Saturday, August 24, 2024

2001 க்கு முன் வாங்கிய சொத்துக்கு இண்டெக்சேஷன் வாய்ப்பு உண்டா?

 2001 க்கு முன் வாங்கிய சொத்துக்கு இண்டெக்சேஷன் வாய்ப்பு உண்டா?
புதுடில்லி,:மத்திய பட்ஜெட் உரையின்போது, நீண்ட கால மூலதன ஆதாய வரி விகிதம் 10 சதவீதத்திலிருந்து, 12.50 சதவீதமாக உயர்த்தப்படுவதாகவும்; அதோடு இண்டெக்சேஷன் வாய்ப்பு நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், இது 2001க்குப் பிறகு வாங்கப்பட்ட வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


அப்படியானால், 2001க்கு முன்பு வாங்கப்பட்ட சொத்துக்கான மதிப்பை எப்படிக் கணக்கிடுவது; அதற்கு இண்டெக்சேஷன் வாய்ப்பு உண்டா, என்றெல்லாம் பொதுமக்கள் மத்தியில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.


இந்நிலையில், இந்த குழப்பங்களை தீர்க்கும் வகையில், தற்போது 2001க்கு முன்பு வாங்கிய சொத்துகளுக்கான நீண்டகால மூலதன ஆதாய வரி தொடர்பாக, ஒரு விளக்கத்தை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.


அதிகம்

கடந்த 2001ம் ஆண்டுக்கு முன் வாங்கிய நிலம், கட்டடம் அல்லது இரண்டுக்கும்,


இண்டெக்சேஷன் கணக்கீடு உண்டு. அன்றைய தேதியில், சொத்தின் வாங்கிய விலையோ அல்லது நியாயமான சந்தை மதிப்போ எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சந்தை மதிப்பு முத்திரைத் தாள் மதிப்புக்கு அதிகமாக இருக்கக் கூடாது.


உதாரணமாக, 1990ல் ஒரு சொத்து ஐந்து லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். 2001ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் அதன் முத்திரைத் தாள் மதிப்பு 10 லட்சம் ரூபாய், நியாய மான சந்தை மதிப்பு


12 லட்சம் ரூபாய்


என்றும் எடுத்துக் கொள்வோம்.


மதிப்பு

அந்த சொத்து ஜூலை 23, 2024க்குப் பிறகு ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் வைத்துக் கொள்வோம்.


2023 ஏப்ரல் 1 அன்று, அந்த சொத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் (முத்திரைத் தாள் அல்லது நியாயமான சந்தை விலையில் குறைவானதை எடுத்துக்கொள்வோம்)


இந்தச் சொத்தின் மதிப்பு 2023 -- 24 ஆண்டில் எவ்வளவு?


தற்போதைய மதிப்பு = 10 லட்சம் X 363/100 = 36.30 லட்சம் ரூபாய். இதுதான் இண்டெக்சேஷன் செய்த பின்னர் உள்ள மதிப்பு.


இதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரி எவ்வளவு?


ரூ.1 கோடி -- ரூ.36.30 லட்சம் = ரூ.63.70 லட்சம்.


இந்த 63.70 லட்சம் ரூபாய்க்கு, 20 சதவீதம் நீண்டகால மூலதன ஆதாய வரி கணக்கிட்டால், 12.74 லட்சம் ரூபாய் வரும். இதை அரசுக்கு செலுத்தவேண்டும்.


இவ்வாறு, வருமான வரித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. 


Thursday, August 22, 2024

பத்திரம், பட்டாவில் நில அளவுகளை சரி பார்ப்பதில் கவனிக்க

 

பத்திரம், பட்டாவில் நில அளவுகளை சரி பார்ப்பதில் கவனிக்க
புதிதாக வீடு, மனை வாங்கும் போது அது தொடர்பான ஆவணங்களை ஆராயும் நிலையில் அளவுகள் தொடர்பாக குழப்பம் ஏற்படுவது வழக்கம். நம் நாட்டில் வருவாய் துறையின் பட்டா, நில அளவை வரைபடம் ஆகியவற்றில் நிலத்தின் அளவு ஹெக்டெரில் தான் குறிப்பிடப்படுகிறது.

பெரும்பாலான பகுதிகளில் நிலத்தின் அளவுகள் ஹெக்டேர், ஏக்கர், ஏர்ஸ் என்ற அடிப்படையில் தான் குறிப்பிடப்படுவதை பார்த்து இருப்போம். ஆனால், பத்திரங்களில் நிலத்தின் அளவுகள் சதுர மீட்டர், சென்ட் என்ற அடிப்படையில் தான் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.

இதனால், என்ன பிரச்னை வந்துவிட போகிறது என்று தான் சொத்து வாங்கும் பெரும்பாலான மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். மேலும், சொத்தின் சர்வே எண், பட்டா எண் போன்ற விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று மேலோட்டமாக பார்த்து அமைதியாகிவிடுகின்றனர்.

உண்மையில், நீங்கள் ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்னால், அதன் பரப்பளவு என்ன என்பதை முழுமையாக தெளிவாக விசாரிக்க வேண்டும். விற்பனையாளர் சொல்லும் அளவுகள் அவர் பெயரில் உள்ள பத்திரத்தில் சரியாக இருக்கிறதா என்றும், அதே விபரங்கள் பட்டா உள்ளிட்ட ஆவணங்களிலும் இருக்கிறதா என்று பாருங்கள்.


மேலும், இது போன்ற ஆவணங்களை சரி பார்க்கும் போது, அதில் குறிப்பிடப்பட்ட அளவுகள் அடிப்படையில் ஏதாவது சந்தேகம் என்றால், நில அளவுகள் குறித்து அறிந்தவரை அணுகி உதவி பெறுவது நல்லது.


உதாரணமாக, ஒரு சொத்தை நீங்கள் வாங்கும் அதற்கான பத்திரத்தில் மனையின் அளவுகள் சதுர அடி, சதுர மீட்டரில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், பட்டா, எப்.எம்.பி., எனப்படும் நில அளவை வரைபடத்தில் ஏக்கர், ஏர்ஸ் முறையில் குறிப்பிடப்பட்டிருந்தால் எப்படி சரி பார்ப்பது என்ற கேள்வி எழும். இதில் சொத்து வாங்குவோர், அடிப்படையாக சில அளவு விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, 1 சென்ட் என்பது, 435.60 சதுர அடி, 1 ஏக்கர் என்பது, 100 சென்ட், 1 மீட்டர் என்பது, 3.33 அடி என்ற அடிப்படை அளவுகளை மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இத்துடன் நிற்காமல், இணையதளங்களில் நில அளவுகள் தொடர்பாக கன்வெர்டர்கள் இலவசமாக கிடைக்கின்றன.


இது போன்ற வசதிகளை பயன்படுத்தி, பத்திரம், பட்டாவில் குறிப்பிடப்பட்ட நில அளவுகள் ஒரே மாதிரி இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம். குறிப்பாக, நில அளவை வரைபடத்தை பார்க்கும் போது, அதில் மொத்த பரப்பளவு குறிப்பிடப்பட்டு இருந்தாலும், பக்கவாட்டு அளவுகளை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டியது அவசியம்.

பத்திரத்தில் உள்ள அளவுகள் சரியாகதான் இருக்கும் என்று அலட்சியமாக இருந்தால், சொத்து வாங்கிய பின் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்கின்றனர், இத்துறை வல்லுனர்கள்.

Monday, August 12, 2024

கட்டடத்தின் மொத்த சுமையை எப்போது எப்படி கணக்கிட வேண்டும்!

 கட்டடத்தின் மொத்த சுமையை எப்போது எப்படி கணக்கிட வேண்டும்!

ஒரு கட்டடம் கட்டப்படுகிறது என்றால், அதற்கான பணிகளை துவங்கும்முன், அதில் என்னென்ன வகையில் சுமை ஏற்படும் என்பதை கணக்கிட வேண்டும். கட்டடத்தின் மொத்த சுமை என்ன என்பதை துல்லியமாகக் கணக்கிட்டால்தான் அதைத் தாங்கும் வகையில் துாண்கள், பீம்களை வடிவமைக்க முடியும்.


பொதுவாக வீடு கட்டும்போது, நம்மிடம் உள்ள நிலத்தின் மொத்த பரப்பளவு என்ன அதில், எவ்வளவு பகுதியை பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கணக்கிடுகின்றனர். இதன் அடிப்படையில் புதிய கட்டடத்துக்கான அடிப்படை கணக்கீடு அறிய கட்டட அமைப்பியல் பொறியாளர்களை அணுக வேண்டும்.


ஆனால், பெரும்பாலான மக்கள், கட்டுமானப் பணிகளை சிவில் பொறியாளரிடம் ஒப்படைத்தால் போதும் அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று இருக்கின்றனர். நீங்கள் தேர்வு செய்த சிவில் பொறியாளர், முறையாக பதிவு செய்த கட்டட அமைப்பியல் பொறியாளரின் வழிகாட்டுதல்களை பெற்றாரா என்பது யாருக்கும் தெரியாது.


இத்தகைய சூழலில், பல இடங்களில் சிவில் பொறியாளர்கள், கட்டட அமைப்பியல் பொறியாளர்களை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். நேரடியாக கட்டட வடிவமைப்பாளர் ஒருவரை அணுகி புதிய கட்டடத்துக்கான வரைபடத்தை தயாரிப்பது வாடிக்கையாக உள்ளது.


இவ்வாறு, நேரடியாக கட்டடத்துக்கான வரைபடம் தயாரிக்கும்போது, அதில் ஏற்படும் மொத்த சுமை என்ன, அதை தாங்கும் வகையில் துாண்கள் உள்ளதா என்பதை, உறுதி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, புதிதாக வீடு கட்டுவோர், அதற்கான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும்போது, கட்டட அமைப்பியல் பொறியாளர் அறிக்கை பெறுவது, மண் பரிசோதனை அறிக்கை பெறுவது உள்ளிட்ட பணிகளில் கவனமாக இருக்க வேண்டும்.


குறிப்பாக ஒரு கட்டடத்தில் கட்டுமான பாகங்களால் எவ்வளவு சுமை ஏற்படும் என்பதை துல்லியமாகக் கணக்கிட்டு, அதை தாங்கும் வகையில் அஸ்திவார பணிகளை திட்டமிட வேண்டும். பீம்கள், மேல்தளம், அதற்கு மேல் கட்டப்படும் அமைப்புகள் அடிப்படையில் சுமை அளவு என்ன என்பதை கணக்கிட வேண்டும்.


பெரும்பாலான இடங்களில் தற்போது கட்டப்படும் தரைதள கட்டடத்தின் மொத்த எடை அடிப்படையில் மட்டுமே கட்டடத்துக்கான சுமையை கணக்கிடுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் கட்டப்படும் கூடுதல் அறைகள் காரணமாக ஏற்படும் சுமையை கட்டடத்தின் அஸ்திவாரம், துாண்கள் தாங்க முடியாத நிலை ஏற்படும்.


நீங்கள் கட்ட உத்தேசித்துள்ள கட்டடத்தின் மொத்த பரப்பளவு என்ன, எதிர்காலத்தில் கட்டப்பட உள்ள பகுதிகள் என்ன என்ற அடிப்படையில், அதில் ஏற்படும் சுமையை கணக்கிட வேண்டும். இத்துடன் பயன்பாடு அடிப்படையில் ஏற்படும் சுமையின் அளவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டட அமைப்பியல் பொறியாளர்கள்.


Thursday, August 1, 2024

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு பணிகளில் கவனிக்க வேண்டியது!

 அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு பணிகளில் கவனிக்க வேண்டியது!

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த வளாகங்களை பராமரிப்பது தொடர்பான பல்வேறு பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி வருகிறது.


இன்றைய சூழலில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டால் அதன் பராமரிப்பு பொறுப்பு அங்கு வீடு வாங்கிய உரிமையாளர்களின் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த சங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற குடியிருப்புகளில் சங்க நிர்வாகங்களுக்கு, பாதுகாவல் பணிகள் மிக முக்கிய பொறுப்பாக உள்ளது. கேட்டட் கம்யூனிட்டி என்ற அடிப்படையில் கட்டப்படும் அடுக்குமாடிகுடியிருப்பு வளாகங்களில் வெளியார் வருவது தொடர்பான விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.


இதற்கு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து பாதுகாவலர்களை நியமிப்பது அத்தியாவசிய பணியாக உள்ளது. 


செக்யூரிட்டி என்ற பெயரில் பாதுகாவலர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான பணிகள் சங்க நிர்வாகிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று மற்றவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது.


பாதுகாவல் பணி தொடர்பான தெரியவரும் விஷயங்களை நிர்வாகிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும். குறிப்பாக, உங்கள் வளாகத்துக்கு எத்தகைய நிறுவனம் வாயிலாக பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்பது உங்கள் பட்ஜெட்டை பொறுத்தது. 


இன்றைய சூழலில், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகமாக அமைக்கப்படுகின்றன. இதனால், எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று நினைத்து பாதுகாவலர்கள் நியமிப்பதில் செலவு குறைப்பில் மக்கள் ஈடுபடுகின்றனர்.


இதுபோன்ற அலட்சிய அணுகுமுறைகளால் குடியிருப்பு வளாக பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுகிறது. 


பாதுகாவலர்களை நியமிக்கும்போது அவர்களை அனுப்பும் நிறுவனங்கள் இப்பணிக்கான முறையாக உரிமம் பெற்றுள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியம். 


தனியார் பாதுகாவல் நிறுவனங்கள் நடத்த வேண்டும் என்றால் அதற்கென உள்ள விதிகளின்படி ஒரு நிறுவனம் இருப்பதை உறுதி செய்து காவல் துறை உரிமம் வழங்குகிறது.


இந்த உரிமம் முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட விஷயங்களை கவனித்து தான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 


உங்கள் குடியிருப்பு வளாகத்தில் நியமிக்கப்படும் பாதுகாவலர்கள், காவல்துறை வாயிலான நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். 


இதற்கான வரும் நபர்கள் குறித்த விபரங்களை உரிய முறையில் கவனிக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள். 


Saturday, July 27, 2024

அதி விரைவு முறையில் வீடுகள் கட்ட உதவும் புதிய தொழில்நுட்பங்கள்!

 அதி விரைவு முறையில் வீடுகள் கட்ட உதவும் புதிய தொழில்நுட்பங்கள்!

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று விரும்புவோர் அது தொடர்பான திட்டமிடலில் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொதுவாக சொந்த வீடு என்றால் அதை எப்போது, எப்படி, எங்கு கட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவோர் அதற்கான கால அட்டவணை விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர்.

வீட்டுக்கான கட்டுமான பணிகளை குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிக்க வேண்டும் என்பதில் மக்கள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். சாதாரணமாக ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்றால் அதன் அளவை பொறுத்து அதற்கான கால அவகாசம் முடிவு செய்யப்படும்.

இதில் கான்கிரீட் முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு கட்டத்திலும் நீராற்றுவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்.

இயல்பு நிலையில் கான்கிரீட் போட்ட பின், அதில் இறுக்கம் ஏற்படவும் உட்புறத்தில் உறுதியான சூழல் ஏற்படவும், 20 நாட்கள் வரை கால அவகாசம் தேவைப்படும்.

துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றுக்கான பணிகளில் ஒவ்வொரு நிலையிலும், 20 நாட்கள் வரை கால அவகாசம் விடுவதால் அதிக நாட்கள் ஆவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
நீராற்றும் விஷயத்தில் சமரசம் இருக்கக் கூடாது என்பதால், இதில் மக்கள் அலட்சியம் காட்டுவதில்லை. இதற்கு தீர்வாக, சூப்பர் பாஸ்ட் எனப்படும் அதிவிரைவு முறையில் கட்டுமான பணிகளை முடிக்க சில வழிமுறைகள் வந்துள்ளன. இதன்படி, ஒரு கட்டடத்தில் துாண்கள், பீம்கள், சுவர்கள் போன்றவை தனித்தனி பாகங்களாக தயாரிக்கப்பட்டு, கட்டுமான இடத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இதில், துாண்கள், பீம்கள், தளம், சுவர்கள் ஆகியவை ஒரே சமயத்தில் தயாரிக்கப்படும் போது, தனித்தனியாக விட வேண்டிய, 20 நாட்கள் என்பது தேவைப்படாது. அதுவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆலைகளில் இந்த பாகங்கள் தயாரிக்கப்படும் போது, விரைவில் நீராற்றும் பணிகள் முடிந்துவிடும்.

இவற்றை கட்டுமான இடத்துக்கு லாரிகள் வாயிலாக கொண்டு சென்று வரிசை முறைப்படி ஒன்றுடன் ஒன்றாக இணைக்க வேண்டும். இப்பணிகள் சில நாட்களில் முடிந்துவிடும் என்பதால், ஒரு வீட்டை, அதிகபட்சம் 30 அல்லது, 35 நாட்களுக்குள் கட்டி முடித்துவிடலாம்.

இவ்வாறு ஆலைகள் வாயிலாக கட்டடத்தின் பாகங்கள் தயாரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் நிலையில் வீடு உறுதியாக இருக்குமா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படுகிறது.  கட்டடத்தின் பாகங்கள் மிக துல்லியமாக கணினி வாயிலாக கணக்கிடப்பட்டு, நவீன இயந்திரங்கள் வாயிலாக தயாரிக்கப்படுகின்றன. 
இதில் நீர்க்கசிவு, விரிசல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் கட்டுமானத் துறை பொறியாளர்கள் கூறுகின்றனர்.

காம்பவுண்ட் சுவரில் விரிசலை தவிர்க்க லிண்டல் பீம் அமைக்கலாம்!

 காம்பவுண்ட் சுவரில் விரிசலை தவிர்க்க லிண்டல் பீம் அமைக்கலாம்!


புதிதாக வீடு கட்டும்போது, பிரதான கட்டுமானப் பணிகளில் தான் விரிசல் போன்ற பிரச்னைகள் வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறோம். இதற்கு அப்பால் காம்பவுண்ட் சுவர் போன்ற கட்டுமானங்களில் விரிசல் தடுப்புக்காக உரிய கவனம் செலுத்துவதில்லை என புகார் கூறப்படுகிறது.

பொதுவாக, வீட்டுக்கான சுவர் என்பது கட்டடத்தின் சுமையை தாங்கும் ஒரு காரணி யாக இருப்பதால், அதற்கு மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால், காம்பவுண்ட் சுவர் என்பது, வெளியாரின் அத்துமீறிய நுழைவைத் தடுப்பதற்காக மட்டும்தான் என்ற எண்ணம் உள்ளது.

வீட்டுக்கான கட்டுமானப் பணியில், 10ல் ஒரு பங்கு என்ற அளவில்கூட காம்பவுண்ட் சுவர் கட்டுவதில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால், பெரும்பாலான காம்பவுண்ட் சுவர்களில் மிக விரைவில் விரிசல்கள் ஏற்பட்டு, அவை உடைந்து விழும் நிலை ஏற்படுகிறது.

உங்கள் நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டுவது என்றால் அதற்கான பொருள் எது என்பதை முதலில் தெளிவாக முடிவு செய்யுங்கள், செங்கல், ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் என எந்த வகை பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த முடிவை தெளிவாக எடுக்க வேண்டும்.

இதன்பின், காம்பவுண்ட் சுவரின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும், தரைக்கு கீழ் எவ்வளவு ஆழம் செல்ல வேண்டும் என்பதையும் முடிவு செய்யுங்கள். பொதுவாக, தரை மட்டத்தில் இருந்து, 2 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைத்து காம்பவுண்ட் சுவர்களை கட்டுவது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இதேபோன்று, தரைக்கு மேல் காம்பவுண்ட் சுவர் கட்டும்போது, கிடைமட்டத்தில், 10 அடிக்கு ஒரு இடத்தில் துாண் அமைக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். எந்த வகையில் காம்பவுண்ட் சுவர் அமைப்பதானாலும், அதில், 10 அடிக்கு ஒரு இடத்தில் பிரேக் விடுவது போன்று துாண்கள் அமைப்பது அவசியமாகிறது.

இத்துடன், தரைமட்டத்தில் இருந்து சுவர் எழுப்பும்போது, 7 அடி உயரத்தில் கட்டடத்துக்கு லிண்டல் பீம் அமைப்பது போன்று இங்கு, டம்மியாக லிண்டல் பீம் அமைப்பது அவசியம். இதன்மேல் எந்த வகையில் கூடுதல் சுமை ஏற்படப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

உண்மையில் சுவர்கள் கட்டும் போது, ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ஏற்படும் சுமை, அதன் மற்ற பகுதிகளில் முறையாக பரவ வேண்டும். இதில் குறைபாடு காணப்பட்டால் அந்த சுமையின் அழுத்தம் காரணமாக சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

உயரமாக காம்பவுண்ட் சுவருக்கு தான் இப்படி என்று அலட்சியம் காட்டாமல் சாதாரண முறையில் கட்டும்போதும், குறிப்பிட்ட உயரத்தில் டம்மி லிண்டல் பீம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.

Saturday, July 20, 2024

அடுக்குமாடி குடியிருப்பில் பதிவு செய்யாத சங்கத்தால் வரும் சிக்கல்கள் என்ன?

 

அடுக்குமாடி குடியிருப்பில் பதிவு செய்யாத சங்கத்தால் வரும் சிக்கல்கள் என்ன?
தமிழகத்தில் இன்றைய சூழலில் தனியாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று மக்கள் நினைத்தாலும் விலைவாசி இதற்கு ஒத்துழைப்பதில்லை. இதனால், பெரும்பாலான மக்கள் தங்களுக்கான கனவு இல்லத்தை அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் தேடுகின்றனர்.


இதுபோன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவது என்று முடிவு எடுத்து, அதற்கான தேடலில் இறங்கும் நிலையில் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் தெளிவு வேண்டும். குறிப்பாக, எத்தகைய அடுக்குமாடி குடியிருப்பு நமக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

தற்போதைய சூழலில், அதிக எண்ணிக்கையிலான வீடுகள் உள்ள கேட்டட் கம்யூனிட்டி முறையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய குடியிருப்புகள் வருகின்றன. இதுபோன்ற திட்டங்களில் வீடு வாங்கினால், வேலைக்கு செல்வதைத் தவிர்த்து பிற விஷயங்களுக்கு வெளியில் அலைய வேண்டாம்.

இதில் பராமரிப்பு பணியை நிர்வகிக்க, வீட்டு உரிமையாளர்கள் சங்கம் என்ற அமைப்பு இருக்கும். அதற்கான விதிமுறைகளின்படியே அனைத்து விஷயங்களும் அந்த வளாகத்தில் நடக்கும் என்பதை வீடு வாங்குவோர் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், அதிக எண்ணிக்கையில் வீடுகள் இல்லாத சிறிய அளவிலான குடியிருப்புகளில் சங்கம் ஏற்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தின்படி, 5க்கு மேற்பட்ட வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சங்கம் இருப்பது கட்டாயம்.

எனவே, சிறிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளிலும், அதன் அடிப்படை வசதிகளை பராமரிப்பதில் சங்கம் என்ற அமைப்பு இருப்பது அவசியம். பொதுவாக, 10க்கும் குறைவான வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் வருகின்றன.

பெயரளவுக்கு இவர்கள் ஒரு சங்கத்தை ஏற்படுத்தி, பொது விஷயங்களை அதன் வழியே நிர்வகித்தாலும், சட்டப்படி பதிவு செய்வதில்லை. ஒரு சங்கத்தை பதிவு செய்துவிட்டால், ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தி, வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விபரங்களை ஒவ்வொரு ஆண்டும், சங்கங்களின் பதிவாளரிடம் அளிக்க வேண்டியது அவசியம். இதில் சங்கத்தை பதிவு செய்வது, ஆண்டுதோறும் கணக்கு கொடுத்து புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கு ஏற்படும் செலவு, இதைத் தொடர்ந்து ஒரு நபர் பொறுப்பேற்று நடத்துவது என பல்வேறு பிரச்னைகள் வருகின்றன.

இந்நிலையில், 10க்கும் குறைவான வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சிக்கல் இன்றி அடிப்படை வசதி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாற்று வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தில் இதற்கான விதிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...