பெரும்பாலான பகுதிகளில் நிலத்தின் அளவுகள் ஹெக்டேர், ஏக்கர், ஏர்ஸ் என்ற அடிப்படையில் தான் குறிப்பிடப்படுவதை பார்த்து இருப்போம். ஆனால், பத்திரங்களில் நிலத்தின் அளவுகள் சதுர மீட்டர், சென்ட் என்ற அடிப்படையில் தான் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.
இதனால், என்ன பிரச்னை வந்துவிட போகிறது என்று தான் சொத்து வாங்கும் பெரும்பாலான மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். மேலும், சொத்தின் சர்வே எண், பட்டா எண் போன்ற விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று மேலோட்டமாக பார்த்து அமைதியாகிவிடுகின்றனர்.
உண்மையில், நீங்கள் ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்னால், அதன் பரப்பளவு என்ன என்பதை முழுமையாக தெளிவாக விசாரிக்க வேண்டும். விற்பனையாளர் சொல்லும் அளவுகள் அவர் பெயரில் உள்ள பத்திரத்தில் சரியாக இருக்கிறதா என்றும், அதே விபரங்கள் பட்டா உள்ளிட்ட ஆவணங்களிலும் இருக்கிறதா என்று பாருங்கள்.
மேலும், இது போன்ற ஆவணங்களை சரி பார்க்கும் போது, அதில் குறிப்பிடப்பட்ட அளவுகள் அடிப்படையில் ஏதாவது சந்தேகம் என்றால், நில அளவுகள் குறித்து அறிந்தவரை அணுகி உதவி பெறுவது நல்லது.
உதாரணமாக, ஒரு சொத்தை நீங்கள் வாங்கும் அதற்கான பத்திரத்தில் மனையின் அளவுகள் சதுர அடி, சதுர மீட்டரில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பட்டா, எப்.எம்.பி., எனப்படும் நில அளவை வரைபடத்தில் ஏக்கர், ஏர்ஸ் முறையில் குறிப்பிடப்பட்டிருந்தால் எப்படி சரி பார்ப்பது என்ற கேள்வி எழும். இதில் சொத்து வாங்குவோர், அடிப்படையாக சில அளவு விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, 1 சென்ட் என்பது, 435.60 சதுர அடி, 1 ஏக்கர் என்பது, 100 சென்ட், 1 மீட்டர் என்பது, 3.33 அடி என்ற அடிப்படை அளவுகளை மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இத்துடன் நிற்காமல், இணையதளங்களில் நில அளவுகள் தொடர்பாக கன்வெர்டர்கள் இலவசமாக கிடைக்கின்றன.
இது போன்ற வசதிகளை பயன்படுத்தி, பத்திரம், பட்டாவில் குறிப்பிடப்பட்ட நில அளவுகள் ஒரே மாதிரி இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம். குறிப்பாக, நில அளவை வரைபடத்தை பார்க்கும் போது, அதில் மொத்த பரப்பளவு குறிப்பிடப்பட்டு இருந்தாலும், பக்கவாட்டு அளவுகளை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டியது அவசியம்.
பத்திரத்தில் உள்ள அளவுகள் சரியாகதான் இருக்கும் என்று அலட்சியமாக இருந்தால், சொத்து வாங்கிய பின் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்கின்றனர், இத்துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment