம் இருக்கக் கூடாது என்பதால், இதில் மக்கள் அலட்சியம் காட்டுவதில்லை. இதற்கு தீர்வாக, சூப்பர் பாஸ்ட் எனப்படும் அதிவிரைவு முறையில் கட்டுமான பணிகளை முடிக்க சில வழிமுறைகள் வந்துள்ளன. இதன்படி, ஒரு கட்டடத்தில் துாண்கள், பீம்கள், சுவர்கள் போன்றவை தனித்தனி பாகங்களாக தயாரிக்கப்பட்டு, கட்டுமான இடத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இதில், துாண்கள், பீம்கள், தளம், சுவர்கள் ஆகியவை ஒரே சமயத்தில் தயாரிக்கப்படும் போது, தனித்தனியாக விட வேண்டிய, 20 நாட்கள் என்பது தேவைப்படாது. அதுவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆலைகளில் இந்த பாகங்கள் தயாரிக்கப்படும் போது, விரைவில் நீராற்றும் பணிகள் முடிந்துவிடும்.

இவற்றை கட்டுமான இடத்துக்கு லாரிகள் வாயிலாக கொண்டு சென்று வரிசை முறைப்படி ஒன்றுடன் ஒன்றாக இணைக்க வேண்டும். இப்பணிகள் சில நாட்களில் முடிந்துவிடும் என்பதால், ஒரு வீட்டை, அதிகபட்சம் 30 அல்லது, 35 நாட்களுக்குள் கட்டி முடித்துவிடலாம்.

இவ்வாறு ஆலைகள் வாயிலாக கட்டடத்தின் பாகங்கள் தயாரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் நிலையில் வீடு உறுதியாக இருக்குமா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படுகிறது.  கட்டடத்தின் பாகங்கள் மிக துல்லியமாக கணினி வாயிலாக கணக்கிடப்பட்டு, நவீன இயந்திரங்கள் வாயிலாக தயாரிக்கப்படுகின்றன. 
இதில் நீர்க்கசிவு, விரிசல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் கட்டுமானத் துறை பொறியாளர்கள் கூறுகின்றனர்.

காம்பவுண்ட் சுவரில் விரிசலை தவிர்க்க லிண்டல் பீம் அமைக்கலாம்!

 காம்பவுண்ட் சுவரில் விரிசலை தவிர்க்க லிண்டல் பீம் அமைக்கலாம்!


புதிதாக வீடு கட்டும்போது, பிரதான கட்டுமானப் பணிகளில் தான் விரிசல் போன்ற பிரச்னைகள் வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறோம். இதற்கு அப்பால் காம்பவுண்ட் சுவர் போன்ற கட்டுமானங்களில் விரிசல் தடுப்புக்காக உரிய கவனம் செலுத்துவதில்லை என புகார் கூறப்படுகிறது.

பொதுவாக, வீட்டுக்கான சுவர் என்பது கட்டடத்தின் சுமையை தாங்கும் ஒரு காரணி யாக இருப்பதால், அதற்கு மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால், காம்பவுண்ட் சுவர் என்பது, வெளியாரின் அத்துமீறிய நுழைவைத் தடுப்பதற்காக மட்டும்தான் என்ற எண்ணம் உள்ளது.

வீட்டுக்கான கட்டுமானப் பணியில், 10ல் ஒரு பங்கு என்ற அளவில்கூட காம்பவுண்ட் சுவர் கட்டுவதில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால், பெரும்பாலான காம்பவுண்ட் சுவர்களில் மிக விரைவில் விரிசல்கள் ஏற்பட்டு, அவை உடைந்து விழும் நிலை ஏற்படுகிறது.

உங்கள் நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டுவது என்றால் அதற்கான பொருள் எது என்பதை முதலில் தெளிவாக முடிவு செய்யுங்கள், செங்கல், ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் என எந்த வகை பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த முடிவை தெளிவாக எடுக்க வேண்டும்.

இதன்பின், காம்பவுண்ட் சுவரின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும், தரைக்கு கீழ் எவ்வளவு ஆழம் செல்ல வேண்டும் என்பதையும் முடிவு செய்யுங்கள். பொதுவாக, தரை மட்டத்தில் இருந்து, 2 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைத்து காம்பவுண்ட் சுவர்களை கட்டுவது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இதேபோன்று, தரைக்கு மேல் காம்பவுண்ட் சுவர் கட்டும்போது, கிடைமட்டத்தில், 10 அடிக்கு ஒரு இடத்தில் துாண் அமைக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். எந்த வகையில் காம்பவுண்ட் சுவர் அமைப்பதானாலும், அதில், 10 அடிக்கு ஒரு இடத்தில் பிரேக் விடுவது போன்று துாண்கள் அமைப்பது அவசியமாகிறது.

இத்துடன், தரைமட்டத்தில் இருந்து சுவர் எழுப்பும்போது, 7 அடி உயரத்தில் கட்டடத்துக்கு லிண்டல் பீம் அமைப்பது போன்று இங்கு, டம்மியாக லிண்டல் பீம் அமைப்பது அவசியம். இதன்மேல் எந்த வகையில் கூடுதல் சுமை ஏற்படப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

உண்மையில் சுவர்கள் கட்டும் போது, ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ஏற்படும் சுமை, அதன் மற்ற பகுதிகளில் முறையாக பரவ வேண்டும். இதில் குறைபாடு காணப்பட்டால் அந்த சுமையின் அழுத்தம் காரணமாக சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

உயரமாக காம்பவுண்ட் சுவருக்கு தான் இப்படி என்று அலட்சியம் காட்டாமல் சாதாரண முறையில் கட்டும்போதும், குறிப்பிட்ட உயரத்தில் டம்மி லிண்டல் பீம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.

Saturday, July 20, 2024

அடுக்குமாடி குடியிருப்பில் பதிவு செய்யாத சங்கத்தால் வரும் சிக்கல்கள் என்ன?

 

அடுக்குமாடி குடியிருப்பில் பதிவு செய்யாத சங்கத்தால் வரும் சிக்கல்கள் என்ன?
தமிழகத்தில் இன்றைய சூழலில் தனியாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று மக்கள் நினைத்தாலும் விலைவாசி இதற்கு ஒத்துழைப்பதில்லை. இதனால், பெரும்பாலான மக்கள் தங்களுக்கான கனவு இல்லத்தை அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் தேடுகின்றனர்.


இதுபோன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவது என்று முடிவு எடுத்து, அதற்கான தேடலில் இறங்கும் நிலையில் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் தெளிவு வேண்டும். குறிப்பாக, எத்தகைய அடுக்குமாடி குடியிருப்பு நமக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

தற்போதைய சூழலில், அதிக எண்ணிக்கையிலான வீடுகள் உள்ள கேட்டட் கம்யூனிட்டி முறையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய குடியிருப்புகள் வருகின்றன. இதுபோன்ற திட்டங்களில் வீடு வாங்கினால், வேலைக்கு செல்வதைத் தவிர்த்து பிற விஷயங்களுக்கு வெளியில் அலைய வேண்டாம்.

இதில் பராமரிப்பு பணியை நிர்வகிக்க, வீட்டு உரிமையாளர்கள் சங்கம் என்ற அமைப்பு இருக்கும். அதற்கான விதிமுறைகளின்படியே அனைத்து விஷயங்களும் அந்த வளாகத்தில் நடக்கும் என்பதை வீடு வாங்குவோர் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், அதிக எண்ணிக்கையில் வீடுகள் இல்லாத சிறிய அளவிலான குடியிருப்புகளில் சங்கம் ஏற்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தின்படி, 5க்கு மேற்பட்ட வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சங்கம் இருப்பது கட்டாயம்.

எனவே, சிறிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளிலும், அதன் அடிப்படை வசதிகளை பராமரிப்பதில் சங்கம் என்ற அமைப்பு இருப்பது அவசியம். பொதுவாக, 10க்கும் குறைவான வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் வருகின்றன.

பெயரளவுக்கு இவர்கள் ஒரு சங்கத்தை ஏற்படுத்தி, பொது விஷயங்களை அதன் வழியே நிர்வகித்தாலும், சட்டப்படி பதிவு செய்வதில்லை. ஒரு சங்கத்தை பதிவு செய்துவிட்டால், ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தி, வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விபரங்களை ஒவ்வொரு ஆண்டும், சங்கங்களின் பதிவாளரிடம் அளிக்க வேண்டியது அவசியம். இதில் சங்கத்தை பதிவு செய்வது, ஆண்டுதோறும் கணக்கு கொடுத்து புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கு ஏற்படும் செலவு, இதைத் தொடர்ந்து ஒரு நபர் பொறுப்பேற்று நடத்துவது என பல்வேறு பிரச்னைகள் வருகின்றன.

இந்நிலையில், 10க்கும் குறைவான வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சிக்கல் இன்றி அடிப்படை வசதி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாற்று வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தில் இதற்கான விதிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

மொட்டை மாடியில் கூடுதலாக விடப்பட்ட கம்பிகள் துரு பிடித்தால் என்ன செய்வது

 மொட்டை மாடியில் கூடுதலாக விடப்பட்ட கம்பிகள் துரு பிடித்தால் என்ன செய்வது 
பொதுவாக வீடு கட்டும் போது அதில் துாண்கள், பீம்கள், தளம் அமைப்பது சமீப ஆண்டுகளாக வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறு, துாண்கள், பீம்கள், தளம் அமைக்கும் போது ஆர்.சி.சி., என்ற முறையில் கம்பிகளை உள்ளீடாக வைத்து கான்கிரீட் கலவை கொட்டப்படுகிறது.

இவ்வகை கட்டுமானங்கள் அதிக சுமையை தாங்கி, நீண்டகாலம் உழைக்கும் என்ற நம்பிக்கை பரவலாக காணப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக கான்கிரீட் கட்டடங்கள், 70 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் என்று வல்லுனர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


ஆனால், எதார்த்த நிலையில் பெரும்பாலான கான்கிரீட் கட்டடங்கள், 40 ஆண்டுகளை கடப்பதே சவாலான விஷயமாக உள்ளது. கான்கிரீட் கட்டடங்களில் ஏற்படும் நீர்க்கசிவு, விரிசல் போன்ற பிரச்னைகள் அதன் உறுதியையும் ஆயுள் காலத்தையும் குலைப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் கட்டுமான பணியில் எந்த இடத்தில் எத்தகைய கம்பிகளை பயன்படுத்த வேண்டும், கான்கிரீட் தேர்வு விஷயங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதே நேரம், இது போன்ற கட்டுமானங்களில் எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை எழும்.


இதை கருத்தில் வைத்து துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஓரத்தில், கான்கிரீட் பூச்சு இல்லாமல் கம்பிகள் விடப்படுவது வழக்கம். இவ்வாறு கம்பிகளை விடும் நிலையில் அதில் பல்வேறு வகை பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.


எதிர்காலத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்ட வேண்டும் எனும் போது. துாண்கள், பீம்களின் நீட்சியாக கம்பிகள் விடுவது அவசியம் தான். குறிப்பாக மொட்டை மாடியில் துாண்களின் நீட்சியாக விடப்படும் கம்பிகள் மழை போன்ற பாதிப்புகளை நேரடியாக சந்திப்பதால் துரு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.


எனவே, மொட்டை மாடி போன்ற இடங்களில் எதிர்கால தேவைக்காக விடப்படும் கம்பிகளில் கான்கிரீட் கொட்டி டம்மியாக பூச்சு வேலை செய்ய வேண்டும். இது போன்ற கூடுதல் பாகங்களாக கம்பிகள் நீட்டிக்கொண்டு இருந்தால் அது அந்த இடத்தை பயன்படுத்துவோருக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய கம்பிகளை பாதுகாப்பு காரணங்கள் அடிப்படையில் மூடுவதற்கான சரியான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.


டம்மி துாண்கள் அமைப்பது மட்டுமல்லாது, துரு பிடிக்காமல் இருப்பதற்கான ரசாயனங்களை பூசுவது போன்ற விஷயங்களையும் கடைப்பிடிக்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


Thursday, July 11, 2024

வீட்டுக்கான கட்டுமான பணிகள் முடியும் நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வீட்டுக்கான கட்டுமான பணிகள் முடியும் நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!


பொதுவாக புதிய வீடு கட்டும் போது, அதற்கான பணிகளை எப்போது துவங்குவது என்பது குறித்து திட்டமிடுகிறோம். ஆனால், அதை திட்டமிட்டபடி முடிப்பது என்பதில் தான் பெரும்பாலான இடங்களில் பிரச்னைகள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.


கட்டுமான பணிகளை துவங்கும் முன் எந்தெந்த காலத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த, கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.


இதில் குறிப்பிடப்படும் கால அவகாசத்தில் ஒவ்வொரு பணிகளையும் முடிக்க வேண்டும் என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும்.


பெரும்பாலான இடங்களில், முறையாக திட்டமிடாத நிலையிலும், 3 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்தடுத்து புதிய திட்டங்களைசெயல்படுத்தும் நிலையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைந்து முடிக்க ஆர்வம் காட்டுவர்.


ஆனால், சில ஒப்பந்ததாரர்கள் தான் இதில் முறையான திட்டமிடல் இன்றி செயல்படும் போது, கட்டுமான பணிகள் முடிப்பது தாமதம் ஆகிறது. பொதுவாக, 3 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிப்பது என்றால் அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு பணியும் முடிகிறதா என்பதை ஒப்பந்ததாரர்கள் சரி பார்க்க வேண்டும்.


ஒப்பந்தத்தில், 3மாதத்தில் முடிக்கப்படும் என்று சொல்லப் பட்ட நிலையில் அதுவரை எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்து விட்டு, கடைசியில் பணிகள் முடியவில்லை என்று வருத்தப்படுவதிலும், கோபப்படுவதிலும் பயன் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே பணிகள் சரியான கால அவகாசத்தில் முடிக்கப்படுகிறதா என்று பார்ப்பது அவசியம்.


கட்டுமான பணிகள் முடியும் நிலையில், சுவர்களில் பூச்சு வேலை, வண்ணம் அடிப்பது, ஒயரிங், பிளம்பிங் போன்ற வேலைகள் உரிய வரிசை முறையில் முடிக்கப்பட வேண்டும். இதில், கதவுகள் அமைப்பது, உள் அலங்காரம் போன்ற பணிகளையும் முறையாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.


சில இடங்களில் மின்சார இணைப்பு பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படும் என்பதால், அதற்கு ஏற்ப ஒயரிங் பணிகள் தாமதப்படுத்தப்படுகிறது. இதனால், அடுத்தடுத்த பிற கட்டுமான வேலைகளும் தாமதமாவதற்கு நாமே காரணமாகிவிடும் நிலை ஏற்படுகிறது.


குறிப்பாக, மின்சார இணைப்புகள், குடிநீர் வடிகால் இணைப்புகள் பெறுவது தொடர்பான விஷயங்களில் உரிய கவனம் செலுத்த வேண்டும். பணிகள் முடியும் நிலையில், வரைபடத்துடன் ஒப்பிட்டு விதிமீறல் எதுவும் இல்லை என்பதை பொறியாளர் முன்னிலையில் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.


பணிகள் முடிப்பதில் உரிமையாளர்கள் அலட்சியம் காட்டும் போது தான் விதிமீறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன என்கின்றனர் நகரமைப்பு துறை வல்லுனர்கள்.

 

Tuesday, July 9, 2024

பிளம்பிங் இணைப்புகளை சரி பார்க்காமல் சுவரில் டைல் பதிக்கலாமா?

 

பிளம்பிங் இணைப்புகளை சரி பார்க்காமல் சுவரில் டைல் பதிக்கலாமா?


புதிதாக வீடு கட்டும் போது அதில் அடிப்படை கட்டுமானங்களில் கவனம் செலுத்தினால் போதும் என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், சுவர்கள் கட்டு வது, அதில் டைல்ஸ் எனப்படும் பதிகற்கள் அமைப்பது தொடர்பான பல்வேறு விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


சமீப காலமாக, வீடுகளில் தரைகள் மட்டுமல்லாது, சுவர்களிலும் பதிகற்கள் அமைக்கும் பழக்கம் பரவலாக அதிகரித்துள்ளது.இது போன்று சுவர்களில் பதிகற்கள் அமைத்துவிட்டால், எவ்வித ஈர கசிவும் ஏற்படாது என்று தான் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.


உண்மையில் தண்ணீர் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் சுவர்களில் பதிகற்கள் அமைப்பது நல்ல பலனை தரும் என்று நம்பப்படுகிறது.

ஒருவகையில் இது சரியான வழிமுறையாக தெரிந்தாலும், பயன்பாட்டு நிலையில் பதிகற்கள் அமைக்கப்பட்ட சுவர்களில் வேறு எந்த சீரமைப்பு வேலையும் செய்யமுடியாது.


குறிப்பாக, பெரும்பாலான வீடுகளில் குளியலறையில் பிளம்பிங் குழாய்கள் கன்சீல்டு முறையில் சுவருக்குள் பதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு சுவருக்குள் பிளம்பிங் குழாய்களை பதிக்கும் நிலையில் அதில், பிற்காலத்தில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டது தெரிந்தால், டைல்ஸ் பதித்த நிலையில் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும்.


எனவே, உங்கள் வீட்டு குளியலறை உள்ளிட்ட பகுதிகளில் பதிகற்கள் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டால், அங்கு பிளம்பிங் குழாய் அமைக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, பிளம்பிங் குழாய்களை தேர்வு செய்வதில் துவங்கி, வற்றை இணைப்பது வரையிலான நிலைகளில் கவனமாக செயல்பட வேண்டும்.




குறிப்பாக, பிளம்பிங் குழாய்களை அமைக்கும் போது அதில் உடைப்புகள் எதுவும் உள்ளதா என்பதை ஆரம்பத்திலேயே உரிய கருவிகளை பயன்படுத்தி சரி பார்க்க வேண்டும். ஒரு இடத்தில் தண்ணீர் வினியோகத்துக்காக பிளம்பிங் குழாய்கள் அமைக்கும் போது அதில் முழுமையாக தண்ணீர் பயன்படுத்தும் போது, எவ்வளவு அழுத்தம் ஏற்படும் என்பதை சரி பார்ப்பது அவசியம்.


இதற்கான சில நவீன கருவிகள் வந்துள்ள நிலையில், உரிய வல்லுனர்களை அணுகினால், இத்தகைய கருவிகள் வாடகை அடிப்படையில் கிடைக்கும். இக்கருவியை வரவழைத்து, பிளம்பிங் குழாய்களில் அதிகபட்ச அழுத்தம் கொடுத்து, உடைப்பு, கசிவு ஏற்படுகிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.


இத்தகைய ஆய்வு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தான் சுவரில் பதிகற்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் தற்போது, தரை போன்று சுவர்களுக்கும் ஸ்லாப் வடிவத்தில் பெரிய பதிகற்கள் வந்துள்ளதால், அதை பயன்படுத்துவது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.


சுவர்களில் பதிகற்கள் அமைத்துவிட்டால் அங்கு அடிக்கடி உடைத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

அனாதீன வகைப்பாட்டில் உள்ள நிலத்தை விலைக்கு வாங்கலாமா?

 

அனாதீன வகைப்பாட்டில் உள்ள நிலத்தை விலைக்கு வாங்கலாமா?



வீடு, மனை வாங்கும் போது நிலம் தொடர்பான பல்வேறு சட்ட ரீதியான விஷயங்களில் தெளிவாக செயல்பட வேண்டும். ஒரு வீடு, மனை வாங்க நீங்கள் முடிவு செய்யும் போது, அது அமைந்துள்ள நிலம் யாருடையது என்பது தொடர்பான ஆவண ஆதாரங்களை கேட்டு பெற வேண்டியது அவசியம்.


இதில், நிலம் தொடர்பான விற்பவரிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் பெற்றுவிட்டோம், அனைத்தும் அசல் என்பதுடன் அமைதியாகிவிடாதீர்கள். அந்த ஆவணங்களில் நிலம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை முழுமையாக ஆய்வு செய்யுங்கள்.


அந்த குறிப்பிட்ட நிலம் இதற்கு முன் என்னவாக இருந்தது, அரசின் நிர்வாகத்தில் அது என்ன வகைபாட்டில் இருந்து தற்போது பட்டா நிலமாக மாறிஉள்ளது என்பதை அறிவது அவசியம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலம் தொடர்பான வகைபாடுகளில் மக்களிடம் சில குழப்பங்கள் காணப்படுகின்றன.


எந்தெந்த வகைபாட்டில் உள்ள நிலங்களை பொது மக்கள் வாங்கலாம், விற்கலாம் என்பது குறித்த விஷயங்களை அறிவது அவசியம். நம் நாட்டில் ஒரு சில நபர்களிடம் ஒட்டுமொத்த நில உரிமையும் குவிய கூடாது என்பதற்காக, நில உச்சவரம்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது.


இதன்படி, தனி நபர்கள், குடும்பங்களுக்கு கூட்டாகவும், அமைப்புகள் பெயரில் எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மேற்பட்ட நிலம் இருந்தால் அது அரசுடைமையாகிவிடும் என்பதே இந்த சட்டத்தின் அடிப்படை சிறப்பு அம்சமாக உள்ளது.


இந்நிலையில், உச்சவரம்பு சட்டப்படி அரசுடைமையான நிலங்கள் வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது போன்ற நிலங்களில் யாரும் உரிமை கோரப்படாத நிலையில் உள்ள நிலங்கள் அனாதீனம் என்ற வகைபாட்டில் வைக்கப்பட்டு, வருவாய் துறையால் பராமரிக்கப்படும்.


இது போன்று அனாதீனம் என்று வகைபடுத்தி வைக்கப்பட்ட நிலங்களை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. சில ஆண்டுகள் முன்புவரை சொந்த வீடு இல்லாத மக்கள் இது போன்ற உரிமை கோரப்படாத நிலத்தில் குடிசைகள் போட்டு வசித்து வந்தனர்.


ஒரு கட்டத்தில் இவ்வாறு குடியேறியவர்கள் தங்கள் பெயருக்கு பட்டா வழங்கும்படியும் அரசிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. இதில் சில இடங்களில், பக்கத்தில் உள்ள முறையான பட்டா நிலத்துடன், அனாதீன நிலமும் சேர்ந்து விற்பனை ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.


இவ்வாறு நடந்த விற்பனையை சுட்டிக்காட்டி, விடுபட்ட நிலம் என தவறான தகவல் அளித்து, அனாதீன நிலங்களுக்கு சிலர் பட்டா பெறுகின்றனர். வருவாய் துறையில் கீழ்மட்டத்தில் சிலரின் தவறால் இது போன்ற பட்டாக்கள் வழங்கப்பட்டது தெரியவரும் நிலையில் மேலதிகாரிகள் இதை ரத்து செய்கின்றனர்.


இதில், சில இடங்களில் இது போன்ற தவறான பட்டாவை நம்பி நிலம் வாங்கும் கட்டுமான நிறுவனங்கள் அதில், குடியிருப்புகளை கட்டிவிடுகின்றன. இந்நிலையில் அனாதீன நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் வீடு, மனை வாங்கியவர்கள் தங்கள் பெயருக்கு பட்டா மாறுதலுக்கு செல்லும் போது தான் பிரச்னை தெரியவரும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

Monday, July 1, 2024

அடுக்குமாடி திட்டங்களில் வீட்டின் பகுதிகள் தொடர்பாக, அறிய வேண்டியவை!

அடுக்குமாடி திட்டங்களில் வீட்டின் பகுதிகள் தொடர்பாக, அறிய வேண்டியவை!

     அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இதில் வீட்டின் ஒவ்வொரு பகுதிக்குமான பெயர்கள் புதிதாக உள்ளன. தனி வீடுகள் எனில், நிலத்தின் பரப்பளவு, அதில் உள்ள வீட்டின் அளவு மட்டும் பார்க்கப்படுகிறது. ஆனால், அடுக்குமாடி திட்டங் களில் கூடுதலாக பல்வேறு விஷ யங்களை பார்க்க வேண்டியுள்ளது.
    
    அந்த குறிப்பிட்ட திட்டத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட் டுள்ளன. அதில் நாம் வாங்கும் வீட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத் தின் அளவு என்ன என்பதை மக் கள் பார்க்க துவங்கியுள்ளனர். இதில் அடுக்குமாடி திட்ட வீடு கள் விற்பனையின் போது குறிப் பிடப்படும் சில வார்த்தைகள் மக் களுக்கு புதிதாக உள்ளன.
    
    இந்த பெயர்களுக்கு உரிய பகுதிகள் எவை என்ப தில் குழப்பம் ஏற்படுகிறது. பில்டப் ஏரியா, கார்பெட் ஏரியா, பிளிந்த் ஏரியா போன்ற பெயர்கள் மட்டுமே பரவலாக புழக்கத்தில் உள்ளன. இதில் பில்டப் ஏரியா அடிப்படையில் தான் நிறுவனங்கள் விற்பனையை துவங்குகின்றன.  ரியல் எஸ்டேட் சட் டப்படி, கார்பெட் ஏரியா அடிப்படை யிலேயே வீட்டை விற்க வேண்டும்.  பல இடங்களில் வற்புறுத்தி கேட்டால் மட் டுமே கார்பெட் ஏரியா குறித்து தெரியவரும்.   

    வீட்டில் அறைகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் சர்குலோடிங் ஏரியா என்று குறிப்பிடப்படுகின்றன.  இதில் உட்புற சர்குலேட்டிங் ஏரியா, பொதுவான சர்குலேட்டிங் ஏரியா ஆகியவற்றுக்கு வேறுபாடு உண்டு. கட்டடத்தின் சில பகுதிகள் பேஸ்மென்ட் அல்லது செல்லார் என குறிப்பிடப்படுகிறது. கட் டடத்தின் அடித்தள பகுதியே மேஸ்மென்ட் அல்லது செல் லார் என அழைக்கப்படுகிறது. இது போன்று, கட்டடத்தின் கவர்டு ஏரியா, சஜ்ஜா எனப் படும் வெளிப்புற திறப்பு பகு திகள் எவை என்பதையும் வீடு வாங்குவோர் தெளிவாக புரிந்து கொள்வது அவசியம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.



Bigger the house, bigger the responsibilities

  Here is a look at the aftermath of upgrading to a larger space Regardless of the size of the current home, many homeowners often nurture t...